www.rupeedesk.in

எந்த ஊரில் என்ன வாங்கலாம் - ஈரோடு - மஞ்சள்

எந்த ஊரில் என்ன வாங்கலாம் - ஈரோடு - மஞ்சள்




இத்தனை சிறப்புகளையும் கொண்ட மஞ்சள் விலையை இந்திய அளவில் தீர்மானிக்கும் ஊர் எது தெரியுமா? நம்ம ஈரோடுதான். ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் அதிக அளவில் விளைவதால் ஈரோட்டிற்கு மஞ்சள் மாநகர் என்றே பெயர். இந்தியாவில் உற்பத்தியாகின்ற மஞ்சளில் 23 சதவிகித மஞ்சள் இங்குதான் உற்பத்தியாகிறதாம். எனவே, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் மொத்த வியாபாரிகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈரோடு மார்க்கெட்டைத்தான் நம்பி இருக்கின்றனர். விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்வதற்கு இங்குள்ள வேளாண்மை மையம் உதவி செய்கிறது. இங்கு உற்பத்தியாகின்ற மஞ்சளை விவசாயிகள் ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.

இது குறித்து ஈரோடு மஞ்சள் விவசாயிகள் சிலரிடம் பேசினோம். ''தமிழகத்தைவிட ஆந்திராவில் மஞ்சள் உற்பத்தி அதிக அளவில் இருந்தாலும், ஈரோட்டில்தான் மஞ்சளுக்கான விலை நிர்ணயம் நடக்கிறது. அதற்குக் காரணம் வெளி மாநிலங்களிலிருந்தும் இங்குள்ள மஞ்சள் சந்தைக்கு மஞ்சள் வரத்து இருப்பதுதான். ஈரோட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கோபிசெட்டிபாளையம் சார்ந்த பகுதிகளில் விளையும் மஞ்சளுக்கு நிறம் அடர்த்தியாக இருப்பதால் எப்போதுமே ஈரோட்டு மஞ்சளுக்கு மவுசு அதிகம்'' என்கிறார்கள்.

இங்குள்ள வேளாண் விற்பனை சந்தையில் மட்டும் கடந்த வருடம் 70 லட்சம் மஞ்சள் மூட்டைகள் விற்பனையாகியுள்ளது. பொதுவாக மருந்து தயாரிப்பு மற்றும் கெமிக்கல் நிறுவனங்கள் தங்களது முகவர்கள் மூலம் அதிக அளவில் கொள்முதல் செய்கின்றன. உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் இங்குதான் கொள்முதல் செய்கின்றன. விவசாயிகளிடமிருந்து நேரடியாகச் சந்தைக்கு வரும்  மஞ்சளை அப்படியே பயன்படுத்த முடியாது. அதை வாங்கிச்சென்று பதப்படுத்தி, பாலிஷ் செய்துதான் பயன்பாட்டுக்கான மஞ்சளாக மாற்றுகிறார்கள்.

ஈரோட்டிலுள்ள வேளாண் விற்பனை மையத்தில் தினசரி காலை மஞ்சள் விற்பனை ஜரூராக நடக்கிறது. இங்கு 100 கிலோ கொண்ட மூட்டைகள் தர வாரியாக விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் தங்கள் தேவைக்கேற்ப மூட்டைகளை வாங்கிச் சென்று, பதப்படுத்தி சில்லறை விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

ஈரோடு மையப் பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் வேளாண்மை விற்பனை மையத்தில்தான் மொத்த விற்பனை நடக்கும் என்றாலும், இதற்கு அருகிலேயே மஸ்ஜித் தெரு மற்றும் கந்தசாமி செட்டி தெருக்களில் உள்ள மொத்த வியாபாரக் கடைகளில் சகாய விலைக்கு மஞ்சள் கிழங்கு வாங்கிவிட முடியும். இங்கிருந்துதான் பல்வேறு ஊர்களுக்கும் சிறு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

பொதுவாக, வெளியூர்களில் கிலோ 90 முதல் 120 வரை விற்கும் மஞ்சளை இங்கு 70 ரூபாய்க்கு வாங்கலாம். தரத்தைப் பொறுத்து விலை வித்தியாசம் இருக்கும். அக்கம்பக்கத்தினருக்கும் சேர்த்து வாங்கும்போது 50 கிலோவாக வாங்கினால் இன்னும் குறைவான விலையில் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

ஐம்பது வீடு, நூறு வீடு என வசிக்கும் ஃப்ளாட்வாசிகள், சிறிய குடியிருப்புவாசிகள் கூட்டாகச் சேர்ந்து ஈரோட்டில் மொத்தமாக மஞ்சளை வாங்கினால், கிலோவிற்கு 30 முதல் 40 ரூபாய் வரை குறைவாகக் கிடைக்கும். இனி, ஈரோடு செல்பவர்கள் மறக்காமல்

மஞ்சளை வாங்கி வரலாமே!