www.rupeedesk.in

மழைக் காலம் ; மோட்டார் இன்ஷூரன்ஸ் அவசியம் !

மழைக் காலம் ; மோட்டார் இன்ஷூரன்ஸ் அவசியம் !
மழையில் நனைந்தபடி டூவீலரை ஓட்டிச் செல்வது மனசுக்கு சந்தோஷமாக இருந்தாலும், அந்த நேரத்தில் பத்திரமாக வாகனத்தை ஓட்டிச் செல்வது ரிஸ்க்-ஆன விஷயம். சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் எந்த இடத்தில் பள்ளம் இருக்கும் என்று தெரியாது. எவ்வளவு கவனமாக வாகனத்தை ஓட்டினாலும், ஏதாவது பிரச்னை வந்து வாகனத்துக்கு அதிக செலவு வைத்து விடும். இப்படி திடீரென வரும் செலவிலிருந்து தப்பிக்க என்ன வழி?


எந்தவிதமான வாகனமாக இருந்தாலும் கட்டாயம் இன்ஷூரன்ஸ் எடுக்கவேண்டும்.  இன்ஷூரன்ஸ் எடுக்கும்போதே சில நூறு ரூபாயைக் கூடுதலாக பிரீமியம் செலுத்தி, அதிக பாதுகாப்பு பெறலாம். இதற்கு பாலிசி எடுக்கும் நிறுவனத்தில் என்னென்ன கூடுதல் கவரேஜ் உள்ளன என்பதை விசாரித்து அதன்பிறகு பாலிசி எடுப்பது நல்லது. மழைக் காலத்தில் வாகனங்களுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன என்பதைச் சொல்கிறேன்.

ஒருங்கிணைந்த காப்பீடு: வாகனத்திற்கு இன்ஷூரன்ஸ் எடுப்பவர்களில் சிலர், சட்டப்படியாக எடுக்கவேண்டிய மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ் பாலிசி மட்டும் எடுக்கிறார்கள். விபத்து ஏற்படும்போது எப்படியும் வாகனத்திற்கும் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, முடிந்தவரை வாகனம் மற்றும் மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ் ஒருங்கிணைந்த காப்பீட்டைத் தேர்வு செய்வது நல்லது.

இன்ஜின் கவர்: மழைக் காலம் வந்துவிட்டாலே நகரங்களில் பெரும்பாலான சாலைகள் தண்ணீரால் நிரம்பிவிடுகின்றன. தண்ணீரில் வாகனத்தை ஓட்டும்போது பல நேரங்களில் இன்ஜினில் தண்ணீர் புகுந்துவிட வாய்ப்புள்ளது. சில சமயங்களில் வாகனம் தண்ணீரில் திடீரென நின்றுவிடவும் வாய்ப்புண்டு. வாகனத்தின் இன்ஜினை ஆன் செய்ய முயற்சிக்கும்போது இன்ஜின்  பழுதாகவும் வாய்ப்புண்டு. சாதாரணமாக எடுத்து வைத்திருக்கும் பாலிசியில் இதற்கு க்ளைம் கிடைக்காது. இன்ஜின் கவர் பாலிசியைக் கூடுதல் பிரீமியம் செலுத்தி எடுத்திருந்தால் க்ளைம் பெறலாம்.

ஜீரோ தேய்மான கவரேஜ்: இந்தக் கூடுதல் கவரேஜ் மூலம் வாகனத்தில் விபத்தின்போது ஏற்படும் பாகங்களின் சேதத்திற்கு க்ளைம் பெறமுடியும். அதாவது, வாகனத்தை வாங்கி சில ஆண்டுகள் கழித்து ஏதாவது முக்கியமான பாகத்தில் சேதம் ஏற்பட்டால், அந்த சேதத்திற்கான க்ளைம் தொகையை அப்போதைய மதிப்பிற்குதான் க்ளைம் செய்ய முடியும். இந்தக் கூடுதல் கவரேஜை எடுத்து வைத்திருந்தால் புதிய பாகத்திற்கான தொகையை க்ளைம் செய்ய முடியும். வாகனத்தில் தேய்மானம் என்பது வேகமாக இருக்கும். முக்கிய பாகத்தில் ஏதாவது சேதம் ஏற்பட்டால், அந்த பாகத்தை மாற்றவேண்டி இருக்கும். அப்போது தேய்மானம் போக பாகத்தின் மதிப்பை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் புதிய பாகத்தை வாங்கி மாற்றிக்கொள்ள முழுத் தொகையையும் தருவதுதான் ஜீரோ தேய்மான கவரேஜ்.

ரிட்டர்ன் டு இன்வாய்ஸ்: ஏதாவது மரத்தடியில் வாகனத்தை நிறுத்தும்போது அந்த மரம் வாகனத்தின் மீது விழுந்து, வாகனம் முழுவதுமாக சேதம் அடைவது. அல்லது கீழ்தளத்தில் வாகனத்தை நிறுத்தி வைக்கும்போது மழை நீர் வாகனத்தில் புகுந்து வாகனம் முழுவதும் சேதம் அடைவது மற்றும் வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்வது, வாகனத் திருட்டு போன்ற சமயங்களில் இந்த ரிட்டர்ன் டு இன்வாய்ஸ் கூடுதல் கவரேஜ் கைதரும்.

பொதுவாக, ஒவ்வொரு வருடமும் வாகனங்களுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியைப் புதுப்பிக்கும்போது அதன் தேய்மானம் கழித்த மதிப்பிற்குதான் கவரேஜ் கிடைக்கும். ஆனால், இந்தக் கூடுதல் கவரேஜை எடுத்தால், புதிய வாகனம் வாங்குவதற்கு தேவைப்படும் முழுத் தொகையை க்ளைம் செய்ய முடியும்.  இன்றையச் சூழ்நிலையில் வாகனம் இல்லாத வாழ்க்கை என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது.  எனவே, சில நூறு ரூபாய் பிரீமியத்தில் பல ஆயிரங்களைப் பாதுகாப்பதுதான் புத்திசாலித்தனம் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.