www.rupeedesk.in

வேஷ்டிக்கு மரியாதை தந்தோம். கே.ஆர்.நாகராஜ், ராம்ராஜ் காட்டன்.

வேஷ்டிக்கு மரியாதை தந்தோம். கே.ஆர்.நாகராஜ், ராம்ராஜ் காட்டன்.



சில வருடங்களில் நானும் இன்னொரு நண்பரும் சேர்ந்து பிஸினஸ் செய்யலாம் என தனியாக வந்தோம்.  நண்பர் உற்பத்தியைக் கவனிக்க, நான் மார்க்கெட்டிங் செய்தேன். இந்த வேலைக்காக தென் மாநிலங்களிலும் ஊர் ஊராகவும் அலைந்து ஆர்டர் வாங்கினேன். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிய வேண்டிய நிலை. நிறுவனத்தைப் பிரித்தபோது எனது பங்காக 85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வேஷ்டிகளை என்னிடம் தந்தார். அதை விற்று காசாக்க மீண்டும் மார்க்கெட்டிங் வேலையில் இறங்கினேன். கையில் இருக்கும் வேஷ்டிகளை விற்று முடித்தாலும், புதிய ஆர்டர்களையும் விட  முடியவில்லை. பல இடங்களிலிருந்தும் வேஷ்டி வாங்கித் தந்தேன்.
அடுத்தவரிடமிருந்து வாங்கித் தருவதற்குப் பதில் நாமே தயாரித்தால் என்ன என்று நினைத்து வேஷ்டி தயாரிப்பில் இறங்கினேன். வேஷ்டி என்றாலே கைத்தறிதான் என்பதை மாற்றி, விசைத்தறி மூலம் வெவ்வேறு ரகங்களில் தந்தேன். எளிமையாக, வாங்கக்கூடிய விலையில் தரமாக கிடைத்த வேஷ்டிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
வேஷ்டி தயாரிப்பில் இருந்ததால் நான் எங்கு சென்றாலும் வேஷ்டியில்தான் செல்வேன். பல இடங்களில் வேஷ்டி கட்டி சென்றதால் பல அவமானங்களையும் சந்திக்க நேர்ந்தது. வேஷ்டியை பாரம்பரியமான உடை என்று சொன்னாலும், பொது இடங்களில் வேஷ்டி கட்டி செல்பவர்களுக்கு சரியான மரியாதை இல்லை என்பதை உணர்ந்தேன். அதை மாற்றினால்தான் வேஷ்டி தொழிலில் ஜெயிக்க முடியும் என்று நினைத்து, அதற்காக வேலை செய்தேன். வெற்றி பெற்றவர்கள் விரும்பிக் கட்டுவது வேஷ்டி என்று விளம்பரங்கள் செய்தேன்.
வேஷ்டி என்றாலே வெள்ளைவெளேர் என்று ஒரே மாதிரியாக இருக்கும் என்பதை மாற்றி, பல்வேறு வகைகளிலும் தந்தோம். ஒவ்வொரு பகுதி மக்களும் விரும்பிக் கட்டும் வேஷ்டி ரகங்களை ஆராய்ந்து அதற்கேற்ப தயாரித்துக் கொடுத்தோம். இன்று 2,008 ரகங்கள் உற்பத்தி செய்கிறோம். வேஷ்டியையும், வேஷ்டி கட்டுபவர்களையும் தாழ்வாக நினைத்த நிலையை மாற்றி, வேஷ்டி கட்டுவதைக் கவுரவமாகவும், வேஷ்டியை ஒரு பிராண்டாகவும் மாற்றியதுதான் எங்கள் சாதனை.''