www.rupeedesk.in

பெயர்கள் கொடுத்த உற்சாகம். எம்.ஜே.பிராதாப் சிங் - ஈகிள் டைரி

 பெயர்கள் கொடுத்த உற்சாகம். எம்.ஜே.பிராதாப் சிங் - ஈகிள் டைரி



''சின்ன அளவில் ஒரு பிரின்டிங் பிரஸ் வைத்திருந்தேன். ஏற்கெனவே செய்துதந்த வேலைகளுக்குப் பணம் சரியாக வராமல் தொழில் முடங்கி விடக்கூடிய நிலைமை ஏற்பட்டது. அப்போதுதான் நமக்கென்று சொந்தமாக ஒரு புராடக்ட் இருந்தால் ஜெயிக்கலாம் என்ற சிந்தனை எனக்குள் உருவானது.

அட்வகேட் டைரி தயாரிக்கலாம் என்று நண்பர்கள் யோசனை சொன்னார்கள். அந்த புத்தாண்டில் எனக்குத் தெரிந்தவர்களுக்கு அன்பளிப்பு கொடுப்பதற்காக டைரிகளை வாங்கி அதில் அந்த நண்பர்களின் பெயரை அச்சடித்துக் கொடுத்தேன். டைரியில் தங்களது பெயர்களைப் பார்த்த நண்பர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. அதேபோல எங்களுக்கும் செய்து கொடுங்கள் என்று பலரும் கேட்டனர். இதனால் நானும் உற்சாகமாகி, இந்த தொழிலில் முழுமையாக இறங்கினேன்.

பிறகு சொந்தமாகவே டைரி தயாரிக்கத் திட்டமிட்டேன். அப்போது சந்தையில் கிடைத்த டைரிகளை வகைக்கு ஒன்றாக வாங்கி, வந்து டிசைன் பார்த்து, அவற்றிலிருந்து சிலவற்றை மேம்படுத்தி எனது பிரின்டிங் பிரஸில் புதுமையாகத் தயாரித்தேன். அடுத்தடுத்த வருடங்களில் இரண்டு, மூன்று மாடல்களில் டைரியை தயாரித்துத் தரும் அளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்கி, நானே ஆர்டர் பிடித்து வருவேன். விடிய விடிய ஆட்களோடு உடனிருந்து பிரின்டிங் வேலைகளைப் பார்ப்பேன்.

தரமான பேப்பர், குறைந்த விலை, புதுமையான மாடல் என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. பிரின்டிங், பைண்டிங் என ஒவ்வொரு தொழில்நுட்பமும் மாறமாற அதை கற்றுக்கொள்வதற்கு சளைத்ததேயில்லை. பிரின்டிங் தொடர்பான எந்த கண்காட்சி என்றாலும் உடனே ஆஜராகிவிடுவேன். இதற்காக வெளிநாடுகளுக்குகூட போனேன். எனது ஈகிள் டைரி இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு பிராண்டாக வளர்வதற்கு எனது கடுமையான உழைப்பும், நம்பிக்கையுமே காரணம்.

ஒரே ஒரு மெஷினோடு வாழ்க்கையைத் தொடங்கிய நான், இன்று நவீன எந்திரங்களைக் கொண்டு மணிக்கு மூவாயிரம் டைரிகள் தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன்; இன்னும் வளர்வேன்!''