www.rupeedesk.in

புதுமை தந்த வெற்றிக் கனி! நடராஜன், கோவை பழமுதிர் நிலையம்.

புதுமை தந்த வெற்றிக் கனி! நடராஜன், கோவை பழமுதிர் நிலையம்.



''குடும்பச் சூழல் காரணமாக சிறு வயதிலிருந்தே பட்டறை, மில் என பல இடங்களில் வேலை பார்த்திருக்கிறேன். அப்படியான பணி பயணத்தில் ஒரு அத்தியாயம்தான், பழ வியாபாரம். ஆனால், காலப்போக்கில் இந்த தொழிலே நிலைத்து நின்றுவிட்டது. தலைச்சுமையாக, தள்ளுவண்டியில், தரைக்கடையாக மிகப் பெரிய உழைப்பைச் செலுத்திதான் வளர்ந்தேன்.அதிக ரிஸ்க் கொண்டது பழ வியாபாரம். இந்த தொழிலில் விற்பனையில்லை என்றால் பொருளும் மிஞ்சாது, போட்ட முதலீடும் மிஞ்சாது. பழ வியாபாரத்தில் உள்ள ரிஸ்க்குகளைக் குறைக்க வேண்டும்;  மக்களும் விரும்பி வாங்க வேண்டும் என்று யோசித்து நவீன முறைக்கு மாறினேன்.

வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகள் தருவதுகூட ஒரு வகையில் ரிஸ்க்தான். விலை அதிகமாக இருக்கும் என்று கடைக்குள் நுழைய மாட்டார்கள். ஆனால், சராசரியான விலையிலேயே தரமான பழங்கள் என்று நான் தரத் தொடங்கினேன். கோவையில் தொடங்கிய கடை வியாபாரம் நல்லபடியாக இருந்தது. அடுத்து, திருப்பூரில் இதே பாணியில் ஒரு கிளை தொடங்கினேன். அங்கும் மக்களின் ஆதரவு நன்றாக இருக்கவே, அடுத்ததாக சென்னையில் ஒரு கிளை தொடங்க திட்டமிட்டேன்.

சென்னையில் தொடங்கும் முன்பு கோயம்பேடு மார்க்கெட்டுக்குச் சென்று வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குறைபாடுகளை உன்னிப்பாக கவனித்தேன். பழம் காய்கறி வாங்குவதுகூட ஒரு இனிமையான ஷாப்பிங் அனுபவமாக மாற வேண்டும் என அடுத்தடுத்து தொடங்கிய எல்லா கிளைகளிலும் குளிர்சாதன வசதி, வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுக்கும் வசதி என பழ வியாபாரத்தை ஹைடெக்காக மாற்றினேன்.

இப்போது தமிழ்நாட்டில் நாற்பது இடங்களில் கிளைகள் உள்ளது. அடுத்ததாக, கேரளாவில் தொடங்க இருக்கிறோம். 2006-ல் எனது மகன் செந்தில் இந்த தொழிலுக்கு வந்தபிறகு, வெளிநாடுகளிலிருந்து பழங்கள் இறக்குமதி செய்யும் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தினோம்.

இப்போது நாளன்றுக்கு 200 டன்கள் விற்பனையாகும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். மக்களின் தேவையை அறிந்து, அவர்கள் விருப்பங்களை நிறைவேற்ற சிரத்தை எடுத்துக்கொண்டால் நிச்சயம் ஜெயிக்கலாம் என்பது என் அனுபவம்.''