www.rupeedesk.in

ஹெல்த் இன்ஷூரன்ஸ் போர்ட்டபிலிட்டி?

பாலிசிதாரர்களுக்குப் பயன் அளிக்குமா ஹெல்த் இன்ஷூரன்ஸ் போர்ட்டபிலிட்டி?


ஒரு நிறுவனத்தில் எடுத்த செல்போன் எண்ணை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதி ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. இதேபோல, ஒரு நிறுவனத்தில் எடுத்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை வேறு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதி வந்திருக்கிறது.

இதை இன்ஷூரன்ஸ் போர்ட்ட பிலிட்டி என்கிறார்கள். அதாவது, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தபின் அந்த நிறுவனத்தில் சேவைக் குறைபாடு இருந்தால், அந்த பாலிசியை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ள முடியும். இந்த வசதியை ஐஆர்டிஏ இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிமுகப்படுத்தினாலும், அது குறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் குறை வாகவே உள்ளது. இந்த புதிய வசதியின் கீழ் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எப்படி மாற்றுவது என்பது குறித்துப் பார்ப்போம்.

ஏன் போர்ட்டபிலிட்டி?

இந்தியாவில் பல இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளன. ஒரு நிறுவனத்தில் மெடிக்ளெய்ம் பாலிசி எடுத்தபின் அதன் சேவை திருப்திகரமாக இல்லை எனில், அந்த பாலிசியை வேறு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ள முடியும். இதற்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது. தவிர, நீங்கள் ஏற்கெனவே எடுத்த பாலிசியில் இருந்த வசதிகள், நிறுவனம் மாறியபின்னும்  கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

 முக்கியமான 45 நாட்கள்!

ஏற்கெனவே உள்ள இன்ஷூரன்ஸ் பாலிசியைப் புதுப்பிப்பதற்கு 45 நாட்களுக்குமுன் இந்த வசதியைப் பயன்படுத்தி, ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு இன்ஷூரன்ஸ் பாலிசியை மாற்றிக் கொள்ள முடியும். தனிநபர், ஃப்ளோட்டர் பாலிசிகளில் மட்டும் இல்லாமல் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளிலும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

உதாரணமாக, வேலை பார்க்கும் நிறுவனத்தில் வைத்திருக்கும் குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியில் குடும்ப உறுப்பினர்களுக்கான கவரேஜ் இருக்கும். இதில் ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு மாறும் போது குடும்ப உறுப்பினர்களுக்குக் கவரேஜ் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில், குரூப் இன்ஷூரன்ஸ் வைத்திருக்கும் நிறுவனத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு, போர்ட்டபிலிட்டி வசதியின் கீழ் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியும். குரூப் இன்ஷூரன்ஸ் இருக்கும் நிறுவனத்தில் தான் இந்த பாலிசியை எடுக்க முடியும். வேறு நிறுவனத்தில் பாலிசி எடுக்க இந்த  போர்ட்டபிலிட்டி வசதியைப் பயன் படுத்த முடியாது.



மேலும், ஏற்கெனவே பாலிசி வைத்திருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் நோ-க்ளெய்ம் இருந்தால், அதை இழக்க நேரிடும். அதாவது,       நோ-க்ளெய்ம் போனஸ் மூலமாகக் கூடுதல் கவரேஜ் வைத்திருந்தால், அந்த மொத்த கவரேஜூக்கான பிரீமியத்தைப் புதிய இன்ஷூரன்ஸ் நிறுவனம் வசூலிக்கும். ஏனெனில், நோ-க்ளெய்ம் போனஸ், பிரீமியத்தில் தள்ளுபடி என்பதெல்லாம் ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் வித்தியாசப்படும்.

 என்ன வசதி?

போர்ட்டபிலிட்டியை பயன்படுத்தி பாலிசியை வேறு நிறுவனத்துக்கு மாற்றும்போது காத்திருப்புக் காலம், ஏற்கெனவே உள்ள நோய்களுக்கான கவரேஜ் போன்றவை அப்படியே புதிய பாலிசிக்கு மாற்றிக்கொள்ள முடியும். அதாவது, சில நோய்களுக்குக் காத்திருப்புக் காலம் 4 ஆண்டு என வைத்துக்கொள்வோம். ஏற்கெனவே உள்ள நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பாலிசி வைத்திருந்தால், புதிய நிறுவனத் தில் மீதமிருக்கும் ஒரு வருடம்தான் காத்திருப்புக் காலமாக இருக்கும்.

 எப்போது மாறலாம்?

இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கும் சேவையில் ஏதாவது குறைபாடு இருக்கும்போது இந்த வசதியைப் பயன்படுத்தலாம். அதாவது, ஒவ்வொரு முறை க்ளெய்ம் செய்யும்போதும் காலதாமதம் ஏற்படுவது, நெட்வொர்க் மருத்துவமனை குறைவாக இருப்பது, இலவச தொலைபேசி சேவையில் சிக்கல், டிபிஏயின் தவறான அணுமுறை போன்ற சமயங்களில் இந்த வசதியைப் பயன்படுத்தி, நிறுவனம் மாறலாம்.

போர்ட்டபிலிட்டி வசதியைப் பயன்படுத்தி, பாலிசியை மாற்றும்முன் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பது குறித்து நியூ இந்தியா அஷ்ஷூயூரன்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் சேகர் சம்பத்திடம் கேட்டோம்.

 மாறும்முன்..!

“இன்ஷூரன்ஸ் பாலிசியில் போர்ட்டபிலிட்டி வசதியை பெரும்பாலும் வயது அதிகரிக்கும்போது தான் மாற்றுவோம். அந்த சமயத்தில் பாலிசிதாரர்களின் ரிஸ்க் அதிகரித் திருக்கும். பிரீமியமும் வித்தியாசப்படும். அதாவது, ஏற்கெனவே உள்ள நிறுவனத்தில் இருந்த பிரீமியம் புதிய நிறுவனத்தில் இருக்காது. எனவே, பாலிசியை மாற்றும்முன் புதிய பாலிசிக்கான பிரீமியத்தைக் கவனிப்பது நல்லது. சில நேரங்களில் அதிக ரிஸ்க் உள்ளது என உங்களின் பாலிசியை நிராகரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

போர்ட்டபிலிட்டிக்கு விண்ணப்பம் செய்த 7 நாட்களுக்குள் புதிய இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தகவல் களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதில் ஏதாவது காலதாமதம் ஏற்பட்டா லும் விண்ணப்பத்தை நிராகரிக்கும் உரிமை புதிய இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு உள்ளது. தகவல்கள் பகிர்ந்து கொண்ட 15 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி குறித்த தகவல்களை நிறுவனம் தெரிவிக்க வேண்டும். அதாவது, பாலிசியை வழங்குகிறார்களா, இல்லையா என்பதைத் தெரிவிக்க வேண்டும்’’ என அனைத்து விதிமுறைகளையும் கூறினார்.

 பிரீமியம்!

பழைய இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பிரீமியமும், புதிய இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பிரீமியமும் வித்தியாசப் படுவதற்கான வாய்ப்புள்ளது. அதாவது, உங்களின் ரிஸ்க் அடிப்படையில் இந்த பிரீமியம் இருக்கும். எனவே, பாலிசியை மாற்றுவதற்குமுன் பிரீமியம் எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.

 கவரேஜ்!

ஏற்கெனவே பாலிசியில் உள்ள கவரேஜ் தொகை, காத்திருப்புக் காலம், ஏற்கெனவே உள்ள நோய்களுக்கான கவரேஜ் ஆகியவை அப்படியே இருக்கும். ஆனால், பிற கவரேஜ் அதாவது, ஒரு சில நோய்களுக்காகக் கவரேஜ் தொகையில் கோ-பேமென்ட், சில மருத்துவப் பொருட்களுக்கு க்ளெய்ம் இல்லை போன்றவை இருக்கும்.

 பிற வசதி!

போர்ட்டபிலிட்டி வசதியின் கீழ் பாலிசியை மாற்றும்போது புதிய நிறுவனத்தில் நெட்வொர்க் மருத்துவமனைகள் அதிகம் உள்ளதா, கேஷ்லெஸ் வசதி இருக்கிறதா, அறை வாடகைக்கான சதவிகிதம் என்ன, பாலிசியைப் புதுப்பிப்பதற்கான கால அளவு என்ன?, எந்தெந்த நோய்களுக்குக் கோ-பேமென்ட் உள்ளது, எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும், க்ளெய்ம் நடைமுறை என்ன என்பதை நன்கு ஆராய்ந்து பார்த்தபிறகு பாலிசியை மாற்றுவது நல்லது.