www.rupeedesk.in

நீங்கள் சரியாகத்தான் மெயில் அனுப்புகிறீர்களா? பதில் சொல்லும் பூமராங்!

நீங்கள் சரியாகத்தான் மெயில் அனுப்புகிறீர்களா? பதில் சொல்லும் பூமராங்!



இன்று பெர்சனலாக பேசுவதற்கும், சாட் செய்வதற்கும் பல வழிகளைக் கையாண்டாலும், அலுவலக ரீதியான தகவல் தொடர்புக்கு நாம் பயன்படுத்துவது இ-மெயில்தான். அதிலும் நம்மில் அதிகம் பேர் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவைகளில் ஒன்று ஜிமெயில். மற்ற மெயில் சேவைகளை ஒப்பிடும் போது, ஜிமெயில் தரத்திலும், எளிமையிலும் அருமையாக இருந்தாலும், அதிலும் சில வசதிகள் இல்லை. குறிப்பாக நாம் அனுப்ப நினைக்கும் இ-மெயிலை சரியான நேரத்திற்கு டைம் செட் செய்தெல்லாம் அனுப்ப முடியாது. ஆங்கிலத்தில் அனுப்பும் போது நிறைய பிழைகள் கூட ஏற்படும். இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வாக அமைகிறது 'பூமராங்' (Boomerang) ஜிமெயில் எக்ஸ்டென்சன்.

ஜிமெயில் பயன்படுத்துபவர்கள் தங்களது மெயில்களை குறிப்பிட்ட நேரத்திற்கு அனுப்பும்படி, இதில் schedule செய்து வைத்துக்கொள்ள முடியும். மேலும் ஆங்கிலத்தில் நாம் அனுப்பும் மின்னஞ்சல்களின் தரத்தையும், உடனே பூமராங் மீட்டர் காட்டிவிடுகிறது. நாம் புதிய மெயில் ஒன்றை கம்போஸ் செய்யும்போதே, நமது மெயிலின் கருத்துக்களின் தன்மை, மெயில் சப்ஜெக்ட்டின்  தரம், அந்த மெயிலுக்கு ரிப்ளை வர எந்தளவு வாய்ப்புள்ளது என ஒவ்வொன்றாக புட்டுபுட்டு வைக்கிறது பூமராங்.
கூகுள் குரோம் ஸ்டோரில், இந்த பூமராங் எக்ஸ்டென்சனை இன்ஸ்டால் செய்து, நமது மெயிலில் இணைத்துவிட்டால் போதும். பூமராங் ரெடி. புதிதாக மெயில் கம்போஸ் செய்யும் போதே, அதன் அருகில் பூமராங் ரெஸ்பான்டபிள் என்னும் Tab ஓபன் ஆகிவிடும். அதில் Subject Length, Word Count, Question Count, Reading Level, Positivity, Politeness, Subjectivity என 7 விஷயங்கள் நமது மெயிலை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஆராய்கிறது. அது பற்றிக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்ப்போம்!



Subject Length :

நாம் அனுப்பும் மெயில்களில் நிச்சயம் ' Subject' இருந்தே ஆகவேண்டும். ஒருவேளை  Subject குறிப்பிடாமல் வெறும் மெயிலை மட்டும் அனுப்பினால், அது முழுமையான மெயிலாக இருக்காது. அதற்கு சரியான ரிப்ளையும் வராது. எனவே  Subject நிச்சயம் ஒரு மெயிலில் இருக்க வேண்டும். அதே போல, தற்போது பெரும்பாலான மெயில்கள் மொபைலில் படிக்கப்படுவதால்,  Subject நீளம், 3 முதல் 5 வார்த்தைகளில் இருக்க வேண்டும். அதுவே சரியான வடிவம். மேற்கண்ட கண்டிஷன்களுக்கு ஏற்றவாறு உங்கள்  Subject இருக்கிறதா என்பதை பூமராங் காட்டுகிறது.

Word Count:

நமது மெயிலில் இருக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கையை இது காட்டுகிறது. ஒரு சரியான மெயிலில் வார்த்தைகள் 50 முதல் 125 வரை இருந்தாலே, போதுமானது. அதுவும் மிக முக்கியமான கேள்விகள், அவசரமான விஷயங்கள் ஆகியவற்றை சொல்லும் போது, வார்த்தைகளின் எண்ணிக்கை இன்னும் குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் வீரியம் அதிகரிக்கும். இதனை பூமராங் கணக்கிட்டு சொல்கிறது.



Question Count:

உங்கள் மெயிலுக்கு சரியான ரெஸ்பான்ஸ் வர வேண்டுமெனில், உங்கள் மெயிலில் குறைந்தது 3 கேள்விகளாவது இடம் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான், உங்கள் மெயிலைப் படிப்பவர்களுக்கு அதற்கு ரிப்ளை செய்யத் தூண்டும். அதே சமயம் மிக அதிகமான கேள்விகள் இடம் பெற்றிருந்தால், அது படிப்பவர்களுக்கு எரிச்சலைத் தூண்டலாம். இந்த கேள்விகளின் எண்ணிக்கையை வைத்தும், நமது மெயிலை ஆராய்கிறது பூமராங்.



Reading Level:

நீங்கள் அனுப்பும் மெயில் படிப்பதற்கு எந்தளவு எளிமையாக இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. நீங்கள் எந்தளவு எளிமையான வார்த்தைகளை பயன்படுத்தி உங்கள் மெயிலை வடிவமைக்கிறீர்களோ, அந்தளவு அதன் தரமும் உயரும். எனவே மிகவும் சிக்கலான, உயர்தரமான ஆங்கில வார்த்தைகளைப் போட்டு சிக்கலாக்கிக் கொள்ள வேண்டாம்.
மேலே நாம் பார்த்த ஆப்ஷன்கள் எல்லாம் இலவசமாக உபயோகிக்கக் கூடியவை. நாம் பணம் கட்டிப் பயன்படுத்துவதற்காக,  Positivity, Politeness, Subjectivity என்னும் மூன்று ஆப்ஷன்களையும் தந்துள்ளது பூமராங். இது நாம் அனுப்பும், மெயில்களின் நளினம், அதிலுள்ள நேர்மையான விஷயங்கள், மெயிலின் வடிவம் ஆகியவற்றை ஆராய்ந்து கூறுகிறது. ஆனால் நமக்கு இதன் தேவை மிகவும் குறைவுதான் என்பதால், இலவச ஆப்ஷன்களே போதுமானவையாக இருக்கின்றன.