www.rupeedesk.in

வங்கிகள் அளிக்கும் கடன் வசதிகள்... பற்றி உங்களுக்கு தெரியுமா

வங்கிகள் அளிக்கும் கடன் வசதிகள்..



நம் வரவுக்குள் செலவு அடங்கும் போது நாம் சேமிக்கிறோம். விரும்பியோ விரும்பாமலோ வரவை விட செலவு அதிகமாகவும் போகலாம். ஆனால் அப்படி நேர்ந்தாலும் நாளை அதிக வரவுக்கு வழி இருக்கிறது என்று நம்புபவர்கள் இன்று கடன் வாங்கி நாளை அதை அடைக்க முயல்கிறார்கள். இன்னும் சிலருக்கு பணத்தட்டுப்பாடு இல்லை. ஆனாலும் கடன் வாங்கி  தொழில்களிலோ, வியாபாரத்திலோ முதலீடு செய்து லாபம் பார்த்து கடனை அடைக்கின்றனர்.

ஒரே மனிதர் தன் வாழ் நாளில் வெவ்வேறு சமயங்களில் இந்த மூன்று வேறு நிலைப்பாடுகளில் இருப்பதும் அமையலாம். இவ்வாறு சேமிப்பவர்களுக்கும் கடன் வாங்குபவர்களுக்கும் இடையே வங்கிகள் பாலமாக அமைகின்றன. சேமிப்பவர்களிடமிருந்து பெறும் வைப்புத் தொகையை கடன் வேண்டுபவர்களுக்கு அவர்களுடைய பணத் தேவைக்கும் பணத்தைத் திருப்பித்தர வேண்டிய கால அவகாசத் தேவைக்கும் ஏற்ப வங்கிகள் கடன் வழங்குகின்றன.

கடன் வசதிகளை வெவ்வேறு விதமாகப் பிரிக்கலாம்.

கடனுக்கும் ஈடாக வாங்கும் பொருளைப் பொருத்து

பொருட்களை அடமானம் வைத்தோ அல்லது வேறு விதமாக ஈடாகக் கொடுத்தோ கடன் பெறுவது ஒரு வகை - செக்யுர்ட் லோன் (ஈட்டுக் கடன் என்று அழைக்கலாம்).

வீடு, கார் வாங்கப் பெறும் கடன்கள், தங்க நகைகளை அடமானம் வைத்துப் பெறும் கடன்கள் போன்றவை இத்தகையானவை. கடனைத் திருப்பித்தராவிட்டால் ஈடு வைத்த பொருளை விற்று பணமாக்கி, அதனால் கடனை அடைக்கும் அதிகாரத்தை கடன் கொடுக்கும் முன்னரே வங்கிகள் எழுத்து மூலம் பெற்றுக் கொள்கின்றன.

ஒரு பொருளையும் ஈடாகக் கொடுக்காமல் கடன் பெறுபவா¢ன் கடன் திருப்பும் திறனை மட்டுமே நம்பிக் கொடுக்கப்படுபவை இன்னொரு வகை. கல்விக் கடன், பெர்சனல் லோன் எனப்படும் தனி நபருடைய சொந்தச் செலவுகளுக்கான கடன், கிரெடிட் கார்ட் கடன் போன்றவை இவ்வகையானவை. (கிரெடிட் கார்ட் மூலம் செலவு செய்யும் தொகையைத் திருப்பிச் செலுத்த நமக்கு அவகாசம் கொடுப்பது ஒரு வகையான கடனே)     கடன் வழங்கும் முறை பொருத்து

சுழலும் கடன்கள்:

இவ்வகைக் கடன்களில் வங்கிகள் கடன் தொகைக்கு ஒரு வரையறையை மட்டுமே நிர்ணயிக்கின்றன. இந்த வரையறைக்குள் வாடிக்கையாளர்  எவ்வளவு கடன் வேண்டுமோ அவ்வளவு கடன் எடுத்துக் கொள்ளலாம். எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

கடன் கணக்கில் வரவு வைத்தாலும் மறுபடியும் வரையறை வரை கடன் பெறலாம். கடன் நிலுவை குறையலாம் அல்லது கூடலாம். சில நேரங்களில் கடன் கணக்கில் நிலுவையே இல்லாமல் வாடிக்கையாளர் பெயரில் வைப்புத் தொகை இருக்குமாறும் நேரலாம். ஆனால் இதனால் கடன் வரையறை வரை கடன் எடுக்கும் உரிமை பாதிக்கப்படாது.

எடுத்துக்காட்டாக ஒருவர் வங்கியிடமிருந்து ரூ. 1 லட்சம் கடன் பெறுவதாக வைத்துக் கொள்வோம். கடன் ஒப்பந்தம் கையெழுத்தான அன்றே அவர் 1 லட்சம் ருபாயையையும் எடுத்துக் கொள்ளலாம். ரூ. 10 ஆயிரம் மட்டும் தேவைப்பட்டால் அவ்வளவு மட்டும் எடுத்துக் கொள்ளலாம். ரூ. ஒரு லட்சம் எடுப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு வாரம் சென்ற பிறகு அவர் கையில் ரூ. 20,000 பணம்  வந்தால் நிலுவை ரூ. 80,000 ஆகி விடும். இப்பொழுது அவர் ரூ. 20,000 வரை எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அதிருஷ்டவசமாக ரூ. 2 லட்சம் வந்தால் நிலுவையே இல்லாமல் வைப்புத்தொகை ரூ. 1 லட்சம் ஆகி விடும். ஆனால் இதனால் அவருடைய கடன் பெறும் தகுதி பாதிக்கப்படாது. இப்பொழுது அவர் ரூ. 2 லட்சம் வரை எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

கடன் வாங்கும்பொழுது ஒப்புக் கொண்ட நிபந்தனைகளையும் ஒப்பந்த விதிமுறைகளையும் தொடர்ந்து அனுசரிக்கும் வரை வாடிக்கையாளர் கடன் சேவையைத் தொடர்ந்து அனுபவிக்கலாம். கிரெடிட் கார்ட் கடன்கள், இருப்புக்கு மேல் பணம் எடுக்கும் உரி மையை அளிக்கும் ஒவர் டிராஃப்ட் கணக்குகள் இவ்வகையானவை. தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும் கேஷ் கிரெடிட் என்று சொல்லப்படும் நடப்புக் கடன் கணக்குகளும் ஒவர் ட்ராஃப்ட் களே ஆகும்.

இந்நிறுவனங்கள் தங்கள் தொழிலுக்குத் தேவையாகும்போது பணம் எடுக்கலாம். பண வரவு அதிகமாக இருக்கும் பொழுது வைப்பும் செய்யலாம். கடன் வரையறைக்குட்பட்டு தொழிலின் தேவைக்கேற்ப நிலுவை இருக்க வேண்டும்.

நடப்புக் கணக்குகளைப் போன்று இவ்வகைக் கடன் கணக்குகளிலும் காசோலைகள், கிரெடிட் கார்டுகள், ஆன்லைன் வசதிகள் போன்றவை கிடைக்கும். கடன் வசதி மட்டுமில்லாமல் பணம் போட்டு, பணம் எடுத்து, பண மாற்றம் செய்து சேவை பெறலாம்.

சுழலாக் கடன் இன்னொரு வகை. இவற்றில் கடன் பெறுவதற்கான காலம் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. பொதுவாக கடன் பத்திரம் கையெழுத்தாகி 6 மாதத்திற்குள்ளோ, ஒரு வருடத்திற்குள்ளோ அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகையை எடுத்தே ஆக வேண்டும். அதற்குப் பிறகு கடன் பட்டுவாடா கிடைக்காது. திருப்பிச் செலுத்தும் தவணை முறை துவங்கி விடும். மாரடோரியம் என்று சொல்லப்படும் கடனைக் கால தாமதமாகக் கொடுப்பதற்கான இசைவு பெற்றிருந்தால் இந்த தாமதத்திற்குப் பிறகு தவணை துவங்கும். தவணை துவங்கிய பிறகு கட்டிய பணத்துக்கு ஈடாக மறுபடியும் பணம் எடுக்க இவ்வகைக் கடன்களின் விதிமுறைகள் அனுமதிப்பதில்லை.

தவணைகளைத் தொடர்ந்து கட்டி, கடனை அடைப்பதே செய்யக் கூடியது. வீட்டுக் கடன், கார் கடன், கல்விக் கடன் இவைகளை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இவ்வகைக் கணக்குகளில் காசோலை, ஏ டி எம் கார்ட், ஆன்லைன் போன்ற சேவைகள் கிடைக்காது. வாடிக்கையாளர் பணம் எடுக்கவோ பணமாற்றம் செய்யவோ இயலாது.