www.rupeedesk.in

பரிசு மழையில் நனையும் விளையாட்டு வீரர்கள்; வருமான வரி உண்டா?

பரிசு மழையில் நனையும் விளையாட்டு வீரர்கள்; வருமான வரி உண்டா?



உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ரியோ ஒலிம்பிக் போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த திருவிழாவில் நமது இந்திய அணி ஒரு வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 67வது இடம் பிடித்தது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆனால், மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து வெள்ளி பதக்கத்தையும், மகளிர் 58 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் சாக்‌ஷி மலிக் வெண்கலப் பதக்கத்தையும் வென்று இந்தியாவின் பதக்க தாகத்தை தணித்ததால் இவர்களுக்கு பணம், கார், வீடு என பரிசு மழையில் நனைந்து வருகிறார்கள்.

ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியாவின் பெயராவது இடம் பெறுமா என ஏங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் தங்களுடைய திறமையை உலகிற்கு நிரூபித்து இந்தியாவுக்கு பெருமையைத் தேடித் தந்த வீர மங்கைகள் பி.வி.சிந்து மற்றும் சாக்‌ஷி மாலிக்-க்கு ஊக்கத்தொகையாக எவ்வளவு கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதில் எந்தவித தவறும் இல்லை.

ஆனாலும், "விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் கோடிக்கணக்கான பரிசுகளுக்கு வருமான வரி பிடித்தம் உண்டா?" என்பது குறித்து சென்னை, சுண்ணாம்புகொளத்தூரைச் சேர்ந்த விகடன் வாசகர் ஒருவர் இது குறித்து எங்களிடம் கேள்வி எழுப்பினார். இவருடைய கேள்வி சரியா? விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் பரிசுத் தொகைகளைப் பற்றி எல்லாம் பேச வேண்டுமா என்பதை தவிர்த்து இது குறித்து உண்மையான விவரம் தெரிந்துக்கொள்ள கோவையைச் சேர்ந்த ஆடிட்டர் ஜி.கார்த்திகேயனிடம் கேட்டோம்.

"விளையாட்டு வீரர்களுக்கு வருமானம் என்றாலே அவர்களுக்கும் வரி பிடித்தம் என்பது நிச்சயம் உள்ளது. இந்தியாவில் பணமாக பரிசுத் தொகை கிடைத்தால் வருமான வரியாக 30% செலுத்த வேண்டும். இதுவே பிஎம்டபுள்யூ அல்லது மெர்சிடிஸ் பென்ஸ் கார் என ஒரு பொருளாக விளையாட்டு வீரர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டால் அதற்கான தற்போதைய சந்தை மதிப்பு எவ்வளவு உள்ளதோ அதற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். இதில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மூலம் வழங்கப்படும் எந்தவிதமான பரிசுத்தொகை அல்லது பொருளுக்கு வரி பிடித்தம் என்பது இல்லை.

வெளிநாடுகளில் நமது நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் பரிசுத்தொகைக்கும் வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால், இது நாட்டுக்கு நாடு மாறுபடும். வெளிநாட்டில் நம்முடைய விளையாட்டு வீரர்களுக்கு பரிசுத்தொகை கிடைக்கிறது என்றால் அது அந்த நாட்டின் சட்டத்தைப் பொறுத்து வரி பிடித்தம் என்பது இருக்கும். சில நாடுகளில் பரிசுத் தொகைக்கு வரி பிடித்தம் என்பதே கிடையாது; ஆனால், இந்தியாவுக்கு வந்தவுடன் அதற்கான வரிப் பணத்தை கட்ட வேண்டும்.

அதேசமயம் சில நாடுகளில் விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் பரிசுகளுக்கு வரி பிடித்தம் என்பது உள்ளது. வீரர்களுக்கு அந்த நாட்டில் 10 சதவிகிதம் வரி பிடித்ததற்குப்போக இந்தியாவில் மீதி வரி பணத்தை செலுத்த வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே வரி மேல் வரி கிடையாது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீதி வரிப் பணத்தை இந்தியாவில் கட்ட வேண்டும்" என்றார்.

கோடிக்கணக்கான மக்களின் மனதை கொள்ளைக் கொண்ட வீர மங்கைகள் வருமான வரி பிடித்தம் போக கொஞ்சம் பரிசு மழையிலும் நனையட்டுமே!