www.rupeedesk.in

பழச்சாறு தயாரிப்பு! சர்வசாதாரணமாக 30% லாபத்தை அள்ளலாம்!

பழச்சாறு தயாரிப்பு! சர்வசாதாரணமாக 30% லாபத்தை அள்ளலாம்!

பழச்சாறு தயாரிப்பு!



ஆண்டுக்கு எட்டு மாதம் வெயில் சுட்டெரிக்கும் நம்மூரில் சில்லென்று கிடைக்கும் குளிர்பானங்களுக்கு இருக்கும் மவுசே தனிதான். அதிலும் பழங்களைக் கொண்டு தயார் செய்யப்படும் பழச்சாறு தயாரிப்பு பிஸினஸ்தான் இப்போதைக்கு செம ஹிட்!


கடந்த சில வருடங்களாக இந்தியாவில் மது அல்லாத பானங்களுக்கான சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. பழச்சாறுகள், ஊட்ட பானங்கள், கார்போனேட்டட் குளிர்பானங்கள், டீ, காபி மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் போன்றவைதான் மது அல்லாத பானங்களாகக் கருதப்படுகிறது. வளர்ந்து வரும் பொருளாதாரச் சூழ்நிலை, அதிகரிக்கும் வருமான விகிதம், மாறிவரும் வாழ்க்கைமுறை, உடல்நிலை சம்பந்தமான விழிப்புணர்வு அதிகரித்து வருவது போன்ற காரணங்களால் நம் நாட்டில் இவ்வகை பானங்களுக்கான மவுசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்களிடையே உடல்நிலை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதும் முக்கிய காரணமாக இருக்கிறது.
பிளஸ், மைனஸ்!

இந்தத் தொழிலில் உள்ள சாதக மற்றும் பாதகமான விஷயங்கள் இதோ:

சாதகங்கள்!

* நகர மற்றும் கிராமப் புறங்களில் இருக்கும் சந்தை வாய்ப்பு.

* இந்த துறையில் நல்ல பிராண்ட்-ஆக வரும் வாய்ப்பு.

பாதகங்கள்!

* குறைந்த ஏற்றுமதி வாய்ப்பு.

* பிராண்டட் தயாரிப்புகளுக்கு போட்டியாக அதிகம் உலா வரும் போலித் தயாரிப்புகள்.


வாய்ப்புகள்!

* கிராமப்புறச் சந்தையில் பழச்சாறுகள் இன்னும் பெரிய அளவில் நுழையவில்லை.

* நுகர்வோரின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளதால், அதிகளவில் வருமானம் வர வாய்ப்பு இருக்கிறது.

* உள்நாட்டு சந்தை வாய்ப்பு அதிகளவில் இருக்கிறது.

* ஓரளவுக்கு இருக்கும் ஏற்றுமதி வாய்ப்புகள்.

அச்சுறுத்தல்கள்!

* வரி மற்றும் சட்ட முறைகள்.

* அயல்நாட்டு பிராண்டுகள்.


டெக்னிக்கல் விஷயங்கள்!

உடனடியாக அருந்தும் வகையில் மாம்பழம் மற்றும் ஆப்பிள் பழச்சாறுகள் தயாரிக்கத் தேவையான விஷயங்கள் இனி:

மாம்பழம் மற்றும் ஆப்பிள் சாறைத் தயாரித்து விற்பனைக்கு கொடுக்கலாம். ஒரு பேட்ச் என்பது 2,000 லிட்டர் பழச்சாறாகும். ஒரு நாளைக்கு 12 பேட்ச் பழச்சாறை தயார் செய்வதன் மூலம், நாளன்றுக்கு 24,000 லிட்டர் சாறு தயாரிக்க முடியும். வருடத்திற்கு 300 வேலை நாட்கள் எனில் 100 சதவிகிதம் வேலை பார்த்தால்  ஆண்டொன்றுக்கு 72 லட்சம் லிட்டர் பழச்சாறு தயாரிக்க முடியும்.

இடம்!

மேலே குறிப்பிட்டுள்ள உற்பத்தித் திறனுக்கு சுமார் 36,000 சதுர அடி வரை இடம் தேவைப்படும். இதில் கட்டடத்திற்கு மட்டும் சுமார் 9,000 சதுர அடி தேவைப்படும். இது செயல்முறை கட்டடம், ஸ்டோர் ரூம், ஜெனரேட்டர் ரூம், நிர்வாக அலுவலகம் உள்ளிட்டவை அடங்கியதாகும். கட்டடம் கட்டுவதற்கு 57.00 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.


மூலப்பொருள்!

பழச்சாறுக்கு தேவையான முக்கிய மூலப் பொருட்களான ரிவர்ஸ் ஆஸ்மாஸில் முறையில் சுத்தம் செய்யப்பட்ட தண்ணீர், சர்க்கரை, மாம்பழம் அல்லது ஆப்பிள் கூழ் ஆகியவை தேவைப்படும். மற்ற மூலப்பொருள்களான சிட்ரிக் ஆசிட், சோடியம் பென்சோயேட், சோடியம் சிட்ரேட், பொட்டாசியம் சார்பேட் ஆகியவை தேவைப்படும். வருடத்திற்கு 100 சதவிகிதம் திறனைக் கொண்டு தயார் செய்வதாக இருந்தால் 53 லட்சம் லிட்டர் தண்ணீரும், 10 லட்சம் டன் சர்க்கரையும்,       7 லட்சம் டன் மாம்பழக்கூழும், 1.75 லட்சம் டன் ஆப்பிள் சாறும் தேவைப்படும்.

மின்சாரம்!

இந்த பிஸினஸ் செய்ய 110 ஹெச்.பி. மின்சாரம் தேவைப்படும். மின்சாரம் இல்லாத நேரத்தில் 125 கிலோவாட் ஆம்பியர் கெபாஸிட்டியில் ஜெனரேட்டர் வைத்து கொள்ள வேண்டியது அவசியம்.

வேலை ஆட்கள்!

ஒரு புரொடக்ஷன் மேனேஜர், பிளான்ட் ஆபரேட்டர், குவாலிட்டி கன்ட்ரோல், அக்கவுன்ட்ஸ் மேனேஜர் என சுமார் 30 பேர் வேலைக்குத் தேவை.

தண்ணீர்!

ஒரு நாளைக்கு 75,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஒரு மணி நேரத்திற்கு 3,000 லிட்டர் தண்ணீர் ஆர்.ஓ.              பிளான்டுக்கு தேவை. அதற்காக ஆழ்குழாய் மூலம் தண்ணீர் எடுக்க வேண்டும். தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படாத மாதிரி பார்த்துக் கொள்வது நல்லது.


அனுமதிகள்!

இந்த பிஸினஸுக்கான தொழிற்சாலையைத் தொடங்க பஞ்சாயத்து யூனியனில் அனுமதி பெற வேண்டும்.

தீயணைப்பு துறையின் அனுமதி அவசியம்.

மாநில சுகாதாரத் துறையின் அனுமதி கட்டாயம்.

தொழிற்சாலை இன்ஸ்பெக்டரின் அனுமதி அவசியம்.

நகரத் திட்ட துறையின் அனுமதியும் வேண்டும்.

மாநில சுற்றுச்சூழல் தடுப்பு ஆணையத்திடமிருந்து அனுமதி தேவை.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மாசு தடுப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி இந்த தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும். அப்படி அமைக்கப் பட்டால் மட்டுமே இந்த ஆணையத்திடமிருந்து உரிய அனுமதி பெறமுடியும்.

இந்த தொழிலுக்குத் தேவையான பிளான்ட் மற்றும் இயந்திரத்திற்கு 190 லட்சம் ரூபாய் செலவாகும். இது மின்சாரம், போக்குவரத்து, இயந்திரத்தை பொருத்துதல் உள்ளிட்டவை களை சேர்ந்த தொகையாகும்.

எதிர்பாராத செலவுகள்!

கட்டட வேலைகள், இயந்திரங்கள் ஆகியவைகளுக்கு 5%, அதாவது சுமார் 12.50 லட்சம் ரூபாய் எதிர்பாராத செலவாக ஒதுக்கி வைப்பது நல்லது.

முந்தைய செலவுகள்!

இந்த தொழில் தொடங்கு வதற்கு முன்பே 7.30 லட்சம் ரூபாய் வரை செலவாகும். 83,000 ரூபாய் வரை சோதனை ஓட்டத்திற்கும், பிஸினஸ் ஆரம்பிக்கும்வரை முதலீட்டுக்கான வட்டி 6.50 லட்சம் ரூபாய் எனவும் இதை இரண்டாகப் பிரித்து வைத்துக் கொள்ளலாம்.

பெப்ஸியும் கோக்கும் போட்டியில்லை!

பழச்சாறு தொழிலில் வெற்றிகரமாகச் செயல்பட்டுவரும் தேனி மாவட்டம், காமய கவுண்டன்பட்டி ப்ரஜா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜா, பெப்ஸியும், கோக்கும் எனக்கு போட்டியே இல்லை என நெஞ்சு நிமிர்த்தி சொல்கிறார். அவரைச் சந்தித்தோம்.

''பழரச பானங்களுக்கு முக்கிய மூலப் பொருள் பல்ப் எனப்படும் பழக்கூழ். இது சீசனுக்கேற்ப குறைந்த விலையில் பழங் களை வாங்கி தயார் செய்ய வேண்டியது. உதாரணமாக, மாம்பழம் மே, ஜூன், ஜூலை மாதங்களில் நிறைய கிடைக்கும். நன்கு விளைந்த மாம்பழங்களைக் கொள்முதல் செய்து கழுவி, தோல் நீக்கி, விதை பிரித்து, கூழாக்கி தேவையான பிரிஸர்வேட்டிவ் சேர்த்து சேமித்து வைக்க வேண்டும்.

இந்த பழக்கூழை பெரிய பிளாஸ்டிக் பேரல்களில் சேமித்து வைக்கலாம். இவ்வாறு சேமித்தால் அதிகபட்சம் 6 மாதம் வரை கெடாமல் வைத்திருக்க முடியும். 2,000 ரூபாயில் தொழில் செய்ய நினைப்பவர் தனது தேவைக்கேற்ப பழக்கூழ் வாங்கிக் கொள்ளலாம். எஸென்ஸ் கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் பாட்டில், ரெடிமேட் லேபிள், ரெடிமேட் மூடிகளை வைத்து வீட்டிலேயே 200 மில்லி மேங்கோ ஜூஸ் 2.50 ரூபாய் அடக்கத்தில் தயார் செய்யலாம். கடைகளுக்கு 4 ரூபாய் விலைக்கு கொடுத்தால், கடைக்காரர்கள் ஐந்து அல்லது ஆறு ரூபாய்க்கு விற்றுவிடுவார்கள்.

தமிழகத்தில் மே, ஜூன், ஜூலை மாதங் களில்தான் பழச்சாறு விற்பனை அமோகமாக இருக்கும். ஆனால், மாம்பழ வரத்தும் மே, ஜூன், ஜூலையில்தான் அதிமாக இருக்கும். ஆக மூலப்பொருளை கொள்முதல் செய்து பழக்கூழாக மாற்றும் வேலையும், உற்பத்தி செய்தபொருளை விற்பனை செய்யும் வேலையும் ஒரே நேரத்தில் வந்து நிற்கும். மாம்பழம், திராட்சை, அன்னாசி, ஆப்பிள், ஆரஞ்சு என பல வகையான பழரசங்கள் தயார் செய்ய முடியும் என்றாலும் மாழ்பழச் சாறுக்கு இருக்கும் மவுசே அலாதி!''  

- ஊரோடி.

முதலீடு!

இந்த பிஸினஸைத் தொடங்கும் பங்குதாரரின் மூலதனமாக 86 லட்சம் ரூபாயும், கடன் 2 கோடி ரூபாயும் தேவை.

கடன்!

இந்த தொழிலுக்கு 2 கோடி ரூபாய் வரை கடன் பெறலாம். இதனை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

செயல்பாட்டு மூலதனம்!

முதல் வருடத்திற்கான செயல்பாட்டு மூலதனம் 77 லட்சம் ரூபாய். முதல் வருட செயல்பாட்டு மூலதனத்திற்கு 58 லட்சம் ரூபாய் வங்கியிலிருந்து கடன் பெற்றுக் கொள்ளலாம்.

லாபம்!

முதலீட்டில் 30% வரை லாபம் கிடைக்கும்.