www.rupeedesk.in

தவிர்க்க வேண்டிய வீண் செலவுகள்!

தவிர்க்க வேண்டிய வீண் செலவுகள்!


1. சம்பளம் வாங்கியவுடன் நண்பர்களை அழைத்துக்கொண்டு  காஸ்ட்லி ரெஸ்டாரன்ட்டுக்குப் போய்ச் சாப்பிடுவது, ஷாப்பிங் செய்வது என இன்றைய இளைஞர்களில் பலர் எக்கச்சக்கமாக செலவு செய்கிறார்கள். ஜாலி என்கிற பெயரிலும் ரிலாக்ஸ் என்கிற எண்ணத்திலும் இவர்கள் செய்கிற இந்தச் செலவுகள் எந்த அளவுக்கு அவசியமானது என நினைத்துப் பார்ப்பதே இல்லை. முடிந்தவரை இதைத் தவிர்க்கலாம்.

2. இ-காமர்ஸ் நிறுவனங்கள் தரும் ஆஃபர்களைப் பார்த்துவிட்டு தேவை யில்லாதப் பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள் சிலர். 40% தள்ளுபடி விலை என்பதால் ஒன்றுக்கு இரண்டு செல்போன்களை வாங்கி வைத்திருந்து என்ன பயன் என யாரும் யோசிப்பதில்லை. உங்கள்

செல்போனில் ஆஃபர்ஸ் பற்றி தகவல் தரும் எந்த ஆப்ஸுக்கும் நோட்டிஃபிகேஷன் அமைப்பை ஆன் செய்து வைக்காதீர்கள். காரணம், தினமும் வரும் டாப்-அப் செய்திகள் உங்களை அந்தப் பொருளை ஏதாவது ஒருநேரத்தில் வாங்கத் தூண்டும்.  அதேபோல, கூடுதலாக செலவு செய்யத் தூண்டும் கேஷ் பேக் ஆஃபர்களையும் தவிர்க்கலாம்.

3. இன்றைய இளைஞர்கள் டூவீலரை அடிக்கடி மார்டனாக மாற்ற அதிகம் செலவு செய்கிறார்கள். ரிம்களை மாற்றுவது, ஹாரன்களை மாற்றுவது, ரேஸ் பைக்குகளைப்போல வண்டியின் அமைப்புகளை மாற்றுவது, பெயின்டிங் செய்வது என நிறைய  செலவு செய்வதைத் தவிர்த்தால், நிறைய பணத்தை மிச்சப்படுத்த முடியுமே!

4. எந்த சினிமா படம் வெளியானாலும், அதை முதல் நாளன்றே பார்த்துவிடுவது என சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள். இதற்காக இவர்கள் அதிகக் கட்டணம் கொடுக்கக்கூட தயங்குவதில்லை. இப்படி அவர்கள் சினிமாவுக்குப் போவதுடன், நண்பர்களையும் பெருமையோடு அழைத்துச் செல்கிறார்கள். இதனால் சம்பளத்தின் கணிசமான பகுதி கணக்கில் வராமலே காலியாகிவிடுகிறது. இந்தச் செலவைத் தவிர்த்து, சேமித்தால் பெரும் பணம் சேருமே!



5. எல்சிடி டிவி இருந்தாலும், புதிதாக வந்த எல்இடி டிவியை வாங்குவது, ஒரு டன் ஏசி ஏற்கெனவே வீட்டில் இருக்க, இரண்டு டன் ஏசியை வாங்குவது, நல்ல ஆண்ட்ராய்டு போன் இருந்தாலும், புதிதாக வந்த போனை தேவையேயில்லாமல் வாங்குவது என நல்ல கண்டிஷனில் இருக்கும் பொருட்களையே தூக்கிப் போட்டுவிட்டு புதிதாக வாங்குவதைத் தவிர்க்கலாம். அந்தப் பணத்தை நல்ல லாபம் தரும் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து வைக்கலாம்.

6. எடுத்ததற்கெல்லாம் ட்ரீட் கொடுப்பது இன்றைக்கு கலாசாரமாகிவிட்டது. மாத பரீட்சையில் பாஸாவது தொடங்கி, புராஜெக்ட் முடிப்பது வரை எல்லாவற்றுக்கும் ட்ரீட் கேட்பதும், தருவதும் வாடிக்கையான விஷயமாகி விட்டது. இதற்காக ஒருவர் ஒரு மாதத்துக்கு 1,000 - 2,000 ரூபாய் வரை செலவு செய்கிறார். இந்தச் செலவைத் தவிர்க்கலாம்.

7. வீட்டில் நடைபெறும் பிறந்தநாள், திருமணநாள் போன்ற பார்ட்டிகளில் தங்களின் பொருளாதாரச் சூழலுக்கு மீறி பந்தாவுக்காக, அடுத்தவர்கள் வியக்க வேண்டும் என செலவு செய்வதை முடிந்தவரைத் தவிர்க்கலாம்.

8. ஃபேஷன் மோகம் சிலருக்கு அதிகமாக இருக்கும். கடன் வாங்கியாவது கண்ணில் படும் புது ரக ஆடைகளை வாங்கிக் குவிப்பதையும், தேவைக்கும், தகுதிக்கும் அதிகமாக அழகு சாதனப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பதையும் கொஞ்சம் குறைக்கலாம்.


9. ஐந்து நிமிடத்தில் பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை அரைமணி நேரம் பேசுவதையும், தேவையே இல்லாமல் எஸ்எம்எஸ் அனுப்புவதையும் தவிர்த்தால் செல்போன் கட்டணம் பாதியாகக் குறையும்.

10. சைக்கிளில் போகக்கூடிய தூரமே இருக்கும் காய்கறிக் கடைக்கு பைக்கில் போவதையும், பஸ்ஸில் போவதற்கான சூழல் இருந்தும் ஆட்டோ, கால்டாக்ஸி யில் போவதையும் தவிர்க்கலாம்.