www.rupeedesk.in

நிறுவன தலைவர்களுக்கு உதவும் 5 ஆப்ஸ்கள்

நிறுவன தலைவர்களுக்கு உதவும் 5 ஆப்ஸ்கள்!



இதுநாள்வரை ஒரு லேப்டாப்பை வைத்து நாம் செய்த பல வேலைகளை, இப்போது ஒரு செல்போனை வைத்து செய்துவிட முடிகிற அளவுக்கு தொழில்நுட்பம் மாறியிருக்கிறது. இந்த மாற்றத்துக்கு அடிப்படையாக இருக்கின்றன சில ஆப்ஸ்கள். ஒரு கல்லூரி மாணவன் தொடங்கி ஒரு பெரிய நிறுவனத்தின் சிஇஓ வரை அனைவருக்கும் உதவும் விதவிதமான ஆப்ஸ்கள் குவிந்து கிடக்கின்றன. இதில் நிறுவனங்களின் தலைவர்களாக இருக்கும் சிஇஓக்களுக்கு உதவும் டாப் ஆப்ஸ்களைப் பார்ப்போம். இந்த ஆப்ஸ்கள் நிறுவனங்களின் உயர்பதவியில் இருப்பவர்கள் அனைவருக்கும் கட்டாயமாகத் தேவைப்படும்.

1 ஆபீஸ் ஆப்ஸ்!

பொதுவாக, சிஇஓ போன்ற உயர்பதவி வகிப்பவர்களுக்கு அலுவலக வேலைகளை அலுவலகத்தைவிட்டு வெளியில் உள்ளபோது கவனிக்க வேண்டிய தேவை அதிகம் உள்ளது. அப்படிப்பட்டவர் களுக்கு முதலில் மிகவும் தேவையான ஆப்ஸ் தனது டாக்குமென்ட்டுகளைத் தயார் செய்ய உதவும் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்தான். இது ஐபோன், ஐபேடில் ஆப்பிள் ஆபீஸ் என்ற பெயரில் இருக்கும். இதில் அலுவலகத்தின் ஒரு செய்தி அல்லது தகவல்களைப் பார்க்க உதவும் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் வேர்டு, திட்ட விளக்கங்களுக்கு உதவக்கூடிய பவர் பாயின்ட், அலுவலக கணக்குகளைப் பார்க்கக்கூடிய எக்ஸ்எல் ஆகியவை இடம்பெற்றிருக்கும். இந்த ஆப்ஸ், ஒரு டாக்குமென்ட்டை பார்த்து, படித்து, அதனை மாற்றியமைத்து அதனை நேரடியாக மின்னஞ்சல் அல்லது சமூக வலைதளங்கள் மூலம் மற்றவர்களுக்கு அனுப்பும் விதமாக அமைந்துள்ளது.

ஆப்பிள் போனில் இந்த ஆப்ஸ் இடம்பெற்றிருக்கும். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இது இலவசமாகக் குறைந்த வசதிகளுடன் தரப்பட்டுள்ளது. அதிக மற்றும் முழுமையான அப்டேட் உள்ள ஆப்ஸ்கள் கட்டண ஆப்ஸாக உள்ளன. சிஇஓக்கள் தங்கள் அலுவலகத் தகவல்களை உடனுக்குடன் அறிய மற்றும் தெரிவிக்க இந்த ஆப்ஸ் எளிமையாக உதவும்.

2 தொலைத்தொடர்பு ஆப்ஸ்கள்!

ஆபீஸுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளத் தொலைத்தொடர்பு ஆப்ஸ்கள் அதிக அளவில் உதவி செய்வதாக இருக்கின்றன. சில முக்கியமான கூட்டங்கள், கருத்தரங்கங்கள் ஆகியவற்றில் சிஇஓக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்பதால், அவர்கள் பங்கேற்க முடியாத நேரங்களில் பெரும்பாலும் அவர்களுக்கு உதவும்விதமாக இருப்பது இந்த ஆப்ஸ்கள்தான். இந்தத் தொலைத்தொடர்பு ஆப்ஸ்களில் மிகவும் உதவிகரமாக இருப்பது ஸ்கைப். இதில் வாய்ஸ்கால், வீடியோகால் மூலம் நிறுவனத்தோடு தொடர்பில் இருக்கலாம். குறைந்த கட்டணத்தில் செல்போன் மற்றும் லேண்ட்லைன் போன்களுக்குத் தொடர்புகொள்ளலாம்.

3ஜி மற்றும் வை-ஃபையில் இயங்கும் ஸ்கைப், கான்ஃப்ரன்ஸ் மற்றும் பயிற்சி வகுப்புகளுக்கு மிகவும் உதவியாக உள்ளது. இந்த ஆப்ஸை சிஇஓக்களின் பயணச் செலவுகளைக் குறைக்கும் உத்தியாகவும் பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி, நிறுவன பணியாளர்களோடு எப்போதும் தொடர்பில் இருப்பது போன்ற உணர்வையே இது ஏற்படுத்துவதால், இது நிறுவன தலைவர் களுக்கு உதவியாக உள்ள ஆப்ஸ்களின் வரிசை யில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. இதேபோன்ற வசதிகளுடன் வைபர், மேஜிக் ஜாக், ஃபேஸ் டைம் ஆகிய ஆப்ஸ்களும் உள்ளன.

3 நோட் ஆப்ஸ்!

நிறுவனத் தலைவர்கள் சில முக்கியமான மீட்டிங்களுக்குத் தயாராகும்போது அதற்கான குறிப்புகளை உடனே தயார் செய்ய பரிந்துரைக்கப் படும் ஆப்ஸ்கள் மூன்று. அவை, ஒன் நோட், எவர் நோட் மற்றும் லெக்சர் நோட்.

இவை மூன்றும் ஏறக்குறைய ஒரேமாதிரியான செயல்பாடுகளைக் கொண்ட ஆப்ஸ்கள்தான். ஒன் நோட் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆப்ஸ்.  இதில் இயங்க ஒரு மைக்ரோசாஃப்ட் கணக்குத் தேவை. நீங்கள் தயார் செய்யும் குறிப்புகளை இதன் மூலம் மற்றொருவருடன் நேரடியாகப் பகிர  முடியும். இதில் நீங்கள் புகைப்படங்களையும் சேர்க்க முடியும்.


எவர் நோட் ஆப்ஸில் தயாரிக்கப்படும் குறிப்புகள் அனைத்து மொபைல் போன்களிலும் பயன்படுத்தும் அளவுக்கு எளிதாக இருக்கும். இதில் தயாரிக்கப்படும் குறிப்புகள் எளிதாகத் தேடும் அளவுக்கு இதன் தேடுதல் பக்கம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனைப் பிடிஎஃப் பக்கங்களாககூட மாற்றிக்கொள்ளலாம்.

லெக்சர் நோட் ஒருவர் கையால் எழுதுவது போன்ற வடிவத்திலேயே செல்போன் திரையில் எழுதி குறிப்புகளை எடுக்க உதவும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ் ஆகும். இது கட்டண ஆப்ஸ். இதற்கான மாதிரி பயன்பாட்டு ஆப்ஸ் இலவசமாகக் கிடைக்கிறது.

4 நினைவக ஆப்ஸ்!

பெரும்பாலான சிஇஓக்கள் தங்கள் செல்போனுக்கு வரும் தகவல்களைச் சேமித்து வைக்கவேண்டிய சூழல் இருக்கும். தற்போது செல்போன்கள் அதிக அளவு இன்டர்னல் மெமரியோடு வந்தாலும், மிகப் பெரிய ஃபைல்களைச் சேமித்து வைக்க வசதியாக இல்லை என்பதால் அதற்கு உதவியாகச் சில நினைவக ஆப்ஸ்கள் உள்ளன.

இதில் முக்கியமானது ட்ராப் பாக்ஸ்தான். 2 ஜிபி வரை இலவசமாகச் சேமித்துக் கொள்ளலாம். பிறகு கட்டணம் செலுத்தி, 100 ஜிபி வரை சேமித்து வைத்துக்கொள்ளும் அளவுக்குச் சிறப்பான ஆப்ஸாக உள்ளது. இதில் நீங்கள் சேமித்து வைக்கும் தகவல் களை மற்றவர்களுடன் பகிரும் வசதியும் உள்ளது.

இதேபோன்ற வசதியுடன் இலவசமாகக் கிடைக்கும் சில சிறந்த ஆப்ஸ்களும் உள்ளன. ஒன் ட்ரைவ், கூகுள் ட்ரைவ் ஆகிய ஆப்ஸ்கள் நீங்கள் புதிதாகத் தகவல்களை உருவாக்கி, அதனை யாருடன் பகிர்ந்து கொள்வது, அதனை மாற்றியமைக்க யாருக்கு அனுமதி வழங்குவது என்ற அளவுக்குத் தகவல்களைச் சேமித்து வைக்கும் வசதியுடன் உள்ளன.

ஆப்பிள் போன்களில் ஐ-க்ளவுட் வசதியில் 5 ஜிபி வரை இலவசமாகச் சேமிக்கலாம். பின்னர் தேவைப்படும் மெமரிக்குக் கட்டணம் செலுத்தி அதிகரித்துக் கொள்ளலாம். மாதத்துக்கு 60 ரூபாய் என்ற அளவில் இருந்து கூடுதல் நினைவக வசதிகள் உள்ளன.

5 சமூக வலைதள ஆப்ஸ்கள்!

பெரிய நிறுவனங்களில் தலைவர்களாக இருப்பவர்கள் பொதுவாக அனைவரும் இருக்கும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களைவிட அவர்கள் அதிகம் உலாவுவது லிங்டு இன் போன்ற சமூக வலைதளங்களில்தான். இதில் அவர்கள் மிகவும் புரஃபஷனலாக இயங்க முடியும்.

குறிப்பிட்ட பிரிவில் சிறப்பாகச் செயல்படும் ஒரு நிறுவனத் தலைவரை அந்தப் பிரிவில் ஆர்வம் உள்ள பலரும் தொடர்புகொள்ள முடியும் என்பதால் இந்த ஆப்ஸையே நிறுவனத் தலைவர்கள் அதிகம் விரும்பு கின்றனர். இதில் பிரீமியம் கணக்குகளும் உள்ளன. 10 டாலர் ஆரம்பித்து 60 டாலர் வரை மாத பயன்பாட்டுக்குக் கட்டணமாகக் கொடுத்து பயன்படுத்தும் அளவுக்குக் கட்டணங்கள் உள்ளன.

இதன் அடுத்த வடிவமாக வந்துள்ள லிங்டு இன் கனெக்டெட் ஆப்ஸ் வேகமாகவும், எளிதாகவும் ஒருவருடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளும் விதமாகவும் அமைந்துள்ளது. உங்களுக்குத் தெரிந்த நண்பர்களை அடையாளம் காட்டுவது துவங்கி அவர்களது பிறந்தநாள், விருப்பம் ஆகியவற்றைத் தெரிவிக்கும் அளவுக்கு மேம்பாடு அடைந்ததாக உள்ளது இந்த ஆப்ஸ்.