www.rupeedesk.in

பார்ட்னர் தந்த பாடம் - ஏ.சக்திவேல், பாப்பீஸ் நிட்வேர்.

பார்ட்னர் தந்த பாடம் - ஏ.சக்திவேல், பாப்பீஸ் நிட்வேர்.



''ஆட்டோமொபைல் படித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தேன். அந்த வேலை எனக்கு பிடிக்கவில்லை என்பதால், அதை விட்டுவிட்டு துணி பிஸினஸில் இறங்கினேன். வங்கிக் கடன் கிடைக்காத நிலையில் ரூபாய் ஐம்பதாயிரம் மட்டுமே முதலீடாகப் போட்டு தொழிலைத் தொடங்கினேன். புதிய துறை, போதிய அனுபவமில்லை என்றாலும் ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியோடு பிஸினஸில் அடியெடுத்து வைத்தேன்.

அந்த நாட்களில் திருப்பூரின் பின்னலாடை உற்பத்தி உள்ளூர் மார்க்கெட்டுகளை மட்டுமே நம்பியிருந்தது. இதையும் தாண்டிய சந்தையிருந்தால்தான் தொழிலில் வெற்றிபெற முடியும் என்பதால், ஏற்றுமதி செய்வோம் என்கிற யோசனையில் உழைக்கத் தொடங்கினேன். உலகத் தரத்திற்குத் தயாரிப்பு இருக்கவேண்டும் என்பதில்  தெளிவாக இருந்தேன். ஆர்டர்கள் தேடிவரும் அளவிற்கு  நாம் வரவேண்டும் என்பதுதான் என் இலக்காக இருந்தது.

தொழில் சிறப்பாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில் என்னோடு இணைந்து தொழில் செய்தவர் ஏமாற்றியதால் மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. எதிர்பாராத இந்த வீழ்ச்சி என்னை நிலைகுலைய வைத்தது. தொழிலில் மீண்டும் நிலைத்து நிற்க முடியுமா என்கிற பயம் ஒருபக்கம். மீண்டும் முதலீடு திரட்டவேண்டும், சந்தையைப் பிடிக்கவேண்டும் என்கிற நெருக்கடி இன்னொரு பக்கம். அதனால் முன்னைவிடவும் தீவிரமாக உழைக்கத் தொடங்கினேன். எனக்கான திருப்புமுனை அமைந்தது இந்த நேரத்தில்தான். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நேரங்காலம் பார்க்காமல் வேலை பார்த்தேன். இந்த விடாப்பிடியான உழைப்பினால் விட்ட இடத்தைப் பிடித்தேன்.

ஆரம்பத்தில் உற்பத்தி சார்ந்த வேலைகள் மட்டுமே எனக்கு தெரியும், மார்க்கெட்டிங் தெரியாது. இதற்காக நானே பல இடங்களுக்கு ஆர்டர் கேட்டுச் சென்று பழகினேன். புதிய டிசைனிங், புதிய டெக்னிக் என ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக கற்கவேண்டி இருந்தது. இப்போதுகூட வேலை நிமித்தமாக வெளிநாடு செல்கிறபோது இத்துறையில் நிகழும் மாற்றங்கள், புதிய தொழில்நுட்பம் போன்றவற்றை அறிந்துகொள்வதில் முனைப்பு காட்டுவேன்.  

நாமே பார்த்து ஆரம்பித்தத் தொழில் இது. இதில் வெற்றி பெற முடியவில்லை என்றால் வேறு எதிலும் வெற்றி பெற முடியாது என்கிற வேகம்தான் என் வெற்றிக்குக் காரணம். அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதார வீழ்ச்சிகள், மின் தட்டுப்பாடு, சாயப்பட்டறை பிரச்னை போன்ற பிரச்னைகள் வந்தாலும், அதிலிருந்து மீண்டு வருவோம் என்கிற தன்னம்பிக்கைதான் என்னை இன்னும் வேகம் குறையாமல் இயக்கிக்கொண்டிருக்கிறது.''