www.rupeedesk.in

சிபிலில் பெயர் சிக்காமல் இருக்க 5 வழிகள்

சிபிலில் பெயர் சிக்காமல் இருக்க 5 வழிகள்.


கடன் கேட்டு விண்ணபிக்கும் போது கடன் கொடுக்கும் நிறுவனம் முதலில் கேட்பது சிபில் (Credit information bureau (india) limited) ஸ்கோர் எவ்வளவு என்றுதான்.

இந்தியாவில் கடன் வாங்குபவர்களின் விவரம் இந்த அமைப்பில் பதிவு செய்யப்படுகிறது. அதாவது தனியார்  நிறுவனம் அல்லது வங்கி என எங்கு கடன் வாங்கினாலும் அந்த விவரம் இந்த அமைப்புக்கு வழங்கப்படும். நீங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்து விதத்தின் அடிப்படையில் ஸ்கோர் வழங்கப்படும். இந்த ஸ்கோரை அடிப்படையாக வைத்துதான் அடுத்தடுத்த கடன் வாங்க முடியும். கடனை சரியாக திரும்ப செலுத்தவில்லை எனில் கடனை கட்ட தவறியவர் பட்டியலில் உங்களின் பெயர் சேர்ந்துவிடும். அடுத்து கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைந்துவிடும்.

1. கடன் வேண்டுமா என கேட்டு ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று போன் வந்துவிடுகிறது. உண்மையில் உங்களுக்கு கடன் தேவையா என்பதையும், கடன் வாங்குவதற்கான தகுதி உள்ளதா என்பதை தெளிவுப்படுத்திக் கொண்ட பிறகு கடன் வாங்குவது நல்லது. அதாவது தேவை எதுவுமே இல்லாமல் கடன் வாங்கி செலவு செய்து விட்டு பின்பு கடனை திரும்ப கட்டாமல் இருந்தால் உங்களின் பெயர் சிபில் பட்டியலில் சேரும்.


2. கடன் வாங்குவதற்கு முன் அந்த கடனை குறிப்பிட்ட காலத்தில் திரும்ப செலுத்த முடியுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். உங்களுடைய மாத சம்பளம் எவ்வளவு, அதில் எவ்வளவு சதவிகிதம் கடன் வாங்குகிறீர்கள். இஎம்ஐ தொகை எவ்வளவு? ஒவ்வொரு மாதமும் எந்த தேதியில் இஎம்ஐ செலுத்த வேண்டும். அந்த தொகையை தொடர்ந்து சரியாக செலுத்த முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும்.
குறிப்பிட்ட தேதியில் இஎம்ஐ செலுத்த முடியாது எனில், நீங்கள் கடன் வாங்கும் நிறுவனத்திடம் பேசி இஎம்ஐ தேதியை மாற்றுவது நல்லது.

3 .தவிர்க்க முடியாத காரணத்தினால் இஎம்ஐ செலுத்த முடியவில்லை எனில் அபராதம் எவ்வளவு என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். இதை முன்கூட்டியே தெரிந்துக் கொண்டால் அபராதம் அதிகமாக இருந்தால் அதை தவிர்த்து விடலாம். அதாவது நீங்கள் ஒவ்வொரு மாதமும் 2500 ரூபாய் இஎம்ஐ செலுத்த வேண்டும் என வைத்துக் கொள்வோம். இதை கட்ட தவறினால் 750 ரூபாய் அபராதம் என்றால், அபராதத்தை தவிர்க்கும் விதமாக இஎம் ஐ கட்ட எந்த வழியிலாவது ஏற்பாடு செய்துக் கொள்ள வேண்டும். இதில் இரு நன்மைகள். ஒன்று அபராதம் தவிர்ப்பு. அடுத்து சிபில் பட்டியலில் பெயர் தவிர்ப்பு.


4. குறிப்பிட்ட காலத்தில் கடனை திரும்ப செலுத்திவிட்டீர்கள் அல்லது அதற்கு முன்பே செலுத்திவிட்டீர்கள் எனில் அதற்கான ஆதார கடிதத்தை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. அதாவது கடன் முழுவதையும் அடைத்த பிறகு என்ஒசி சான்றிதழ் வாங்கி வைப்பது நல்லது. ஏனெனில் பிற்காலத்தில் ஏதாவது பிரச்னை இருந்தால் இந்த கடிதத்தை  ஆதாரமாக காண்பிக்கலாம்.

5. கடன் தொகை முழுவதையும் அடைத்து என்ஒசி சான்றிதழ் வாங்கிய இரண்டு அல்லது மூன்று மாதம் கழித்து ஆன்லைனில் சிபில் ரிப்போர்ட்க்கு விண்ணப்பம் செய்வது நல்லது. அதாவது சிபில் ரிப்போர்ட்டில் உங்களுடைய பெயரில் கடனை சரியாக கட்டாதவர் என இருந்தால் அதை முன்கூட்டியே தெரிந்துக் கொள்ள முடியும். மேலும் சிபில் ரிப்போர்ட்டில் தவறு இருந்தால் அதை நீங்கள் மாற்ற முடியாது. தவறுகளை நீங்கள் கடன் வழங்கிய நிறுனவத்திடம் கூறி அதற்கான சான்றுகளை காண்பித்த பிறகுதான் சிபில் ரிப்போர்ட்டில் அந்த நிறுவனம்தான் திருத்தம் செய்ய முடியும்.