www.rupeedesk.in

ஃபேஸ்புக் மார்க்கெட்டிங்... குறைந்த செலவு, அதிக லாபம்!

ஃபேஸ்புக் மார்க்கெட்டிங்... குறைந்த செலவு, அதிக லாபம்!


ஃபேஸ்புக் மார்க்கெட்டிங்... குறைந்த செலவு, அதிக லாபம்!
சிறிய அளவில் தொழில் செய்பவர்கள் பலரும் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னை மார்க்கெட்டிங். தரமான பொருள் தயார், ஆனால், அதிக  வாடிக்கையாளர்களைச்  சென்றடைய முடியவில்லையே என்கிற கவலை பலருக்கு.

நாம் தயாரிக்கும் பொருள் அல்லது வழங்கும் சேவை பற்றி பலருக்கும் எளிதில் சென்று சேரும் ஓர் எளிய மார்க்கெட்டிங் கருவியாக மாறி இருக்கிறது ஃபேஸ்புக்.

இன்றைய உலகில் காலையில் எழுந்தவுடன் முகம் கழுவுகிறார்களோ இல்லையோ, கம்ப்யூட்டரில், லேப்டாப்பில், ஸ்மார்ட் போனில் முகநூலைத் (ஃபேஸ்புக்) திறந்து பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள் பலர். நண்பர்களின் வட்டத்தை அதிகப்படுத்த பலரும் பயன்படுத்திவந்த ஃபேஸ்புக், இப்போது மிகச் சிறந்த மார்க்கெட்டிங் மேடையாக மாறி இருக்கிறது. தாங்கள் செய்துவரும் தொழிலை ஃபேஸ்புக் மூலம் வெற்றிகரமாக மார்க்கெட்டிங் செய்து, விற்பனையை அதிகரித்து எக்கச்சக்கமாக லாபத்தையும் சம்பாதித்து வருகிறார்கள்.

நாம் செய்யும் தொழிலை ஃபேஸ்புக் மூலம் கொண்டு செல்லும்போது, கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன?, எப்படி முறையாக ஃபேஸ்புக் மார்க்கெட்டிங்கை மேற்கொள்வது? இதில் இருக்கும் சாதக, பாதகங்கள் என்னென்ன? என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். இது குறித்து பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் சமூக வலைதளங்களுக்கான பிரிவின் தலைவர் கே.எஸ்.ராஜசேகரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.



மார்க்கெட்டிங் செய்ய புதிய களம்!

''இன்றைக்கு ஃபேஸ்புக் பக்கங்களில் பல பிசினஸ் புரொஃபைல்களை அடிக்கடி பார்க்க முடிகிறது. ஃபேஸ்புக் என்ற சமூக வலைதளத்தை மார்க்கெட்டிங் செய்ய புதிய களமாகவே பயன்படுத்தி வருகிறார்கள்.

பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், சொந்தமாகத் தொழில் செய்பவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் மூத்தக் குடிமக்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் ஃபேஸ்புக்கில் உலக அளவில் மொத்தம் சுமார் 1.2 பில்லியன் பயனாளர்கள் இருக்கிறார்கள். இந்திய அளவில் சுமார் 82 மில்லியன் பயனாளர்கள் இருக்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். இவர்களை ஆதாரமாகக்கொண்டு, ஒருவர் செய்யும் தொழிலை இவர்கள் மத்தியில் பிரபலப்படுத்த முடியும். அதற்கென தனியாக பிசினஸ் பக்கங்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும்.

எப்படி உருவாக்குவது?

தனிநபர்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பினர்களும் அவரவர்களின் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை மையமாக வைத்து பிசினஸ் பக்கங்களை ஃபேஸ்புக்கில் ஆரம்பிக்கலாம். இதற்கென எந்த விதிமுறைகளும் கிடையாது. கட்டணமும் கிடையாது.

 ஃபேஸ்புக்கில் ஒருவர் தனது புராடக்ட்களை மார்க்கெட்டிங் செய்வதற்காக களம் இறங்கும்போது, அதை மட்டுமே தொடர்ந்து செய்யாமல் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள் குறித்த விவரங்களையோ, அவர்களின் தொழில் சார்ந்த தகவல்களையோ பதிவு செய்யவேண்டும். பதிவு செய்யும் விவரங்கள் பயனாளர்களை ஈர்க்கும் விதமாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் தொழிலுக்கான வாடிக்கையாளர்களாக சீக்கிரமாகவே மாறிவிடுவார்கள்.

செய்யப்படும் பதிவுகள் சாதாரணமாக இல்லாமல் தொழில் குறித்த உண்மைத்தன்மையை நிரூபிக்கும் விதமாக இருக்கவேண்டும். அப்படி தெரியப்படுத்தும் தகவலானது புகைப்படங்களாகவோ, வார்த்தைகளாகவோ இருக்கலாம். வார்த்தைகள் என்கிறபோது ஐந்து வரிகளுக்குள் சுருக்கமாகச் சொல்வது நல்லது. புகைப்படங்களாக இருந்தால் அந்தப் புகைப்படம் நீங்கள் சொல்லும் தகவல் பயனாளர் களுக்கு சென்று சேரும்விதமாக இருக்க வேண்டும். ஃபேஸ்புக்கில் பயனாளர்கள் படிக்க வருவதில்லை; ஸ்கேன் செய்ய வருகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டால் மேலே சொன்ன இரண்டு விஷயங்களும் சாத்தியமாகும்.