www.rupeedesk.in

நெட்வொர்க் என் பலம்- சி.அம்பிகாபதி, ஃபாஸ்ட் டிராக்.

நெட்வொர்க் என் பலம்- சி.அம்பிகாபதி, ஃபாஸ்ட் டிராக்.




''கல்லூரியில் படிக்கும்போதே வீடு வீடாக வீடியோ கேசட் வாடகைக்கு விட்டு சம்பாதிப்பேன். இதன் மூலம் எங்கள் பகுதி மக்களோடு எனக்கு நல்ல தொடர்பு இருந்தது. கேபிள் டி.வி வந்தபோது அவர்கள் எல்லோருமே என்னை அந்த தொழிலை செய்யச் சொன்னார்கள். அதற்குத் தேவையான டிஷ், ஒயர்கள் வாங்ககூட என்னிடம் பணம் இல்லை.


டெபாசிட் பணம் திரட்டி இறங்கலாம் என்று நினைத்த நான் எங்கள் பகுதி மக்களிடம் ஆயிரம் ரூபாய் கேட்டேன். இன்னொரு பெரிய நிறுவனம் ஐநூறு ரூபாய் டெபாசிட் தந்தாலே இணைப்பு தருவதாகச் சொன்னது. ஆனால், எங்கள் பகுதி மக்கள் ஒவ்வொருவரும் 1,500 ரூபாய் தந்து என்னை தொழில் தொடங்க சொன்னார்கள். அதுதான் என் வாழ்வின் முதல் திருப்புமுனை.
அடுத்து வேறு ஏதாவது ஒரு தொழில் தொடங்க யோசித்தபோது, என் நண்பர்கள் கால் டாக்ஸிகளுக்கான வயர்லெஸ் திட்டம் பற்றி சொன்னார்கள். இதற்காக   பெங்களூருவுக்குப் போனேன். கால் டாக்ஸிகளுக்கு அங்கு இருந்த வரவேற்பை பார்த்த நான், அதை ஏன் சென்னையில் செய்யக்கூடாது என்று நினைத்தேன்.
ஆனால், மோட்டார் தொழிலை பழகாமல் செய்யக்கூடாது என பலரும் பயமுறுத்தினார்கள். நான் துணிந்து என் வீட்டை வங்கியில் அடமானம் வைத்து ஐம்பது கார்களை வாங்கி நிறுவனத்தைத் தொடங்கினேன். ஆரம்பத்தில் தொழில் சிறப்பாக இல்லை. மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நஷ்டம். ஐம்பது கார்களை நூறு கார்களாகப் பெருக்கியும் எதிர்பார்த்த வளர்ச்சி இல்லை. எப்போதும் ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டே இருந்தது.
இதை எப்படி சமாளிப்பது என்று யோசித்தேன்.  அந்த நூறு கார்களையும் ஓட்டுபவர்களுக்கே சொந்தமாக்கிவிடுவது என முடிவெடுத்தேன். ஆரம்பத்தில் ஓட்டுபவர்களுக்கே இதில் நம்பிக்கை இல்லை. போகப் போக இத்திட்டம் நல்ல பலன் தந்தது. ஓட்டுநர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்க, நிறுவனமும் வளர்ச்சி கண்டது. இந்த நெட்வொர்க்தான் என் பலம்.
இதன்பிறகுதான் திருச்சி, கோவை, பெங்களூரு, ஹைதராபாத் என விரிவடைந்தோம். இன்று சுமார் ஆறாயிரம் கார்கள் எனது நிறுவனத்தின் மூலமாகச் சுற்றி வருகின்றன. கால் டாக்ஸி நிறுவனம் வெற்றிகரமாகச் செயல்பட சொந்த வாகனங்களை வைத்திருக்கவேண்டும் என்கிற விதிமுறைகளை உடைத்ததே எங்களது இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இன்று வெளிநாட்டு நிறுவனங்கள் வந்தால்கூட எங்களால் போட்டி போட முடியும்!''