www.rupeedesk.in

எந்த ஊரில் என்ன வாங்கலாம்! - குமாரபாளையம் - காட்டன் கைலிகள்

எந்த ஊரில் என்ன வாங்கலாம்! - குமாரபாளையம் - காட்டன் கைலிகள்





ஈரோட்டிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது குமாரபாளையம். இந்த ஊர் ஈரோட்டுக்கு அருகில் இருந்தாலும் நாமக்கல் மாவட்ட எல்லையில் வருகிறது. சின்ன ஊர்தான் என்றாலும், இங்கிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் கைலி ஏற்றுமதியாகிறது. காரணம், இங்கு தயாராகும் கைலி தரத்துக்குப் பெயர் போனவை! இதுபற்றி நம்மிடம் பேசினார் குமாரபாளையம் கொங்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சேகர்.

''குமாரபாளையமும் அதற்குப் பக்கத்தில் இருக்கிற  பள்ளிப்பாளையமும் விசைத்தறி மூலம் கைலிகள் தயாரிப்பதில் தமிழகத்திலேயே முன்னணியில் உள்ளன. 1975-க்குப் பிறகு தமிழகத்தில் காட்டன் கைலிகள் பரவலாகப் புழக்கத்தில் வர ஆரம்பித்ததிலிருந்தே நாங்கள் உற்பத்தியைத் தொடங்கிவிட்டோம். அதாவது, தமிழக அளவில் காட்டன் கைலிகள் தயாரிப்பதில் தாய் வீடு குமாரபாளையம்தான் என்றே சொல்லலாம்.

இங்கு சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பி உள்ளனர். இங்கு எப்போதும் வேலைவாய்ப்புகளுக்குப் பஞ்சமே இருந்ததில்லை. தற்போதுகூட வேலை செய்வதற்கான ஆட்களுக்குக் கடும் பற்றாக்குறை இருக்கிறது.

கைலிகள் புழக்கத்தில் வந்த காலகட்டத்தில், கைலியில்       கஞ்சியை ஊற்றி நூலை உறுதியாக்கும் முறையை குமாரபாளையத்தில் உள்ளவர்களே கண்டுபிடித்தனர். நீண்டநாள் உழைக்கிற மாதிரி பல்வேறு புதிய வழிகளையும் எங்கள் ஊர் மக்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

கைலிகளின் தரத்தை நூல், எடையை வைத்து கண்டுபிடிக்க வேண்டும். பொதுவாக, ஒரு மீட்டர் துணியின் எடை 90-120 கிராம் வரை இருக்கும். இதில் ஒரு மீட்டர் 120 கிராம் எடை கொண்ட துணியில் நெய்யப்படுவதுதான் முதல் தரமான கைலி. இதன் விலை குமாரபாளையத்தில் 120 ரூபாய். ஆனால், வெளியூர்களில் இதன் விலை 150 ரூபாய். இரண்டாம் தரமான லுங்கிகள் இங்கு 80 ரூபாய்க்கே வாங்கலாம். இதை வெளியூர்களில் 120 ரூபாய்க்கு விற்கிறார்கள் பலர்'' என்றார் சேகர்.



கைலிகள் தவிர, தளபதி வேஷ்டி என்று அழைக்கப்படும் வேஷ்டிகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த வகை வேஷ்டிகள் கேரளாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், அதை தயாரிப்பதற்கு என்றே பல விசைத்தறிக் கூடங்கள் இருக்கின்றன. அதிலும், குறிப்பாக காவி நிறத்தில் தயாராகும் தளபதி வேஷ்டிகள்தான் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இவை தவிர, டிஸ்கோ துண்டு என்று சொல்லப்படும் துண்டுகளும் இங்கு தயாராகின்றன. இது கிலோ கணக்கில் எடையிட்டு விற்கிறார்கள். இதன் விலை ஒரு கிலோ 70 ரூபாய். இங்கு கிலோ கணக்கில் வாங்கி வருவதை வெளியூர்களில் தனித்தனியாக வெட்டி விற்பனை செய்துவிடுகிறார்கள்.

இனி ஈரோடு பக்கம் செல்பவர்கள் குமாரபாளையத்திற்கும் ஒரு விசிட் அடித்தால் குறைந்த விலையில் தரமான கைலிகளையும், துண்டுகளையும் கொஞ்சம் அள்ளிக்கொண்டு வரலாமே!