www.rupeedesk.in

சிக்கலில் இருந்து விடுபட - " சிக்ஸ் சிம்பிள் ரூல் "

சிக்கலில் இருந்து விடுபட எளிமையான 6 வழிகள்!

சிக்கலில் இருந்து விடுபட - " சிக்ஸ் சிம்பிள் ரூல் "

நிர்வாகிகளுக்கு தனி அதிகாரத்தை பெறும் சூழலையும், அவர்களுடன் பணிபுரிபவர்கள் அனைவரின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கான சூழ்நிலையையும் உருவாக்கினாலே பாதி சிக்கல்கள் வரவே வராது.

புத்தகத்தின் பெயர்: சிக்ஸ் சிம்பிள் ரூல் (Six Simple Rule)

ஆசிரியர்கள்: பீட்டர் டோல்மென் மற்றும் வெஸ் மொரியெக்ஸ் (Peter Tollman and Yves Morieux)

பதிப்பாளர்: ஹார்வேர்ட் பிசினஸ் பப்ளிஷிங்

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் வெஸ் மொரியெக்ஸ் மற்றும் பீட்டர் டோல்மென் இணைந்து எழுதிய ‘சிக்ஸ் சிம்பிள் ரூல்ஸ்’ எனும் தொழில்ரீதியாக எதிர்கொள்ளும் சிக்கலான விஷயங்களை எப்படி சிரமமில்லாமல் நிர்வகிப்பது என்பதைச் சொல்லும் புத்தகத்தை.



இன்றைக்கு வெற்றிகரமாக ஒரு பிசினஸை நடத்துவது என்பது மிக மிக கடினமான மற்றும் சிக்கலான ஒன்றாக ஆகிவிட்டது. ஏனென்றால், தொழில்கள் எல்லாமே மிகவும் போட்டி மற்றும் பல்வேறு கடும் சிக்கல்களைக் கொண்டதாக மாறிவிட்டது.

நிறுவனங்களின் சிஇஓ-வாக இருந்தாலும் சரி, ஆர் அண்ட் டி தலைவராக இருந்தாலும் சரி, விற்பனை இயக்குநராக இருந்தாலும் சரி, ஹோட்டலில் வரவேற்பாளராக இருந்தாலும் சரி, ஒரு ரயில் ஓட்டுநராக இருந்தாலும் சரி, அவரவர் செய்யும் தொழிலில் நடைமுறை சிக்கல்கள் அதிகமாகிக்கொண்டே வருகிறது.

இந்த சிக்கல்களுக்கு எது காரணம் என்று ஆராய்ந்தால், சிக்கல்கள் என்பவை ஒரு நோய்க்கான அடையாளமே தவிர, சிக்கலே ஒரு நோய் அல்ல என்பது புரியும். சிக்கல்களின்     அடிவேரைக் கண்டுபிடிக்க முயன்றால், நிர்வாகங்கள் சிக்கல்களை எதிர்கொள்வதில் இரண்டு வகையான முறைகளை கையாள்வது தெரியும். அதில் ஒன்று, கடினமான வகையில் சிக்கல்களை கையாள்வது. இரண்டாவது, மென்மையான வகையில் சிக்கல்களை கையாள்வது.

இதில் கடினமான வகை என்பது, தொழில் என்றால் சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். இதைச் சமாளிக்க சரியான சிஸ்டத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிர்வாக ரீதியில் பலவிதமான ஸ்ட்ரக்சர்கள், பிராசஸ்கள், சிஸ்டம்ஸ்களை எல்லாம் உருவாக்கி, நடைமுறைபடுத்துவது.

உதாரணத்துக்கு, கம்பெனியின் நிர்வாகத்துக்கு ஒவ்வொரு நாட்டிலும்/ஊரிலும் இருக்கும் வாடிக்கையாளர்களின் ரசனைக்கு தகுந்தாற்போல் தயாரிப்புகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.



 இதனால் லாபம் அதிகரிக்கும் என்ற எண்ணத்துடன் கம்பெனி செயல்பட்டால், இந்த வகை செயல்பாட்டை ஊக்குவிப்பதற்கு கம்பெனியின் நடப்பு முழுக்க முழுக்க டீ-சென்ட்ரலைஸ் செய்யப்பட்டிருக்கவேண்டும்.

மாறாக, உற்பத்தித்திறனை உயர்த்தி செலவினத்தைக் குறைத்தால் (எகனாமிஸ் ஆஃப் ஸ்கேல்) லாபம் பார்க்க முடியும் என்ற கொள்கையுடன் செயல்பட்டால், நிர்வாகம் சென்ட்ரலைஸ் செய்யப்பட்டிருக்கவேண்டும்.

ஒரே மாதிரியான தயாரிப்புகளை ஒரே இடத்தில் இருந்து செய்து உலகம் முழுவதும் விநியோகம் செய்யும்போது மூலப்பொருட்களில் ஆரம்பித்து, சம்பளம் வரையில் பெரிய அளவில் செலவினம் குறையும். இந்த வகை எண்ணத்தில் செயல்பட நினைக்கும் நிர்வாகம், சென்ட்ரலைஸ்டு ஆப்ரேஷன் என்ற நடைமுறையைக் கடைப்பிடிப்பது என்பது கடினமான வகையில் சிக்கல்களை கையாளும் முறையாகும்.

மென்மையான வகையில் சிக்கல்களை கையாளுவது என்பது பணியாளர்களை திறம்பட செயல்பட வைப்பதற்காக பல்வேறு வகை உற்சாகப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பது. உதாரணத்துக்கு, டீம் பில்டிங்குக்கு முக்கியத்துவம் கொடுப்பது, பணியாளர்களுடைய முயற்சியை ஊக்குவிக்கும் செயல்கள் பலவற்றை செய்வது, நல்லதொரு சுற்றுலா புரோகிராமை அமைத்துக் கொடுத்து அனைவரையும் ரிலாக்ஸ்டாக ஆக்கி, வேலைத்திறனை ஊக்குவிப்பது போன்றவற்றை கடைப்பிடிப்பதாகும்.

இந்த வகை கையாளுதல் என்பது, முழுமையாக உளவியல் ரீதியான கையாளுதல் வகையாகும். பிசினஸ் என்றால் சிக்கல் இருக்கும். சிக்கல்களை கையாளுதல்தான் அதில் ஈடுபட்டிருபவர்களின் வேலை, அவர்களை களைப்படையாமலும் புத்துணர்வுடனும் வைத்திருப்பதுதான் பிசினஸின் கடமை என்பது மென்மையான அணுகுமுறை.

இந்த அணுகுமுறையின் அடிப்படையே, மனிதர்களே சிக்கல்களை உருவாக்கி அவற்றை தீர்க்கவும் செய்வார்கள் என்பதுதான். சிக்கல்கள் தீராமல் தொடர்ந்தால், அது மனிதர்களாலேயேயன்றி வேறெதனாலும் இல்லை. மனிதர்களின் தவறான எண்ணத்தாலும் கண்ணோட்டத்தாலும் மட்டுமே இது நடக்கிறது என்ற காரணத்துடன் மேலும் மனிதர்களை முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரைக்கும் முறை இது.

இந்த இரண்டு முறையுமே சிக்கல்களுக்கான அடிப்படை என்று சொல்லும் ஆசிரியர்கள், சிக்கல்களை களைய அதை எதிர்கொள்ளும் நபர்கள் அந்த நிமிடத்தில் செய்யும் முடிவே (Judgement) அதிக அளவில் உதவும் என்கின்றனர்.

என்னதான் ஸ்ட்ரக்சர், பிளானிங், சட்டம் எல்லாம் இருந்தாலும் சிக்கல் என்று ஒன்று வந்தபின்பு சமாளிக்கவும், இனி வராமல் ஓரளவுக்கு குறைக்கவுமே இவை அதிக அளவில் உதவுகின்றன. சிக்கல் வரும் என்பதை எதிர்பார்த்தே இருக்கும் நிலைக்கு நிர்வாகிகளின் புத்திக்கூர்மையும்,  அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரமுமே உதவும்.

நிர்வாகிகளின் புத்திசாலித்தனத்தையும், கூர்மதியையும், விவேகத்தையும் அதிகரிக்கத் தகுந்தாற்போன்ற நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே சிக்கல்களை தவிர்க்கவும், சமாளிக்கவும் முடியும் என்கின்றனர் ஆசிரியர்கள். இதை விட்டுவிட்டு சிஸ்டம், சட்டம் என பலவற்றையும் அடுக்கி வைப்பதால் மேலும்மேலும் சிக்கல்கள் மட்டுமே அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றது என்றும் எச்சரிக்கிறார்கள்.

நிர்வாகிகளுக்குத் தேவையான தனி அதிகாரத்தை பெறும் சூழலையும், நிர்வாகிகள் அவர்களுடன் பணிபுரிபவர்கள் அனைவரின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கான சூழ்நிலையையும் உருவாக்கினாலே பாதி சிக்கல்கள் வரவே வராது என்கின்றனர் ஆசிரியர்கள். இந்த வகை நடவடிக்கையை எடுக்கத் தேவைப்படும் ஆறு சிம்பிளான ரூல்களையே இந்தப் புத்தகத்தில் கூறியுள்ளனர் ஆசிரியர்கள்.

முதலாவதாக, நிர்வாகங்கள் நிர்வாகிகளும் பணியாளர்களும் உண்மையில் என்ன செய்கின்றனர் என்றும் அதை எதற்காக அவர்கள் செய்கின்றனர் என்பதையும் தெளிவாகப் புரிய வைத்துவிட வேண்டும் என்கின்றனர். இதை முதலில் செய்துவிட்டால் மட்டுமே பின்னால் வரும் ரூல்களை நன்றாக அமுல்படுத்த முடியும் என்கின்றனர்.

இரண்டாவதாக, அனைவரையும் இணைக்கும் இணைப்புப் பாலம் போல் திகழும் இன்டெக்ரேட்டர்களை வலுப்பெறச் செய்தல் என்பதைச் சொல்லும் ஆசிரியர்கள், இந்த வகை இணைப்புப் பாலங்களை வலுவடையச் செய்வதால் அனைவருமே பலன் பெறுவார்கள் என்கின்றனர். அதிகாரமும், கூட்டணியும் இணைந்து இருந்தால், அதிக அளவில் செய்தி பரிமாற்றங்கள் நடைபெற்று சிக்கல்கள் வருமுன்னரே அவற்றை தவிர்ப்பதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டுவிடும் என்கின்றனர்.



மூன்றாவதாக, சிக்கலான இடங்களில் பணிபுரிவோருக்கு அதிக அளவிலான அதிகாரங்களை வழங்குதல் என்கின்றனர் ஆசிரியர்கள். நான்காவதாக, நிர்வாகிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பர உதவியை செய்ய போட்டி போடும் அளவுக்கான சூழலை வளர்த்தல் என்கின்றனர். இந்த வகை சூழலும் சிக்கல்கள் வருமுன்னரே அலர்ட்டாக இருக்க வழிவகை செய்யும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

ஐந்தாவதாக, இன்றைய வேலையை செய்யும்போதே நாளைக்கு வரப்போகும் மாறுதல்கள் எப்படி இன்று செய்யும் வேலையை மாற்றியமைக்கும் என்பதை உணரச் செய்யும் வகையில் செயல் திட்டங்களை அமைத்தல் என்கின்றனர் ஆசிரியர்கள்.

ஆறாவதாக, ஆசிரியர்கள் சொல்வது சிக்கல்களுக்கான பெரும் எதிரி அனைவரும் ஒன்றாய் இணைந்து செயல்படுவது என்பது கண்கூடாகத் தெரியும் ஒரு விஷயம். அதனால் இணைந்து செயல்பட உதவும் (கோ-ஆப்பரேட்) நபர்களை கண்டெடுத்து, அவர்களுக்கான சரியான அங்கீகாரங்களை செய்யுங்கள் என்பதைத்தான். ஏனென்றால் இணைந்து செயல்பட விரும்பும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பே சிக்கல்களை உருவாவதைத் தவிர்த்து, இருக்கும் சிக்கல்களை தீர்க்கவும் உதவி செய்யும் என்கின்றனர் ஆசிரியர்கள். இந்த ஆறு சிம்பிள் ரூல்களை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது பற்றியும் விளக்கமாகச் சொல்லியுள்ள ஆசிரியர்கள், நல்ல பல உதாரணங்களைக் கூறி புத்தகத்தை சிறப்படையச் செய்துள்ளனர்.

 சிக்கல் இல்லாத வேலை என்பதை எதிர்பார்க்காத நிர்வாகமும் இல்லை; நிர்வாகிகளும் இல்லை. கொஞ்சம் கடினநடையில் இருந்தாலுமே நிர்வாகிகளும், நிர்வகிக்கும் பதவிக்கு வர நினைப்பவர்களும் படிக்கவேண்டிய முக்கிய புத்தகம் இது எனலாம்.