www.rupeedesk.in

பிசினஸ் தந்திரங்கள் !

பிசினஸ் தந்திரங்கள் !


பேராசிரியர் ஸ்ரீராம், மகாபலிபுரத்துக்கு அருகில் இருக்கும் கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் செயல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். விழுப்புரத்தில் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு வரை படித்தார். அதன்பிறகு சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பொருளாதாரமும், பாம்பே பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ.யும். படித்தார். 83-89ம் ஆண்டு வரை ஒரு கன்சல்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அதன்பிறகு 2004-ம் ஆண்டு வரை எஸ்.பி.ஜெயின் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். 2004-ம் ஆண்டு முதல் கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரிகிறார். கடந்த இருபது வருடங்களாக ஸ்ட்ராடஜி துறை பேராசிரியராக இருக்கிறார். மாரிகோ, சன்பார்மா, அலெம்பிக், ஐ.டி.பி.ஐ. ஜோதி ஸ்ட்ரக்சர்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களுக்குத் திட்டங்களை வகுத்துத் தந்திருக்கிறார்.

 கம்பெனிகள் ஜெயித்த கதை!

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்கிறீர்கள். பஸ்ஸில் செல்வதா இல்லை டாக்சியில் செல்வதா என்பதை முடிவு செய்யவேண்டும். எத்தனை மணிக்கு செல்லவேண்டும் என்பதை முடிவு செய்யவேண்டும்.

மதியம் சாப்பிட்டுவிட்டு செல்லும்பட்சத்தில் சாப்பாட்டுக்கு பிரச்னை இல்லை, ஒருவேளை காலை 11 மணிக்கு செல்கிறீர்கள் என்றால் சாப்பாட்டுக்குத் தயார் செய்யவேண்டும்.

எதில் சென்றாலும் முதலில் துணிமணிகள் எடுத்து வைக்க வேண்டும்; குடும்பத்தோடு செல்லும்பட்சத்தில் பணம், குழந்தைகளுக்குத் தேவை யானவை என பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.



அதாவது, சென்னையில் இருந்து புதுச்சேரி என்கிற இடத்திற்கு செல்வதற்கே இத்தனை விஷயங்களை செய்யவேண்டி இருக்கிறது. வெற்றி என்கிற இலக்கை அடைய ஒரு நிறுவனம் எத்தனை விஷயங்களை செய்யவேண்டியிருக்கும். வெற்றி இலக்கை அடைவதற்கான விஷயங்களை முன்கூட்டியே திட்டமிடுவதுதான் ஸ்ட்ராடஜி.

‘stratos’ என்றால் கிரேக்க மொழியில் ராணுவம் என்று அர்த்தம். இந்த வார்த்தையில் இருந்துதான் 'ஸ்ட்ராடஜி’ என்ற வார்த்தை உருவானது. ஒரு போர் நடக்கிறது எனில், களத்துக்கு வீரர்களை அனுப்பவேண்டும். அவர்களுக்கு சாப்பாடு, மருந்துப் பொருட்களை அனுப்பவேண்டும். ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குச் செல்ல தற்காலிகப் பாலங்களை அமைக்க பொறியாளர்கள் வேண்டும்.  இப்படி பல வகையில் முன்தயாரிப்புகள் இருந்தால் மட்டுமே போரில் ஜெயிக்க முடியும். இந்த ஸ்ட்ராடஜியை போரில் மட்டுமல்ல, பிசினஸிலும் எப்படி பயன் படுத்தலாம் என்று யோசித்ததன் விளைவுதான், பிசினஸ் ஸ்ட்ராடஜி என்கிற துறையே பிறந்தது.

சரி, விஷயத்துக்கு வருவோம். சென்னையில் இருந்து நீங்கள் புதுச்சேரி போகிறீர்கள். நீங்கள் மட்டுமா போகிறீர்கள்? உங்களைப்போல இன்னும் பல ஆயிரம்பேர் போகிறார்கள். அவர்கள் உங்களுடைய போட்டியாளர்கள். உங்கள் இலக்குதான் உங்கள் போட்டியாளர்களுக்கும். அப்படியானால் அவர்கள் எப்படி யோசிப்பார்கள் என்பதையும் நீங்கள் கணிக்கவேண்டுமில்லையா? உங்கள் போட்டியாளர்களைவிட நீங்கள் புத்திசாலித்தனமாக திட்டங்களைத் தீட்டினால்தானே அவர்களைவிட முன்னதாக நீங்கள் உங்கள்  இலக்கை அடைய முடியும்?

கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் பஸ்ஸில் ஓர் இடமே இருக்கிறது. இந்த இடத்தை திருவான்மியூரில் பிடிக்கவேண்டும் என்றால், நீங்கள் முன்கூட்டி செல்வது முக்கியமல்ல, உங்கள் போட்டியாளர்களைவிடவும் முன்கூட்டியே செல்லவேண்டும்.

சரி, ஒரு வழியாக கஷ்டப்பட்டு சீட்டைப் பிடித்துவிட்டீர்கள். இனி அப்பாடா என்று உட்கார்ந்துவிட முடியுமா?

பஸ் திடீரென விபத்துக்குள்ளாகலாம்; சுனாமி வந்து, இ.சி.ஆர். முழுக்க வெள்ளத்தில் மிதக்கலாம். இப்படி என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அப்போது என்ன செய்வீர்கள்?

அதிலிருந்து தப்பிக்க ஏதாவது மரத்தில் ஏறி, இல்லை பாதுகாப்பான இடத்துக்கு செல்கிறீர்கள். இதன்மூலம் வழியில் வந்த ஒரு பிரச்னையை நீங்கள் சமாளிக்கிறீர்கள், அவ்வளவுதான். இலக்கை இன்னும் அடையவில்லை. இது ஒரு டாக்டீஸ் (tactics) தானே தவிர, ஸ்ட்ராடஜி (strategy) கிடையாது. ஒரு சிறிய 'மூவ்’ மூலமாக உங்களது ராஜாவைக் காப்பாற்றி இருக்கிறீர்கள், இன்னும் நீங்கள் checkmate நோக்கிச் செல்லவில்லை.

ஓர் இலக்கை அடைய பெரிய திட்டத்தையோ, கேம்பிளானையோ வைத்திருந்தால் மட்டும் வெற்றியை அடைந்துவிட முடியாது. அவ்வப்போது வரும் இடையூறுகளை சுக்குநூறாக்குவதற்கும் சாமர்த்தியம் வேண்டும். இல்லை எனில், ஒரு சிறிய பிரச்னைகூட உங்களது மொத்தத் திட்டத்தையும் தகர்த்துவிடும்.

எவ்வளவுதான் திட்டமிட்டாலும், இடையிடையே பிரச்னை வந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் நினைப்பது நினைத்த மாதிரியே எப்போதும் நடப்பதில்லை. இதற்கு போய் ஏன் திட்டமிட வேண்டும். வாழ்க்கையை, பிரச்னையை, பிசினஸை அதன் போக்கில், நடப்பது நடக்கட்டும் என்று எதிர்கொள்ளலாமே என்று நீங்கள் கேட்கலாம்.

இந்தக் கேள்விக்கான பதிலை அடுத்த வாரம் சொல்கிறேன்.

(வியூகம் அமைப்போம்)