www.rupeedesk.in

பொதுக் காப்பீட்டு நிறுவனம் Vs மருத்துவக் காப்பீட்டு நிறுவனம்..எது பெஸ்ட்?

பொதுக் காப்பீட்டு நிறுவனம் Vs மருத்துவக் காப்பீட்டு நிறுவனம்..எது பெஸ்ட்?



பொதுக் காப்பீட்டு நிறுவனம், மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் ஆகிய இரண்டுமே ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விநியோகம் செய்கின்றன. இந்த நிறுவனங்களின் பாலிசிகளில் க்ளெய்ம் விகிதம் எப்படி உள்ளது, எந்த நிறுவனத்தில் பாலிசி எடுப்பது சிறந்தாக இருக்கும் என ஃபண்ட்ஸ் இண்டியா நிறுவனத்தின் தலைமை நிதி ஆலோசகர் ஸ்ரீதரனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.



‘‘பொதுக் காப்பீட்டு நிறுவனங் கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுடன் தனிநபர் விபத்துக் காப்பீடு, வாகன இன்ஷூரன்ஸ் எனப் பல வகையான பாலிசிகளையும் விநியோகம் செய்கிறது. ஆனால், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங் கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை மட்டுமே விநியோகம் செய்யும்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதன் முக்கியக் காரணமே மருத்துவச் சிகிச்சை யின்போது ஆகும் செலவு தொகையை இன்ஷூரன்ஸ் பாலிசியிலிருந்து க்ளெய்ம் செய்துகொள்வதற்காகத்தான்.

அப்படி க்ளெய்ம் செய்யும்போது அதிகத் தொகை கிடைக்க வேண்டும் என்பதுதான் பாலிசி வைத்திருக்கும் அனைவரது ஆசையும். ஆனால், அது பல நேரங்களில் நடப்பதில்லை.

பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் விற்பனை செய்யப்படும் பாலிசிகள் மெடிக்ளெய்ம் பாலிசி ஆகும். இங்கு விநியோகம் செய்யப்படும் பாலிசிகளில் நெட்வொர்க் மருத்துவமனை களில் மட்டும்தான் கேஷ்லெஸ் வசதி இருக்கும்.

பிற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால், சிகிச்சை செலவுக்கு உண்டான பில்களை இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் சமர்ப்பித்த பிறகுதான் க்ளெய்ம் தொகையைப் பெற முடியும். இதில் க்ளெய்ம் தொகை குறைய வாய்ப்புள்ளது.

எதற்கெல்லாம் கவரேஜ் கிடைக்கும்?

பொதுக் காப்பீட்டு நிறுவனங் களின் பாலிசியில் மருத்துவமனை சார்ந்த செலவுகளுக்கு மட்டும்தான் க்ளெய்ம் கிடைக்கும். ஆனால், மருத்துவக் காப்பீடு நிறுவனங்களில், மருத்துவ மனையில் அனுமதிப்பதற்கு முன்பும், பின்பும் ஆகும் செலவு, ஆம்புலன்ஸ் செலவு, மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை எடுக்கும்போது ஏற்படும் சம்பள இழப்புக்கும் க்ளெய்ம் கிடைக்கும்.

மேலும், சில குறிப்பிட்ட நோய்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உதாரணமாக, தீவிர நோய் பாதிப்பு (critical illness cover) இருப்பவர்கள் வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெறலாம். தவிர, இந்தமாதிரியான நோய்களைக் கண்டறிவதற்காக ஸ்கேன் எடுத்தால் அந்தச் செலவையும் மருத்துவக் காப்பீட்டு பாலிசியில் க்ளெய்ம் செய்துகொள்ள முடியும்.

கவரேஜ் தொகை!

பொதுக் காப்பீட்டு நிறுவனங் களில் மெடிக்ளெய்ம் பாலிசியின் கவரேஜ் தொகை அதிகபட்சம் ரூ.5 லட்சமாக இருக்கும். அதுவே, மருத்துவக் காப்பீட்டு நிறுவனங் களில் அதிகபட்சமாக ரூ.60 லட்சம் வரை கவரேஜ் பெற முடியும்.

ரைடர் வசதி!

பொதுக் காப்பீட்டு நிறுவனங் களின் பாலிசிகளில் ரைடர் வசதி இருப்பதில்லை. ஆனால், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங் களின் பாலிசிகளில் ரைடர் வசதி உள்ளது. மேலும், தேவைக்கு ஏற்றவாறு ஸ்பெஷல் பாலிசிகளும் அதிகம் உள்ளன. அதாவது, மூத்த குடிமக்களுக்கான பாலிசி, சர்க்கரை நோயாளிகளுக்கான பாலிசி, புதிதாகத் திருமணம் செய்பவர்களுக்கான பாலிசி (wedding gift policy) போன்றவை.



க்ளெய்ம்!

மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் பாலிசி யில், அதிக அளவில் மருத்துவ மனைகளுடன் ஒப்பந்தம் போடுவதால், கேஷ்லெஸ் வசதி எளிதாகக் கிடைக்கிறது. மேலும், க்ளெய்ம் வழங்குவதற்குத் தனியாக டிபிஏ கிடையாது. இன்ஷூரன்ஸ் நிறுவனமே க்ளெய்ம்களை வழங்குவதால், க்ளெய்ம் வேகமாகக் கிடைக்கும்.

தவிர,  பாலிசிதாரர் க்ளெய்ம் செய்யும்போது ஏதாவது சிக்கல் இருந்தால், அதை நேரடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமே கேட்க முடியும்.  இதனால் பாலிசி தாரருக்கும், இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கும்.

கிரிட்டிக்கல் இல்னெஸ் பாலிசியில் க்ளெய்ம் ஒரேமுறையில் கிடைத்துவிடும். மேலும், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

ஆனால், பொதுக் காப்பீட்டு நிறுவனத்தில், மருத்துவமனை யில் தங்கி சிகிச்சை எடுத்தால் தான் க்ளெய்ம் கிடைக்கும்.

ஆக, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களில் எடுத்துக்கொள்வதே பெஸ்ட்” என்றார் அவர். சரிதானே!

படம்: இரா.யோகேஷ்வரன்.

இரா.ரூபாவதி

கேஷ்லெஸ் பாலிசியில் கூடுதல் க்ளெய்ம் தொகை!

கேஷ்லெஸ் வசதி உள்ள பாலிசியில் கூடுதல் க்ளெய்ம் தொகையும், ‘ரீஇம்பர்ஸ்மென்ட்’ பாலிசிகளில் குறைவான க்ளெய்ம் தொகையும் கிடைக்கிறது. ஏன் இந்த வித்தியாசம் என்று பலரும் கேட்கிறார்கள். இதுதொடர்பாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி விநியோகம் செய்பவர்களிடம் விசாரித்தோம்.

‘‘கேஷ்லெஸ் வசதியைப் பயன்படுத்திச் சிகிச்சை எடுக்கும்போது கூடுதல் க்ளெய்ம் கிடைக்க வாய்ப்புள்ளது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கும்போதே எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும், கிடைக்காது என்பதை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துவிடும். இதனால் கேஷ்லெஸ் வசதியைப் பயன்படுத்திச் சிகிச்சை எடுக்கும்போது க்ளெய்ம் தொகை ஓரளவுக்குக் கூடுதலாகக் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டபின் பில்களைச் சமர்ப்பித்து க்ளெய்ம் செய்து ‘ரீஇம்பர்ஸ்மென்ட்’ பெறும்போது, ஒவ்வொரு சிகிச்சைக்கும் தனித்தனியாகக் கட்டணங்களைக் குறைக்க வாய்ப்புள்ளது.

இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் பாலிசிதாரர் கேஷ்லெஸ் வசதியைப் பயன் படுத்துவதைத்தான் விரும்புகின்றன. ஏனெனில், சிகிச்சைக்குப்பின் க்ளெய்ம் செய்யும் போது, அதற்காக டிபிஏ நிறுவனம் அதிக வேலை செய்யவேண்டி இருக்கும். தரப்பட்டுள்ள பில்கள் சரியாக உள்ளதா, எதற்காகச் சிகிச்சை எடுத்துள்ளார், பில் தொகையில் எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடையாது என்பதை டிபிஏ நிறுவனங்கள் சரிபார்க்க வேண்டி இருக்கும்.

தவிர மருத்துவமனையும், இன்ஷூரன்ஸ் நிறுவனமும் சேர்ந்து மருத்துவத் தொகையை வெகுவாகக் குறைக்க வாய்ப்பிருக்கிறது. காரணம், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தங்கள் செலவைக் குறைக்க, முடிந்தவரை மருத்துவமனையுடன் பேசி சிகிச்சைக் கட்டணத்தைக் குறைக்கும்.

மேலும், ஆயிரம் பாலிசி வைத்திருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு ஒரு சிகிச்சைக் கட்டணமும், ஒரு லட்சம் பாலிசி வைத்திருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு வேறொரு சிகிச்சைக் கட்டணமும் இருக்கும். மேலும், நம் நாட்டில் எந்தச் சிகிச்சைக்கு எவ்வளவு தொகை வசூலிக்க வேண்டும் என்று எந்த வரையறையும் கிடையாது. எனவே, ‘ரீஇம்பர்ஸ்மென்ட்’ வசதியைவிட, கேஷ்லெஸ் வசதியை நாடுவதே நல்லது” என்றனர்.