www.rupeedesk.in

மனிதர்களுக்கு மட்டுமல்ல, மரங்களுக்கும் இன்சூரன்ஸ் செய்யலாம்!

மனிதர்களுக்கு மட்டுமல்ல, மரங்களுக்கும் இன்சூரன்ஸ் செய்யலாம்!



தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மரங்களுக்கு காப்பீடு செய்யும் திட்டத்தை கடந்த 2013ம் ஆண்டு கொண்டு வந்தது. இத்திட்டத்தின்படி தமிழகத்தில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் இதை செயல்படுத்த முன்வந்துள்ளது. மனிதர்களின் எதிர்காலத்தை காப்பீடு முடிவுசெய்வதுபோல் பயிர்களுக்கும் காப்பீடு என்பது இன்றைய சூழலில் அவசியமானதாகிறது.அந்த வரிசையில் மரங்களுக்கான இன்சூரன்ஸ் விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

அடிப்படை நிபந்தனைகள்

* இன்சூரன்ஸ் என்றதும்,  'இருக்கிற செலவில் இதுவேறயா' என எரிச்சலாகாதீர்கள். உற்பத்திச் செலவில் வெறும் 1.25 சதவீத தொகையை பிரிமியமாக செலுத்தினால் போதுமானது.

* தமிழ்நாட்டில் ஏழு வகையான மரங்களுக்கு காப்பீட்டுத் திட்டம் அமலில் உள்ளது. தைலம், சவுக்கு, சூபாபுல், சிசு, மலைவேம்பு, தீக்குச்சி , குமிழ் போன்ற மரங்களை பயிர் செய்து வரும் விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

* இயற்கையாக ஏற்படக்கூடிய தீ விபத்துக்கள், வன விலங்குகளால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள், புயலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள், வெள்ளம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் போன்ற அனைத்து விபத்துகளுக்கும் இந்த காப்பீட்டுத்திட்டம் பொருந்தும்.

* இவை மட்டுமல்லாது பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கும் இந்த காப்பீட்டுத் திட்டமானது பொருந்தும். ஆனால் இதற்கான பிரிமியம் தொகை சற்று அதிகம்.

* 300 ரூபாயிலிருந்து 750 ரூபாய் வரை ஒரு ஏக்கருக்கு ஓர் ஆண்டிற்கான பிரிமியம் தொகையை நாம் இன்சூரன்ஸ்  நிறுவனத்திடம் செலுத்த வேண்டி இருக்கும். மேற்குறிப்பிட்ட இடர்ப்பாடுகள் நமக்கு நேரிடும்போது நாம் செய்துள்ள இன்சூரன்ஸ் நமது நஸ்டத்தை சமாளிக்க வல்லதாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

* தமிழகத்தில் இந்தத் திட்டமானது தமிழ்நாடு காகிதக் கூழ் நிறுவனம் மூலம்வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒப்பந்த முறை சாகுபடியை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தி இது வரை சுமார் 5000 ஏக்கர் தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மரங்களின் பரப்பளவும் அதிகரித்ததோடு மரங்களின் பயன்பாடுகள் அதிகமுள்ள தொழிற்சாலைகள் தங்களுக்குத் தேவையான மரத் தேவைகளை தாமே நிவர்த்தி செய்து கொள்கின்றன.

* இத்திட்டத்தில் பயன்பெற நாம் ஒப்பந்த முறை சாகுபடி திட்டத்தில் உறுப்பினராக சேர வேண்டும்.
இதில் உறுப்பினராக சேர விரும்புவோர், முதல்வர், வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ் நாடு வேளாண் பல்கலைக் கழகம், மேட்டுப்பாளையம் – 641 301 ஐ தொடர்பு கொள்ளலாம்.