www.rupeedesk.in

பிளேஸ்மென்ட் போர்... ஜெயிக்கும் சூட்சுமம்!

பிளேஸ்மென்ட் போர்... ஜெயிக்கும் சூட்சுமம்!

கரு உருவான முதல் வாரமே, தன் பிள்ளைக்கு தரமான பள்ளியைத் தேடத் தொடங்கும் பெற்றோர்களே நம் நாட்டில் அதிகம். எல்கேஜி முதல் கல்லூரி வரை என 21 வருடம் அந்தக் குழந்தையை நன்றாக வளர்த்தெடுக்கக் காரணம், கல்லூரி இறுதி ஆண்டில் நடக்கும்  பிளேஸ்மென்ட் போரை தைரியத்துடன் எதிர்கொண்டு வெற்றி அடைய வேண்டும் என்பதற்காகத்தான்.

இப்படி ஒரு இளைஞனின்  வெற்றியை கொண்டாட ஒரு குடும்பமே காத்திருக்க, ‘இந்த கம்பெனி போனா இன்னொரு கம்பெனி' என்கிற மாதிரிதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அப்படி இல்லாமல் வேலை தரும் நிறுவனங்கள் கல்லூரிக்குள் மாணவர்களைத் தேடி வரும்போது அதைத் தைரியமாக எதிர்கொண்டு வேலையைப் பெற்று, அதைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வது என்பது முக்கியமான விஷயம்.  பிளேஸ்மென்ட் சமயத்தில் எப்படி இருக்க வேண்டும், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி விப்ரோ நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவர் விஸ்வநாதனிடம் பேசி னோம். அவர் தந்த  டிப்ஸ்கள் இங்கே உங்களுக்காக..



அடிப்படை அறிவு அவசியம்!

“உங்களை வேலைக்காகத் தேர்வு செய்யும்போது, நிறுவனங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயம், உங்கள்  துறையில் உங்களுக்கு இருக்கும் அடிப்படை அறிவுதான். அது சார்ந்த கேள்விகளை உங்களிடம் கேட்கும்போது உங்களுக்குள்ள புரிதல், அதற்காக நீங்கள் தரும் நம்பிக்கையான பதில் ஆகியவை தான்.

இதை முதலாவதாக சொல்லக் காரணம், வேலை சார்ந்து உங்களுக்குச் சொல்லித்தரும் போது அதை சரியாகக் கற்றுக் கொண்டு வேலையில் ஈடுபடுவீர்களா என்பதை அறியத்தான்.

சிந்தனைக்கான பரிசோதனை!

அடுத்ததாக உங்களின் சிந்தனையைப் பரிசோதிப்ப தற்கானத் தேர்வைத்தான் பெரும்பாலானநிறுவனங்கள் கையாள்கின்றன. ஒரு கடினமான சூழ்நிலையை உங்களுக்குச் சொல்லி, அந்த இடத்தில் உங்களின் செயல்பாடு எப்படி இருக்கும் என்கிற மாதிரியான கேள்விகளை உங்கள் முன் வைப்பார்கள்.

இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் சரியான பதில் சொல்கிறீர்களா என்பதைவிட, இக்கட்டான சூழ்நிலைகளில் நீங்கள் செயல்படும் விதம், அந்த விஷயத்தை அணுகும் முறை ஆகியவைதான் கவனிக்கப்படும். அந்த பிரச்னையைத் தீர்க்க நீங்கள் என்ன மாதிரியான யுக்திகளைக் கையாள்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.  அதனால் இந்தத் தேர்வில் உங்களை நிரூபித்தாக வேண்டியது அவசியம் அதிகமாகும்.

ஆங்கிலப் புலமையும், ஆட்டிட்யூடும்!

வேலைக்காக ஒருவர் தேர்வு செய்யும்போது ஆங்கிலப் புலமை அவசியம். சரளமாகப் பேச அல்லது எழுதத் தெரியாவிட்டாலும்   தங்களது வாடிக்கையாளரின் ஆங்கில மொழி புலமைக்கு ஈடுதரும்  அளவுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்றுதான்  நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

மேலும் ஒரு துறை என்பது எப்போதும் அப்படியே இருந்து விடாது. புதுப்புது டெக்னாலஜி, புதுப்புது மாற்றங்கள் என வளர்ந்துகொண்டே இருக்கும். அதனால் வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் நிறுவனங்கள் ஒருவர் துறை சார்ந்து தங்களை எந்த அளவுக்கு அப்டேட்டாக வைத்திருக்கிறார் என்பதைக் கவனித்து, அதில் திருப்தி அடைந்தால்தான் வேலை தரும்.

மேலே சொன்ன எல்லாவற்றுக்கும் இணையானது ஆட்டிட்யூட்(Attitude). நீங்கள் கம்பெனியில் சேர காட்டும் விருப்பம், உங்களின் ஈடுபாடு இவையே  நிறுவனங்களின் முதன்மையான எதிர்பார்ப்பு. இவை தவிர உடை, நேரம் தவறாமை, ஒழுக்கம் போன்ற வற்றுக்கும் இணையான பங்களிப்பு உண்டு'' என்று முடித்தார்.

இப்படியான தகுதிகளை  மெருகேற்றிக்கொள்ள நாம் செய்யவேண்டியவை பற்றி டிப்ஸ் தந்தார் கோவையைச் சேர்ந்த பிளேஸ்மென்ட் ட்ரைனர், பிரபு (SIX PHRASE TRAINING ACADEMY).

பலம், பலவீனம்!

“செலக்‌ஷன் பிராசஸின் முதல் கட்டம் ஆப்டிடியூட். பொதுவாக கிராமப்புற பின்னணியில் இருந்துவரும் மாணவர்களுக்கு வெர்பல் (verbal) சரியாக வராது. ஆனால் அவர்களால் குவாண்ட்ஸ்-ல் (quantitative) சிறப்பாகச் செயல்பட முடியும். ஆனால், நகர்ப்புற  மாணவர்கள் வெர்பலில்  சிறந்து விளங்கினாலும், குவாண்ட்ஸ்-ல் கொஞ்சம் பின்தங்கியே இருப்பார்கள்.

முதலில் உங்களின் பலம் மற்றும் பலவீனத்தைக் கண்டுபிடியுங்கள். அதைக் கண்டுபிடித்தபிறகு குறைவாக இருப்பதை ஆவரேஜ் ஆகவும், ஆவரேஜாக இருப்பதை எக்‌ஸலன்டாகவும் மாற்ற முயற்சி செய்யுங்கள். இதை நேர்மையாகச் செய்தாலே கம்பெனிக்குள் நீங்கள் நுழைவது உறுதி.

இதுவே இறுதி வாய்ப்பு!

நீங்கள் ஒரு நிறுவனத்துக்கு  இன்டர்வியூக்கு சென்றால்,  இதுதான் என் கடைசி நிறுவனம், இதைவிட்டால் எனக்கு வேறு எதுவுமில்லை என்கிற ஒரு சின்ன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது கண்டிப்பாக உங்களை மிகச் சிறப்பாகச் செயல்பட வைக்கும்.

ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்தால் மட்டுமே வேலை கிடைக்கும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

வேலைக்கான மந்திரச் சாவி யான ரெஸ்யூம் உங்களைப் பற்றி நம்பிக்கையான பிம்பத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும். அதிலிருந்துதான் உங்களுக்கான கேள்விகள் கேட்கப்படும்.

அப்டேட் அவசியம்!

நம்மைச் சுற்றி எத்தனையோ புதுப்புது டெக்னாலஜி, மாதம் ஒரு புது கோடிங் லாங்குவேஜ் என்று நிறைய மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. அதையெல்லாம் ஒரு போட்டி மனப்பான்மையுடன் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை பெரும்பாலும் நிறுவனங்களே உருவாக்கித் தருகின்றன.

புதிதாகக் கற்றுக்கொள்ளும் பட்சத்தில் உங்களுக்குப் போட்டிகள் பற்றிய  பயத்தினைப் போக்கி  தெளிவை ஏற்படுத்தும்.

வேலையில்லா பட்டதாரியும் விஐபி தான். வெரி இம்பார்டன்ட் பெர்சனும் விஐபிதான். நீங்கள் எப்படி?