www.rupeedesk.in

தேடல், தேவை, வெற்றி! ஜி.எஸ்.கே.வேலு. ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர்.

தேடல், தேவை, வெற்றி! ஜி.எஸ்.கே.வேலு. ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர்.


'நடுத்தர வசதி கொண்ட குடும்பத்தில்தான் பிறந்தேன். அப்பா ஆரல்வாய்மொழியில் நூலகராகப் பணியாற்றினார். எனக்கு மருத்துவராக வேண்டும் என்பது ஆசை. ஆனால், அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. மருத்துவத் துறை சார்ந்த படிப்பையாவது படிக்க வேண்டும் என நினைத்து, 'பார்மஸி அண்ட் பயோமெடிக்கல்’ என்ற படிப்பை டெல்லிக்குச் சென்று படித்தேன். அதற்கான பயிற்சிக்காக சென்னை புற்றுநோய் மருத்துவமனைக்கு வந்தேன். அப்போதுதான் மருத்துவத் துறையில் நவீன கருவிகளின் தேவை, பயன்பாடு போன்றவற்றை நுட்பமாகப் புரிந்துகொள்ள முடிந்தது.


நவீன மருத்துவ வசதிகளுக்காக மிகுதியான மக்கள் சென்னைக்கு வருவதை உணர்ந்து கொண்டேன். எனவே, இதையே தொழிலாகவும், சேவையாகவும் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். நவீன மருத்துவ கருவிகளை இறக்குமதி செய்து விற்பனை செய்யத் திட்டமிட்டேன். இதற்கான அனுபவத்தைப் பெற மருத்துவக் கருவிகளை இறக்குமதி செய்து விநியோகம் செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அதற்குப் பிறகு மருத்துவக் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் ஏழு ஆண்டுகள் பணியாற்றி இத்தொழிலைக் குறித்த விவரங்களை தெளிவாக அறிந்து கொண்டேன். அதன்பிறகே தனியாக நிறுவனத்தைத் தொடங்கினேன்.
எனது இலக்கு மாநகரங்களைத் தாண்டி இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள மருத்துவமனைகளாகத்தான் இருந்தது. அவர்களுக்கு நவீன மருத்துவக் கருவிகள் குறித்த தேவையை உணர்த்தினேன். விற்பனைக்குப் பிறகான சேவையை வெளிநாட்டு நிறுவனங்கள் தந்ததைவிட துரிதமாகவும், தரமாகவும் தந்தேன். அடுத்த சில ஆண்டுகளில் நான் ஒப்பந்தம் செய்துவைத்திருந்த சில நிறுவனங்கள் விலகியதால் ஒரு திடீர் நெருக்கடியைச் சந்திக்க நேர்ந்தது. ஆனாலும், அதையே உந்துசக்தியாகக் கொண்டு சொந்தமாக கருவிகளைத் தயாரிக்கத் தொடங்கினேன். படிப்படியான வளர்ச்சியால் இப்போது மருத்துவக் கருவிகள் உற்பத்தி மற்றும் விற்பனையில் இந்திய நிறுவனங்களில் முதலிடத்தில் இருக்கிறோம்; வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறோம்.
நவீன மருத்துவக் கருவிகளின் பயன்பாடு நமது கிராமப்புறங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதுதான் என் ஆசை. விரைவில் அந்த இலக்கை எட்டிப் பிடிப்பேன்!''