www.rupeedesk.in

சிப்ஸ் கடை தந்த உற்சாகம் - ஆர். வாசுதேவன், ஹாட் சிப்ஸ்

சிப்ஸ் கடை தந்த உற்சாகம் - ஆர். வாசுதேவன், ஹாட் சிப்ஸ்


''மாதம் 6,500 ரூபாய் சம்பளத்தில் கல்லூரிப் பேராசிரியராக வேலை பார்த்தேன். வணிகவியல் துறை பேராசிரியர் என்பதால், உழைப்பால் உயர்ந்த பிஸினஸ்மேன்களின் கதைகளை அடிக்கடி வகுப்பில் சொல்வேன். இந்த கதைகளை நாமே ஏன் கடைப்பிடிக்கக் கூடாது என்று யோசித்து, பகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆரம்பித்தேன்.

ராயப்பேட்டையில் என் வீட்டுக்கு அருகில் ஒரு மருந்துக் கடை விற்பனைக்கு வந்தது. அதை வாங்கி வெற்றிகரமாக நடத்தியதில் அடுத்து இன்னொரு மருந்துக் கடை, பல்பொருள் கடை என்று விரிவுபடுத்தினேன். இதில் எதிர்பார்த்த அளவு ஏற்றமில்லை. வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற யோசனை இருந்த சமயத்தில் என் மருந்துக் கடையை ஒட்டிய சந்தில் ஒரு சிப்ஸ் கடை இருந்தது. அந்த கடையில் சிப்ஸ் தயாரித்த விதம்தான் வாடிக்கையாளர்களை விளம்பரம் இல்லாமலே வரவைக்கிறது என்று அறிந்து, அதே மாதிரி ஒரு சிப்ஸ் கடையை நுங்கம்பாக்கத்தில் திறந்தேன். எனக்கான திருப்புமுனை அமைந்தது இந்த சமயத்தில்தான்.
இந்த சிப்ஸ் கடையில் வாடிக்கையாளர் எதிரில் உடனடியாக தயாரிக்கக் கூடிய நொறுக்குத்தீனிகளைத் தந்தோம். அதிலும் முக்கியமாக, வட இந்திய உடனடி சாட் உணவுகளைத் தந்தோம். இதில் நல்ல வருமானமும், பெயரும் கிடைக்கவே, 1992-ல் நான் பார்த்துவந்த ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு, முழுநேரமாக பிஸினஸ்மேன் ஆனேன்.
என் முதல் ஓட்டலை நுங்கம்பாக்கம் பகுதியில் தொடங்கினேன். பொதுவாக ஓட்டலுக்கு வருபவர்களை உட்கார வைத்து பரிமாறுவது வழக்கம். ஆனால், நான் வாடிக்கையாளர் சுயசேவை என்று தொடங்கினேன். இதன் மூலம் கடையின் பணியாளர் எண்ணிக்கை குறைவதால், வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் உணவைத் தரமுடிந்தது. இளைய தலைமுறையின் ரசனைக்கேற்ப ஓட்டலை நடத்த ஆரம்பித்ததிலிருந்து என் ஓட்டலின் வளர்ச்சி, வேகம் கொண்டது.
முதலில் சென்னையிலேயே வேறுவேறு பகுதிகளில் ஓட்டல்களைத் தொடங்கினேன். பிறகு பெங்களூர், சிங்கப்பூரிலும் ஓட்டலைத் தொடங்கி இன்று துபாய் வரை செல்ல திட்டமிட்டு வருகிறோம். மொத்தமாக 18 ஓட்டல்களில் ஆண்டு டேர்னோவர் 50 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது.
பேராசிரியராக எனது பணியினைத் தொடர்ந்திருந்தால் இப்போதும் மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டு, நல்ல மாணவர்களை உருவாக்கி இருந்திருப்பேன். ஆனால், இன்று என் நிறுவனத்தில் சுமார் 1,500 பேர் வேலை செய்கிறார்கள். எனக்காக மட்டுமின்றி, அவர்களுக்காகவும் நான் உழைக்கிறேன்!''.  

நெட்வொர்க் என் பலம்- சி.அம்பிகாபதி, ஃபாஸ்ட் டிராக்.

நெட்வொர்க் என் பலம்- சி.அம்பிகாபதி, ஃபாஸ்ட் டிராக்.




''கல்லூரியில் படிக்கும்போதே வீடு வீடாக வீடியோ கேசட் வாடகைக்கு விட்டு சம்பாதிப்பேன். இதன் மூலம் எங்கள் பகுதி மக்களோடு எனக்கு நல்ல தொடர்பு இருந்தது. கேபிள் டி.வி வந்தபோது அவர்கள் எல்லோருமே என்னை அந்த தொழிலை செய்யச் சொன்னார்கள். அதற்குத் தேவையான டிஷ், ஒயர்கள் வாங்ககூட என்னிடம் பணம் இல்லை.


டெபாசிட் பணம் திரட்டி இறங்கலாம் என்று நினைத்த நான் எங்கள் பகுதி மக்களிடம் ஆயிரம் ரூபாய் கேட்டேன். இன்னொரு பெரிய நிறுவனம் ஐநூறு ரூபாய் டெபாசிட் தந்தாலே இணைப்பு தருவதாகச் சொன்னது. ஆனால், எங்கள் பகுதி மக்கள் ஒவ்வொருவரும் 1,500 ரூபாய் தந்து என்னை தொழில் தொடங்க சொன்னார்கள். அதுதான் என் வாழ்வின் முதல் திருப்புமுனை.
அடுத்து வேறு ஏதாவது ஒரு தொழில் தொடங்க யோசித்தபோது, என் நண்பர்கள் கால் டாக்ஸிகளுக்கான வயர்லெஸ் திட்டம் பற்றி சொன்னார்கள். இதற்காக   பெங்களூருவுக்குப் போனேன். கால் டாக்ஸிகளுக்கு அங்கு இருந்த வரவேற்பை பார்த்த நான், அதை ஏன் சென்னையில் செய்யக்கூடாது என்று நினைத்தேன்.
ஆனால், மோட்டார் தொழிலை பழகாமல் செய்யக்கூடாது என பலரும் பயமுறுத்தினார்கள். நான் துணிந்து என் வீட்டை வங்கியில் அடமானம் வைத்து ஐம்பது கார்களை வாங்கி நிறுவனத்தைத் தொடங்கினேன். ஆரம்பத்தில் தொழில் சிறப்பாக இல்லை. மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நஷ்டம். ஐம்பது கார்களை நூறு கார்களாகப் பெருக்கியும் எதிர்பார்த்த வளர்ச்சி இல்லை. எப்போதும் ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டே இருந்தது.
இதை எப்படி சமாளிப்பது என்று யோசித்தேன்.  அந்த நூறு கார்களையும் ஓட்டுபவர்களுக்கே சொந்தமாக்கிவிடுவது என முடிவெடுத்தேன். ஆரம்பத்தில் ஓட்டுபவர்களுக்கே இதில் நம்பிக்கை இல்லை. போகப் போக இத்திட்டம் நல்ல பலன் தந்தது. ஓட்டுநர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்க, நிறுவனமும் வளர்ச்சி கண்டது. இந்த நெட்வொர்க்தான் என் பலம்.
இதன்பிறகுதான் திருச்சி, கோவை, பெங்களூரு, ஹைதராபாத் என விரிவடைந்தோம். இன்று சுமார் ஆறாயிரம் கார்கள் எனது நிறுவனத்தின் மூலமாகச் சுற்றி வருகின்றன. கால் டாக்ஸி நிறுவனம் வெற்றிகரமாகச் செயல்பட சொந்த வாகனங்களை வைத்திருக்கவேண்டும் என்கிற விதிமுறைகளை உடைத்ததே எங்களது இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இன்று வெளிநாட்டு நிறுவனங்கள் வந்தால்கூட எங்களால் போட்டி போட முடியும்!''

ஹாலோ பிளாக் விற்பனையில் 15% லாபம்!

ஹாலோ பிளாக் விற்பனையில் 15% லாபம்!






விற்பனையில் 15% லாபம்

''வீட்டை கட்டிப்பார்; கல்யாணத்தை பண்ணிப்பார்' என்பார்கள்... அப்போதுதான் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்பதற்காக! ஆனால், இப்போதெல்லாம் ஒரு கல்யாணத்தைகூட எளிதாக நடத்தி விடலாம், ஆனால்  வீடு கட்டுவது என்பது சாதாரண விஷயமில்லை! பக்காவாக திட்டமிட்டு வேலையைத் தொடங்கினால் அப்போதுதான் சிமென்ட் விலை ஏறிவிட்டது, கம்பி விலை ஏறிவிட்டது, மணல் விலை ஏறி விட்டது என்பார்கள்.
இந்த கட்டுமான பொருட்களின் விலையேற்றத் தைக் கட்டுப்படுத்த எந்த கட்டுப்பாடும் இல்லை. அதிலும் செங்கல் விலை சொல்லவே வேண்டாம். ஏரியாவுக்கு ஏரியா விலை வித்தியாசம் எகிறுகிறது. எந்த டைப் வீடு கட்டினாலும் செங்கல் இல்லாமல் காரியம் நடக்காது. அந்த அளவுக்கு அதன் தேவை இருக்கிறது. பழைய பாணியில் எல்லா பணிகளுக்கும் செங்கல்லை மட்டுமே ஏன் நம்பியிருக்க வேண்டும்? வேலையை இன்னும் சுலபமாக்க வேறு தொழில்நுட்பத்தைப் புகுத்தினா லென்ன என்ற முயற்சியில் வந்தது தான் இந்த 'ஹாலோ பிளாக்’. செங்கல்லைவிட லேசானதாலும், சிமென்ட் பயன்பாட்டை குறைப்பதாலும் கட்டுமானத் தொழில் உலகில் இப்போது நீங்காத இடம்பிடித்து விட்டது இந்த ஹாலோ பிளாக்.

ஒரேஒரு ஹாலோ பிளாக் நான்கு செங்கல்லுக்கு ஈடாக தேவையைப் பூர்த்திசெய்து விடுகிறது. வேலையும் சுலபம். இதனால் விறுவிறுவென கட்டட வேலைகள் முடிந்து விடுவதால் கட்டுமானத் துறையில் இதன் தேவை தற்போது அதிகரித்துள்ளது.  காம்பவுன்ட் சுவர், ஆர்ச்சுகள் போன்றவற்றைக் கட்டுவதற்கு அதிகளவில் இதைப் பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் செலவும் கைகளுக்குள் அடங்கி விடுகிறது.



ஆர்.சி.சி, ஜி.ஐ. ஷீட்ஸ், ஏ.சி.சி. ஷீட்ஸ் போன்ற ரூஃபிங்கிற்கு சப்போர்ட்டாகவும் செங்கல், கற்கள் போன்றவைகளுக்கு மாற்றாகவும்  ஹாலோ பிளாக் இடம் பிடித்து விட்டதால் நாளுக்குநாள் இதன் தேவை அதிகரிக்கவே செய்யும். உத்தரவாதமான நல்ல வருமானம் தரக்கூடிய தொழில் என்பதால் துணிந்து இறங்கலாம். கட்டுமானத் தொழில் வளர வளர, இந்தத் தொழிலுக்கும் ஏறுமுகம்தான்.



தயாரிக்கும் முறை  கருங்கல் குவாரியிலிருந்து வெளியேறும் மணல்துகள்கள், அவல் ஜல்லி, சிமென்ட் போன்றவைகள் தான் முக்கிய மூலப் பொருட்கள். எல்லாவற்றையும் தகுந்த விகிதத்தில் கலவையாக்கி லேசான ஈரப்பதத்தோடு இதற்கென்றே உள்ள ஹைட்ராலிக் ஆபரேட்டிங் இயந்திரத்தில் கொட்டி இயந்திரத்தை இயக்கினால் நிமிடத்தில் ஹாலோ பிளாக் ரெடி!   அதிக பலமிக்க ஹாலோ பிளாக் வேண்டுமெனில் சிமென்ட், மணல், அவல் ஜல்லி போன்றவைகளை 1:3:6 என்கிற விகிதத்தில் கலக்க வேண்டும். இதுவே சாதாரணமான கட்டடங்களுக்கு எனில் 1:5:8 என்கிற விகிதத்தில் இருப்பதுபோல பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர், சிமென்ட் கலவை 0.4:1 என்கிற விகிதத்தில் இருக்க வேண்டும்.




ஃபைனான்ஸ்

சொந்த இடம் இருந்தால் நல்லது. இல்லையென்றால் வாடகைக்கு எடுத் தும் செய்யலாம். இடமிருந்து, சொந்தமாக கட்டடம் கட்டும்பட்சத்தில் அந்த வகைக்கு சுமார் ஆறு லட்சம் ரூபாய் வரை செலவாகும். அத்துடன் பிளான்ட் மற்றும் இயந்திரத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும், செயல் பாட்டு மூலதனத்துக்கு ஒரு லட்சம் ரூபாயும் என மொத்தம் பத்து லட்சம் ரூபாய் வரை ஆகும்.

மூலதனம்

இந்த தொழி லைத் துவங்க நினைக்கும் ஒருவர் தனது கையிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை மூலதனமாக போட வேண்டியது வரும். மீதமுள்ள ஒன்பதரை லட்ச ரூபாயை வங்கியிலிருந்து கடனாகப் பெற்றுக் கொள்ளலாம்.



மானியம்

பிரதம மந்திரி வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த தொழில் வருவதால் மூன்றரை லட்சம் ரூபாய் வரை மானியம் பெறமுடியும். மானியத் தொகையானது இந்த தொழிலுக்காக வாங்கிய கடன் கணக்கில் வரவு வைக்கப்படும். மூன்று வருடத்திற்குப் பிறகு நான்காவது ஆண்டின் தொடக் கத்திலிருந்து கடன் தொகை ஆறு லட்சம் பிடித்தம் செய்யப்படும்.



ஆட்கள்

முழு உற்பத்தி திறனில் வேலை பார்க்க பத்து நபர்கள் தேவைப்படு வார்கள். நல்ல ஈடுபாட்டுடன் வேலைபார்க்கும் ஒன்பது பேரும், விற்பனை மற்றும் கலெக்ஷன் நிர்வாகம் செய்வதற்கு ஒருவரும் போதுமானது.




இயந்திரம்

இந்த  ஹைட்ராலிக் ஆபரேட்டிங் இயந்திரம் தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது. கோவை, உடுமலைப்பேட்டை பகுதிகளில் வாங்கலாம்.



வார்ப்பு அளவுகள்

கற்கள் மூன்று அளவுகளில் உள்ளன.

4 இஞ்ச், 6 இஞ்ச்,  8 இஞ்ச் என்ற அளவுகளில் இருக்கின்றன.

4 இஞ்ச் கற்கள் பாத்ரூம் கட்டுவதற்குப் பயன்படுகிறது. (இதன் நீளம் 15 இஞ்ச், அகலம் 4 இஞ்ச், உயரம் 8 இஞ்ச்)

6 இஞ்ச் கற்கள் ஓட்டு வீடு கட்டப் பயன்படுகிறது. இதற்கு அகலம் மட்டும் வேறுபடும் (அகலம் 6 இஞ்ச்)

8 இஞ்ச் கற்கள் மாடி வீடு கட்டப் பயன்படுகிறது. இதற்கு அகலம் மட்டும் வேறுபடும் (அகலம் 8 இஞ்ச்)



சாதகமான விஷயம்

சாதாரணமாக மழைக் காலங்களில் செங்கல்  தயாரிக்க முடியாது.  காய வைப்பதற்கேற்ப வெயில் இருக்காது என்பதால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் செங்கல் தொழில் அடியோடு பாதிக்கப்படும். ஆனால்,  ஹாலோ பிளாக் தொழிலில் அப்படியான கவலை இல்லை. மழைக் காலங்களில்கூட தயார் செய்ய முடியும். இயந்திரத்திலிருந்து எடுத்த அரை மணி நேரத்திற்குள் இந்த கற்கள் காய்ந்து விடுவதால் மழைக்காலம் என்றாலும் பாதிப்புகள் ஏற்படாது.



ரிஸ்க்

தொடர்ச்சி யான மின்சாரம் தான் இதன் முக்கிய தேவை. மின்தட்டுப்பாடுதான் இந்த தொழிலை வளரவிடாமல் தடுக்கும் முக்கியமான விஷயமாகும். மின்சாரம் தொடர்ச்சியாகக் கிடைத்தால் நல்ல லாபம்தான்.

எந்த ஊரில் என்ன வாங்கலாம்! - திருப்பூர்- பனியன் சந்தை

எந்த ஊரில் என்ன வாங்கலாம்! - திருப்பூர்


உலகின் மிகப் பெரிய பனியன் சந்தை திருப்பூர். தரம், வடிவமைப்பு உள்பட எல்லாவற்றிலும் சர்வதேச எதிர்பார்ப்பிற்கு  தன்னை அப்டேட் செய்து கொண்டிருப்பதால் இந்த பிஸினஸ் ரேஸில் வீழ்ந்திடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது திருப்பூர் குதிரை.
இந்த பனியன் பிரதேசத்தில் 'காதர் பேட்டை’ என்றொரு ஏரியா உங்களுக்குத் தெரியுமா? திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிர்புறம் இருக்கும் இந்த காதர் பேட்டை 'செகண்ட்ஸ் பனியன்’ என்றழைக்கப்படும் சிறிய அளவிலான டேமேஜ்களுடைய பனியன் துணிகளை குறைந்த விலையில் விற்பனை செய்யும் ஏரியா. இந்த பேட்டையின் ஓராண்டு டேர்ன் ஓவர் சுமார் சில நூறு கோடிகளைத் தாண்டுமாம்.
அப்படி என்னதான் நடக்கிறது காதர் பேட்டையில்? என்று இறங்கி அலசினோம்.  பிளாட்ஃபார்ம் கடையில் ஆரம்பித்து மெகா ஷோரூம்கள் வரை இந்த செகண்ட்ஸ் துணிகளை விற்பனை செய்யும் கடைகள் அறுநூறுக்கும் மேல் இருக்கின்றன.
எப்படி உருவானது இந்த காதர் பேட்டை என்பதுகுறித்து சொன்னார் 'திருப்பூர் செகண்ட்ஸ் பனியன் ஓனர்ஸ் அசோசியேஷன்’ துணைத் தலைவரான நாகராஜ்.
''1965-ம் ஆண்டுவாக்குல இந்த காதர் பேட்டை உருவாச்சு. திருப்பூர்ல இருக்கிற பனியன் கம்பெனிகளுக்கு பல நாடுகள்ல இருந்து டி-ஷர்ட், பனியன், ஷார்ட்ஸ், நைட் பேன்ட்ஸ் மாதிரியான துணிகளை தயாரிச்சு தரச் சொல்லி ஆர்டர் கொடுப்பாங்க. ஒரு லட்சம் பீஸ் ஆர்டர் கிடைச்சதுன்னா, ஒரு லட்சத்து பத்தாயிரம், இருபதாயிரம்னு தயாரிப்பாங்க கம்பெனி ஓனர்கள். காரணம், சில துணிகள் மெஷின்ல சிக்கி கிழிஞ்சிடும், மெஷின்ல உள்ள ஆயில் பட்டுடும். இது மாதிரி பிரச்னைக்குள்ளான பீஸை ஏற்றுமதி பண்ண மாட்டாங்க.

இப்படி கழிக்கப்பட்ட துணிகளை குறைஞ்ச விலையில மொத்தமா வாங்கிட்டு வந்து அப்படியேயும் அல்லது ஓட்டை விழுந்த இடத்துல பேட்ச் ஒர்க் பண்ணியும், ஆயில்பட்ட இடத்தை வாஷ் பண்ணியும் விற்பனை செய்யுறதுதான் காதர் பேட்டை பிஸினஸ் ஸ்டைல்'' என்றார் நாகராஜ்.
''நல்ல குவாலிட்டியான டி-ஷர்ட்டை ஷோரூம்ல போய் வாங்கினா ஐநூறு, அறுநூறு ரூபா சொல்லுவாங்க. ஆனா, அதே டி-ஷர்ட் சின்னதா ஒரு ஓட்டையோட இருக்குதுன்னா, இந்த காதர் பேட்டையில வெறும் முன்னூறு ரூபாய்க்கு கிடைக்கும். குழந்தைகளுக்கான ஜட்டி 10, 15 ரூபாயில் ஆரம்பித்து, பெரியவர்களுக்குத் தேவைப்படுகிற துணிகள் வரை மிகக் குறைந்த விலையில் இங்கு வாங்கிவிடலாம். தீபாவளி, கிறிஸ்துமஸ், நியூ இயர் சமயங்களில் புதுத் துணிகள் பிஸினஸுக்கு இருக்கிற வரவேற்புக்கு நிகரான டிமாண்ட் இங்கேயும் இருக்கும்'' என்றும் சொன்னார் அவர்.
''காதர் பேட்டையில வெறும் சில்லறை விற்பனைகள் மட்டுமல்ல, மொத்தமா கொள்முதல் பண்ணிட்டு போயி வெளிமாநிலங்கள், வெளிநாடுகள்ல விற்கிற பிஸினஸையும் ஆயிரக்கணக்கான ஆளுங்க பண்ணிட்டிருக்காங்க'' என்கிறார்கள் இங்கு கடை நடத்தும் வியாபாரிகள்.
இந்த செகண்ட்ஸ் துணிமணிகளை நம் வியாபாரிகள் வாங்கிச் செல்வது ஒருபக்கமிருக்க,  சமீப காலமாக வெளிநாட்டைச் சேர்ந்த சில இளைஞர்கள் பெரிய அளவில் வாங்கிச் சென்று, நைஜீரியாவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் அதிக விலை வைத்து விற்கிறார்களாம். ''இதனால் உள்ளூர்க்காரர்களின் வியாபாரம் கெடுவதோடு, அரசாங்கத்தின் வருமானமும் குறைகிறது. முதலில் இவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கணும்'' என்கிறார்கள் செகண்ட்ஸ் வியாபாரிகள்.
அடுத்தமுறை திருப்பூர் போனால் காதர் பேட்டைக்குப் போக மறக்காதீர்கள்!

எந்த ஊரில் என்ன வாங்கலாம்! - சீர்காழி - பிரம்பு பொருட்கள்

எந்த ஊரில் என்ன வாங்கலாம்! - சீர்காழி - பிரம்பு பொருட்கள்



வீடு முழுக்க என்னதான் அலங்காரப் பொருட்களை வாங்கி அடுக்கினாலும், ஒரு பிரம்பு சோஃபா இருந்தாலேப் போதும், உங்கள் வீடு மாடர்னாக மாறிவிடும். இன்றைக்கு பிரம்புக்கூடை எல்லா நகரங்களிலும் விற்பனை ஆகிறது என்றாலும், அதை குறைந்த விலையில் வாங்க வேண்டும் என்றால் அதற்கு தமிழகத்திலேயே பெஸ்ட் இடம், சீர்காழிதான்.

பிரம்பு பொருட்கள் செய்வதையே பிரதானத் தொழிலாகக் கொண்டிருக்கும் தைக்கால் கிராமம் சீர்காழிக்கு அருகில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை வழியில் சீர்காழிக்கு முன்பே கொள்ளிடம் கரையில் இருக்கிறது இந்த ஊர். இங்கு கடைகளில் வார்னிஷ் அடிக்கப்பட்ட விதவிதமான பிரம்பு பொருட்களை வரிசைக்கட்டி வைத்திருப்பதே அழகுதான்.
இந்த ஊரில் இதுதான் முக்கியமான தொழில் என்பதால், இதன் பின்புலத்தை அறிந்துகொள்ள நூற்றாண்டு கண்ட ராயல் லுக் கடையின் உரிமையாளர் முகமது அப்பாஸிடம் பேசினோம்.
''எங்க தாத்தா காலத்தில் ஆரம்பமானது இந்த தொழில். கொள்ளிடக்கரையில் இருப்பதால் இந்த பகுதியில் விளையும் மெல்லிய பிரம்புகளை வைத்து வீட்டிலேயே தொழிலைத் தொடங்க, இன்று முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த தொழிலைச் செய்து வருகிறோம்.

சீர்காழி, சிதம்பரம், திருக்கடையூர், தரங்கம்பாடி போன்ற ஊர்களுக்கு தைக்கால் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பதால் வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் தைக்காலுக்கு ஒரு விசிட் அடிக்காமல் போவதில்லை. பஞ்சு மெத்தைகள் சுகமாக இருந்தாலும் கை வேலைபாடுகொண்ட பிரம்புக்கு நல்ல வரவேற்பு இருப்பதும், பிரம்பு பொருட்களின் குளுமை, உடம்பு சூடு தணியும் என்பதாலும் வருடம் முழுவதும் எங்களுக்கு நல்ல விற்பனைதான். வேலூர், சென்னை, திருச்சி போன்ற வெளியூர்களில் பிரம்பு பொருட்களை விற்பனை செய்வதற்காக இங்கிருந்துதான் வாங்கிச் செல்கின்றனர்'' என்றார்.  
 இங்கு விளையும் மெல்லிய பிரம்புகளை வைத்து ஜாடி, கூடை, முறம், அர்ச்சனைத் தட்டு, அலங்கார கூடைகள் செய்யப்படுகிறது. இந்த மெல்லிய பிரம்பு அதிக வளைவு கொடுக்காது என்பதால் எடை தாங்கும் கூடைகளைச் செய்ய முடியாது. அதனால கடினமான, குவாலிட்டியான பிரம்புகளை பீகாரில் இருந்து இறக்குமதி செய்து பொருட்களை செய்கிறார்கள். ஏழு வகை பிரம்புகளில் ரைடான், மூங்கில் பிரம்பு, முக்கால் பிரம்பு என ரகரகமாகப் பொருட்களை செய்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். கலை நுணுக்கமான வேலை என்பதால் ஒரு நாளில் எட்டு பேர் சேர்ந்து ஒரு சோபாதான் செய்ய முடியுமாம். கடினமான ரைடான் பிரம்புகளால் பெரிய பிரம்பு சோஃபா, நாற்காலி, டீபாய், ஜூலா போன்றவற்றை செய்கிறார்கள்.

வெளியூர் விற்பனையாளர்கள் இங்கிருந்து 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிச் செல்லும் பொருட்களை பதினைந்து ஆயிரத்துக்கு தாராளமா விற்க முடியும் என்கிறார்கள். வாடிக்கையாளர்கள் இங்கு வந்து நேரடியாக வாங்கும்போது கையில இருக்குற தொகைக்கு ஏற்ப பொருட்களை தரம் பார்த்து வாங்க முடியும். அதே சமயம் தரமானதாகவும் பார்த்து வாங்கலாம். சோஃபாசெட், ஜூலா, டைனிங் டேபிள் என எல்லாமே கிடைக்கிறது. முக்கியமாக நேரடியாக வந்து வாங்கும்போது கேரண்டியும் தருகிறார்கள்!.

இங்கிருந்து பொருட்களை வாங்கிச் செல்வது மட்டுமல்ல, தேவைகேற்ப ஆர்டர் கொடுத்து செய்துவாங்கிக் கொள்ளவும் முடியும். அவர்களிடம் இருக்கும் டிசைன் மட்டுமல்ல, உங்களது விருப்ப டிசைன்களும் செய்துகொள்ளலாம். இயற்கையான நிறத்தில், கலர் இல்லாமல், தரமாக, உங்கள் கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப ரேட் பேசி வாங்கிச் செல்ல இந்த ஊருக்கு விசிட் அடிக்கலாம்.

ஃபிளை ஆஷ் பிரிக்ஸ்! டேர்ன் ஓவரில் 10% லாபம்!

ஃபிளை ஆஷ் பிரிக்ஸ்! டேர்ன் ஓவரில் 10% லாபம்!

ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ்


செங்கல்லுக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த தொடங்கியதன் முதல்படி ஹாலோ பிளாக் என்றால், அதன் அடுத்த கட்டமாக வந்த தொழில்நுட்பம்தான் ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ்.

புதிய தொழில்நுட்பத்தில் நவீனமான முறையில் தயாரிக்கப்படுவதாலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நண்பனாக இருப்பதாலும், கட்டுமானத்துறையில் இப்போது ஃப்ளை ஆஷ் அதிக அளவில்  பயன்படுத்தப்படுகிறது. தயாரிப்புச் செலவு அதிகம் என்றாலும், செங்கல்லின் தேவை தவிர்க்க முடியாதது என்பதால் இந்தத் தொழிலில் துணிந்து இறங்கலாம். அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலக்கரி சாம்பல்தான் முக்கிய மூலப் பொருள். 'சிமென்ட் செங்கல்’, 'சிமென்ட் கல்’ எனவும் அழைக்கப்படுகிற இந்த ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ், செங்கல்லை விடவும் நீடித்து உழைக்கும். மற்றும் சீக்கிரத்தில் உடையாது. இந்த தன்மைகளால் கட்டட வேலைகளில் பெரிதும் நம்பகத் தன்மையை அடைந்து விட்டது.
ஆண்டுக்கு 90 மில்லியன் டன் ஃப்ளை ஆஷ் இந்தியாவின் அனல் மின் நிலையங்களிலிருந்து கிடைக்கிறது. வரும் ஆண்டுகளில்  இன்னும் அதிகளவில் இந்த நிலக்கரி சாம்பல் கிடைக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். பொது வாக நமது நாட்டில் மின்சாரத் தேவையை 70% அளவுக்கு அனல்மின் நிலையங்களே பூர்த்தி செய்வதால், இந்த கற்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருளுக்கு தட்டுப்பாடு வராது என்று நம்பலாம். குறிப்பாக  தமிழ்நாட்டில் நெய்வேலி, மேட்டூர், தூத்துக்குடி, எண்ணூர், மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்களிலிருந்து எளிதாகக் கிடைத்து விடுவதால் இதன் அருகில் இருக்கும் ஊர்களில் இருப்பவர்களுக்கு இந்த தொழில் செய்வது கூடுதல் வாய்ப்பாகக் கருதப்படுகிறது.



பயன்பாடுகள்

இந்த ஃப்ளை ஆஷ் கற்களைக் கொண்டு கட்டப்படும் கட்டடங்கள் நல்ல உறுதியாக இருப்பது முக்கியமான விஷயம். இதன் வடிவம் மற்றும் அளவு கட்டட வேலைகளை சுலபமாக்குகிறது. தண்ணீர் கசிவின்மை,   வலிமை, நெகிழ்வுத்தன்மை போன்ற கான்கிரீட்டை உறுதிப்படுத்தும் பண்புகள் இந்த கற்களில் இருப்பதால் கட்டட பொறியாளர்களின் முதன்மை தேர்வாக இது இருக்கிறது.

தயாரிக்கும் முறை

நிலக்கரி சாம்பல் 70%, மணல் 15%, சுண்ணாம்புகல்  10% மற்றும் ஜிப்சம் 5% ஆகிய மூலப்பொருட்களை சரியான விகிதத்தில் சேர்க்க வேண்டும்.  8-10% என்கிற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து இந்த கலவையை ஹைட்ராலிக் இயந்திரத்தில் கொட்டி இயந்திரத்தை இயக்கினால் ஃப்ளை ஆஷ் செங்கல் கிடைத்துவிடும். ஹாலோ பிளாக் தயாரிப்பு முறைதான் இதற்கும் என்றாலும், இதனை 48 மணி நேரத்திற்கு வெயிலில் காய வைக்க வேண்டும். அதன்பிறகு இந்த கற்கள் மீது  தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் ஊற்றும்போதுதான் கற்கள் கூடுதல் அடர்த்தியாகும்.


இயந்திரங்கள்

மெக்கானிக்கல்,  ஹைட்ராலிக் மற்றும் ஸ்டேஷனரி போன்ற இயந்திரங்கள் இதில் பயன் படுத்தப்படுகிறது. இந்த மூன்றும் வெவ்வேறு வகையான அளவுகளில் கற்களை தயாரித்து தருகின்றன. எனவே வசதிக்கு தகுந்தாற்போல், உற்பத்தி திறனுக்கு ஏற்ற வகையில் இயந்திரத்தை வாங்கிக் கொள்ளலாம். இந்த இயந்திரங்கள் கோயம்புத்தூரில் மட்டுமே கிடைக்கிறது.

ஆட்கள்

ஒரு யூனிட்டுக்கு 20 பணியாளர்கள் வரை தேவைப்படுவார்கள்.


சந்தை வாய்ப்பு

சாதாரண செங்கலுக்கு பதில் தற்போது நவீன தொழில்நுட்பத் தில் தயாரிக்கப்படும் இந்த ஃப்ளை ஆஷ் எனும் சிமென்ட் செங்கல் கட்டுமானத் துறையில் அதிகளவில் பயன்படுத்துகிறார் கள்.  எனவே இதற்கான சந்தை வாய்ப்பு அதிகளவில் இருக்கிறது. கமிஷனுக்கு வாங்கிச் செல்லும் ஏஜென்டுகள், கட்டட பில்டர்கள், கான்ட்ராக்டர்கள் மற்றும் நேரடி வாடிக்கையாளர்கள்.

ஃபைனான்ஸ்

சொந்த இடமாக இருந்தால் உற்பத்திச் செலவு குறையும்.  கட்டடம் மற்றும் சிவில் வேலைகளுக்கு நான்கு லட்சம் ரூபாய் வரை செலவாகும். அத்துடன் பிளான்ட் மற்றும் இயந்திரத்திற்கு பதினாறு லட்சம் ரூபாய், செயல்பாட்டு மூலதனம் ஐந்து லட்சம் ரூபாய் என மொத்தம் இருபத்தைந்து லட்சம் ரூபாய் வரை ஆகும்.


மூலதனம்

நிறுவனர் ஐந்து சதவிகித மூலதனமாக 1.25 லட்சம் ரூபாய் வரை போட வேண்டியது வரும். மீதமுள்ள 95% அதாவது 23.75 லட்சம் ரூபாய் வங்கியிலிருந்து கடனாக பெற்றுக் கொள்ளலாம்.

மானியம்

இந்த தொழில் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் வருவதால் 8.75 லட்சம் ரூபாய் வரை மானியம் பெறமுடியும். மானியத் தொகையானது இந்த தொழிலுக்காக வாங்கிய கடன் கணக்கில் மூன்று வருடத்திற்குப் பிறகுதான் வரவு வைக்கப்படும்.

சாதகம்

இந்த தொழிலுக்கு தேவையான முக்கிய மூலப் பொருளான நிலக்கரி சாம்பல் கிடைப்பதில் முன்பு சிக்கல் இருந்து வந்தது. அனல் மின் நிலைய உலையில் இருந்து 20% நிலக்கரி சாம்பல்களை இனி ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் உரிமையாளர்களுக்கு கண்டிப்பாக தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இனி மூலப் பொருள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்பது இந்த தொழிலுக்கு சாதகமாக இருக்கிறது.

பாதகம்

இயந்திரத்திலிருந்து செங்கல் வந்ததும் காயவைத்த பின்பு தண்ணீர் ஊற்றி கல்லை கடினப் படுத்த வேண்டும். இந்த வேலை மழைக்காலத்தில் சுலபமாகிறது. மிதமான மழையினால் இந்த தொழிலில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் பலத்த மழை எனில் கொஞ்சம் தொய்வு ஏற்படும்.

எந்த ஊரில் என்ன வாங்கலாம்! - சென்னிமலை - கைத்தறி போர்வை

எந்த ஊரில் என்ன வாங்கலாம்! - சென்னிமலை - கைத்தறி போர்வை

ஈரோட்டிலிருந்து சுமார் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சின்னஞ்சிறு ஊர்தான் சென்னிமலை. இங்கு பிரசித்திபெற்ற முருகன் மலைக்கோயில் இருக்கிறது. தமிழகத்தில் பல பகுதியிலிருந்தும் சென்னிமலைக்கு ஆயிரக்கணக்கில் தினமும் பக்தர்கள் வந்துபோகிறார்கள். சாமி கும்பிட வருகிறவர்கள் அப்படியே நான்கைந்து போர்வைகளையும் வாங்கிக்கொண்டு போவது இங்கு சர்வ சாதாரணமான காட்சி.

பல வண்ணங்களில், பற்பல டிசைன்களுடன் தரத்திலும், நிறத்திலும் சென்னிமலை போர்வை தனிச்சிறப்பாக இருப்பதால் இதன் மவுசு இப்போதும் குறையவே இல்லை. இங்கு தயாராகும் போர்வைகள் அனைத்துமே கைத்தறி நெசவில் நெய்யப்பட்டவை என்கிறார்கள்.

  சென்னிமலையைச் சுற்றியுள்ள கிராமங்கள் சார்ந்த சுமார் ஐம்பதாயிரம் மக்கள் போர்வையை நெய்யும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு கூட்டுறவு மையங்களிலேயே விற்பனையும் செய்யப்படுகிறது. இந்த தொழிலில் பின்புலம் மற்றும் சென்னிமலை போர்வை பற்றி அறிந்துகொள்ள கூட்டுறவு விற்பனை மையமான சென்குமார் டெக்ஸின் மேலாளர் ஜெகநாதனை அணுகினோம்.

''எங்கள் முன்னோர் காலத்திலிருந்தே எங்களை அரவணைத்துக் கொண்ட தொழில் என்பதால் இங்கு வாழும் பல்லாயிரக்கணக்கானோருக்கு இதுதான் வாழ்க்கை. இங்கிருந்து மொத்தமாக விற்பனைக்கு வாங்குபவர்களைவிட சில்லறையாக சொந்த உபயோகங்களுக்கு வாங்குபவர்கள்தான் அதிகம்.

இங்கு தயாரிக்கப்படும் போர்வைகள் கைத்தறியால் நெய்யப்படுபவை என்பதால் இதன் ஆயுள் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கிறது. ஆனால், இயந்திரங்களால் தயாரிக்கப்படும் போர்வைகள் தண்ணீரில் நனைய நனைய நிறமும் மங்கிவிடும்; துணியும் மூன்று, நான்கு ஆண்டுகளுக்குள் நைந்து கிழிந்துவிடும். இங்கு தயாராகும் போர்வைகளில் 90 சதவிகிதத்துக்கும் மேலானவை கைத்தறியால் நெய்யப்படுபவை என்பதால் நம்பி வாங்கிச் செல்லலாம்.

வெளியூர் வியாபாரிகள், மருத்துவமனை, விடுதிகள் போன்றவை மொத்தமாகவும் வாங்குகின்றன. ஆரம்ப காலங்களில் பிளைன் ரகங்கள் மட்டும்தான் தயாரிக்கப்பட்டது. இப்போது அனைத்து விதங்களிலும் போர்வைகள் தயார் செய்து விற்கிறோம்'' என்றார்.

இங்கு தயாரிக்கப்படும் ஜக்காடு வகை போர்வைகள் தனிச் சிறப்பானது. டிசைன் நேர்த்தியோடு நெய்யப்படும் இந்த ஜக்காடு வகை போர்வை கம்பளி போர்வை போல அடர்த்தியாக இருக்கிறது. பெரும்பாலும் கூட்டுறவு சங்கங்கள் மூலமே விற்பனை நடப்பதால் முப்பது சதவிகித தள்ளுபடி விலையில் கிடைத்துவிடும். அண்ணா பிறந்த நாள் கொண்டாட்டம் என்றால் அரசு மேலும் பத்து சதவிகித தள்ளுபடி கொடுக்கும். அப்போது வாங்குபவர்களுக்கு நாற்பது சதவிகித தள்ளுபடி கிடைத்துவிடும். 150 ரூபாய் முதல் 500 ரூபாய்க்கு ரகத்துக்கு ஏற்ப போர்வைகள் கிடைக்கின்றன. தள்ளுபடி விலையில் 150 ரூபாய்க்கு வாங்கும் ஒரு போர்வையை வெளியூர்களில் 200 ரூபாய் வரை விற்கலாம் என்பது பிஸினஸ் ரகசியம்.

தேக்கமில்லாமல் எப்போதும் விற்பனை இருப்பதால் பழையது, புதியது என்கிற பிரச்னையே இல்லை. தலையணை உறை, துண்டு, கால்மிதிகளும் சில்லறை விலையில் தரமானதாக வாங்கிவர சென்னிமலை சரியான இடம். இனி ஈரோடு சென்றால் சென்னிமலைக்கு தாராளமாக ஒரு விசிட் அடித்து வரலாம்!

எந்த ஊரில் என்ன வாங்கலாம்! தேன் - மார்த்தாண்டம்.

எந்த ஊரில் என்ன வாங்கலாம்! தேன் - மார்த்தாண்டம்.


கன்னியாகுமரி என்றாலே உடனே நம் எல்லோரது ஞாபகத்துக்கும் வருவது முக்கடல் சங்கமம்தான். தென்னை, வாழை, காய்கறி, ரப்பர் என மாவட்டம் முழுவதும் விவசாயம் பச்சைப்பசேல் என்று இருக்கிறது. இந்த பயிர்களுக்கு நடுவே, ஊடுபயிர் சாகுபடியாக தேனீ வளர்க்க, அதிலிருந்து விவசாயிகள் நல்ல வருமானம் பார்த்து வருகின்றனர். இந்த மாவட்டம் முழுக்க தேன் உற்பத்தி பெரிய அளவில் நடப்பதால், குறைந்த விலையில் தரமான தேன் கிடைக்கிறது.

மார்த்தாண்டம் சுற்றுவட்டாரத்தில் மட்டும் சுமார் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ளன. இங்கு உற்பத்தியாகும் தேன் விவசாய கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனையாகிறது. இன்னும் சிலர் தனியாக கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தின் தனி அலுவலர் ஜான் வெஸ்லியைச் சந்தித்தோம். ''இங்கு பெரும்பாலான விவசாயிகள் தேன் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். அவர்களிடமிருந்து கொள்முதல் செய்து, இருப்பு வைத்து அக்மார்க் சான்றிதழ் பெற்று விற்பனை செய்கிறோம். 1937-ம் ஆண்டு இருபத்தைந்து நபர்கள் சேர்ந்து தொடங்கிய இந்த சங்கத்தில் தற்போது 1,361 பேர் உறுப்பினராக இருக்கின்றனர்.

எங்கள் சங்கத்திலிருந்து மட்டும் கடந்த வருடத்தில் 2,67,496 கிலோ தேன் இந்தியா முழுவதுக்கும் அனுப்பிருக்கோம். விவசாயிகள் கொண்டுவரும் தேனை பதப்படுத்தி ஒரு கிலோ பாட்டில் 186 ரூபாய்க்கும், அரை கிலோ 101 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம். வாங்குபவர்கள் பாட்டில் கொண்டுவரும்பட்சத்தில் 500 ரூபாய்க்கு, தேன் வாங்கினால் பத்து சதவிகித தள்ளுபடியும், பாட்டில் இல்லையென்றால் ஐந்து சதவிகித தள்ளுபடியும் கொடுக்கிறோம். திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டி பாலம், பத்மநாபபுரம் அரண்மனை என மார்த்தாண்டத்தை ஒட்டியுள்ள பகுதிகளுக்குச் சுற்றுலா வருபவர்கள் மார்த்தாண்டம் தேனை வாங்காமல் செல்வதில்லை. இதே அளவுக்கு தரமான தேனை வேறு ஊர்களில் வாங்க வேண்டுமென்றால் விலை அப்படியே டபுளாகும்' என்றார்.

தேனை பதப்படுத்திச் சொந்தமாக விற்பனை செய்துவரும் அன்பு செழியனிடம் பேசினோம். ''என்னோட வீட்டு புழக்கடை, ரப்பர், அன்னாசி, வாழைத் தோட்டங்களில் தேனீ பெட்டிகளை வைச்சுருக்கேன். தேனீ பெட்டி தயாரிப்பு, பாதுகாப்பு நுட்பங்கள்னு நுணுக்கமான நிறைய விஷயங்கள் இருக்கு. எல்லாத்துக்கும் மேல ஏக்கருக்கு பத்து பெட்டிதான் வைக்கணும். அதிகமா வைத்தால் தேன் கிடைக்குறது குறைஞ்சுடும். கூடவே பயிர்களில் அயல் மகரந்த சேர்க்கை ஏற்படுவதிலும் சிக்கலை ஏற்படுத்திடும். பொதுவாகத் தோட்டங்களில் பயிர்கள் பூ பூக்கும் காலங்களில் கூடுதலா தேன் கிடைக்கும். அதை எடுத்து நானே பிராசஸ் பண்ணி பாட்டிலில் அடைச்சு விற்பனை பண்ணிட்டு இருக்கேன். நுகர்வோர்களே தேடி வந்து வாங்கிட்டு போயிடுவாங்க. எங்க பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இதை குடிசைத் தொழிலாச் செஞ்சுட்டு இருக்காங்க'' என்றார் மகிழ்ச்சியோடு.
நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மார்த்தாண்டத்திலிருந்து தொடங்கி, குழித்துறை வரை சாலையின் இருபக்கமும் தேன் விற்பனை கடைகளின் அணிவகுப்புதான். கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஏற்றுமதி செய்யப்படுவது போக, இங்குள்ள கடைகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான கிலோ தேன் தினசரி வெளி இடங்களுக்கு ஏற்றுமதியாகிறது. அதிலும் 'அக்மார்க்’ முத்திரை பெற்றுவிட்டால் அதற்கான விற்பனை வாய்ப்பும் ஏறுமுகம்தான்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள அக்மார்க் தரம் பிரிப்பு ஆய்வகத்தில் வேளாண் அலுவலராக இருக்கும் ஆரோக்ய அமலஜெயனிடம் பேசினோம். ''தேனைப் பொறுத்தவரை பத்து கட்ட ஆய்வுக்கு உட்படுத்தி ஸ்டாண்டர்டு, ஏ, ஸ்பெஷல் என மூன்று பிரிவாக வகைப்படுத்துறோம். ஒரு குவிண்டால் தேனை தரம் பிரிப்பு செய்ய மத்திய அரசுக்கு 12 ரூபாய், மாநில அரசுக்கு 15 ரூபாய் என மொத்தம் 27 ரூபாய்தான் செலவாகும். அதாவது ஒரு கிலோவுக்கு வெறும் 27 பைசாதான். ஆனால், அக்மார்க் முத்திரை குத்திய தேனுக்கு உள்ளூர் முதல் உலகம் முழுவதும் விற்பனை வாய்ப்பும் பிரகாசம்தான்.
தேனைப் பொறுத்தவரை நாங்கள் நேரடியாகவே விவசாயிகள் தேனை சேமித்து வைத்துள்ள குடோன்களுக்குச் சென்று ஆய்வுக்கு உட்படுத்துறோம். அக்மார்க் முத்திரை வாங்கிய தேனை பதினெட்டு மாதங்கள் வரை விற்கலாம். மார்த்தாண்டம் தேன் மிகவும் பிரசித்தி பெற்றது. அதனால் நிறைய போலி தேன்களும் உலாவுகிறது. நுகர்வோர்கள் எச்சரிக்கையாக அக்மார்க் முத்திரை குத்திய தேனை வாங்கி பயன்படுத்தலாம்'' என்று பயனுள்ள தகவல்களை எடுத்து வைத்தார்.
மார்த்தாண்டத்தைச் சுற்றி பல நூறு கடைகள் இருந்தாலும், அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெந்நி கூட்டுறவு சங்கத்திலும், மார்த்தாண்டம் ஒய்.எம்.சி.ஏ. அலுவலகத்திலும், கதர் கிராமத் துறை அலுவலகத்திலும் சுத்தமான தேன் கிடைக்கும். இங்கு சென்று வாங்க முடியாதவர்கள் அக்மார்க் முத்திரைகொண்ட தேனை மட்டும் வாங்கலாம்! அடுத்தமுறை நாகர்கோவிலுக்கோ, கன்னியாகுமரிக்கோ போனால், ஒரு பாட்டில் தேனை மறக்காமல் வாங்கி வரலாம்!

30 வயதினிலே... நிச்சயம் தொடங்க வேண்டிய நிதித் திட்டங்கள்!

30 வயதினிலே... நிச்சயம் தொடங்க வேண்டிய நிதித் திட்டங்கள்!

காலத்தே பயிர் செய் என்பது நம் முன்னோர்கள் அனுபவித்து சொன்ன பொன்மொழி. எந்த வயதில் எந்த வேலையைச் செய்து முடிக்க வேண்டுமோ, அந்த வயதில் அந்த வேலையை முடித்துவிட்டால், பிற்பாடு அதுகுறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கலாம். முப்பது வயதைக் கடப்பதற்குமுன் எதிர்கால வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ, சில விஷயங்களைக் கட்டாயம் செய்திருக்க வேண்டும். அதுபற்றி எல்லாம் கவலைப்படாமல், இன்றைய பொழுதுகளை ஜாலியாக ஓட்டினால், ஐம்பது வயதுக்குப்பிறகு எல்லாவற்றுக்கும் அல்லாட வேண்டியிருக்கும். கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் என்றில்லாமல், இனிமையான எதிர்காலத்துக்கு 30 வயதினிலேயே அவசியம் தொடங்கி இருக்க வேண்டிய நிதித் திட்டங்கள்

‘நில்’ பேலன்ஸ்!

“பெற்றோர்கள் பணி ஓய்வு பெற்றபோது வாங்கிய சம்பளத்தைவிட இருமடங்கு, ஆரம்ப சம்பளமாகப் பெறும் தலைமுறை இது. ஆனாலும், பெற்றோர்கள் அளவுக்கு அவர்களால் குடும்பப் பொருளாதாரத்தை சாமர்த்தியமாக நிர்வகிக்க முடிவதில்லை. பல லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும், இளம்தலைமுறையினரில் பலருக்கு மாதத்தின் இறுதியில் அக்கவுன்ட் பேலன்ஸ் ‘நில்’ (Nil) என்கிற நிலையை அடைந்துவிடுகிறது. காரணம் சிக்கனம், சேமிப்பு பழக்கங்களில் இருந்து அவர்கள் வெகுதூரம் சென்றுவிட்டதே!

பெரும்பாலான இளைஞர்கள் திட்டமிட்டு வாழவேண்டும் என்றில்லாமல், இன்றைக்கு மகிழ்ச்சியாக இருந்தால்போதும் என்று நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறான விஷயம். இதன் விளைவு, வாழ்வின் இறுதிவரை சந்தோஷத்தை அருகில்கூட வர அனுமதிக்காமல் செய்துவிடும். அதனால் ஒருவர் முப்பது வயதை கடப்பதற்குமுன் கட்டாயம் கீழே குறிப்பிட்டுள்ள மிக முக்கியமான நிதித் திட்டங்களைத் தொடங்கி இருக்க வேண்டியது அவசியம்.

கொஞ்சம் ஜாலி!

கல்வி என்பது இன்றைய நிலையில் எல்லோருக்கும் அவசியம்தான். அதற்காக குறிப்பிட்ட வயதைத் தாண்டியும் தொடர்ந்து படித்துக்கொண்டே இருந்தால் வாழ்க்கையில் செட்டில் ஆவதில் பல பிரச்னைகள் ஏற்படு்ம். எனவே, படித்து முடித்துவிட்டு, 25 வயதுக்குள் நல்ல சம்பளம் கிடைக்கும் ஒரு வேலையில் சேர்ந்துவிடுவது அவசியம். வேலை அனுபவம் கிடைக்க இது உதவும் என்பதுடன், ஒரு வேலை பிடிக்கவில்லை என்றால் இன்னொரு வேலையைத் தேடி சேருவதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

சொந்த சம்பாத்தியம் வரும் இந்த சமயத்தில் இளைஞர்கள் கொஞ்சம் ஜாலியாக இருக்க நினைப்பதில் தவறில்லை. குடும்பப் பொறுப்புகள் பெரிய அளவில் இல்லாத இந்த நேரத்தில் மனதுக்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வதை பெரிய குறையாக சொல்ல முடியாது. என்றாலும் இந்த நேரத்திலேயே சேமிப்பைத் தொடங்குவது அவசியம் என்பதை இளைஞர்கள் உணர்வதில்லை. அடுத்த சில ஆண்டுகளில் திருமணம் என்பதால், அந்தத் திருமணத்தையொட்டி தன் எதிர்கால மனைவிக்கு பரிசளிக்க, நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க என நிறையச் செலவுகள் வரும். இதற்கான பணத்தை பெற்றோர்களிடம் கேட்டு வாங்குவதைவிட, கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துவைப்பது புத்திசாலித்தனம்.

என்னிடம் நிதி ஆலோசனை கேட்டு அதை ஒழுங்காக கடைப் பிடிக்கிறவர்களில் ரமேஷை எனக்கு மிகவும் பிடிக்கும். 25 வயதில் வேலைக்கு சேர்ந்தவுடனே கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்க்க ஆரம்பித்தார் ரமேஷ். 28 வயதில் அவருக்கு திருமணம் முடிகிறபோது கையில் கணிசமாக பணம் வைத்திருந்தார். திருமணம் முடிந்தபிறகும் அவர் சேமிப்பை நிறுத்தவில்லை. இன்றைக்கு அவருக்கு 32 வயது. எல்லா முதலீடுகளையும் பக்காவாக செய்து விட்டு, எதிர்காலம் குறித்த பயமே இல்லாமல் இருக்கிறார்.

காலாகாலத்துக்கு கல்யாணம்!

வேலைக்குச் சேர்ந்ததும் சில ஆண்டுகளில் அலுவலகப் பொறுப்பு அதிகரித்துவரும் சமயத்தில், திருமணம் என்கிற குடும்பப் பொறுப்பையும் சுமக்க வேண்டிய மகிழ்ச்சியான தருணம் ஏற்படும். அதிகபட்சம் 28 வயதுக்குள் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கிவிடுவது உத்தமம். அப்போதுதான் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள் திருமணம் முடிக்க சரியாக இருக்கும்.



ஆனால், இன்றைய இளைஞர்களின் மனநிலை, திருமணத்துக்குமுன்பு குறிப்பிட்ட அளவு பணம் சேர்க்கவேண்டும்; நிரந்தரமான வேலையாக  இருக்கவேண்டும் என்று நினைத்து திருமணத்தைத் தள்ளிப்போடுகிறார்கள். இதனால் திருமண வயதைக் கடந்துவிடும் அபாயம் ஏற்படுகிறது. முப்பது வயதுக்குப்பிறகு திருமணம் செய்துகொள்வதில் லேசான சலிப்பு தட்ட, கல்யாணம் ஆகாமலே பிரமச்சாரியாக வாழவேண்டிய கட்டாயத்துக்கு பலரும் தள்ளப்படுகிறார்கள்.

என் நண்பர் ஒருவர் 5 லட்ச ரூபாய் சேர்த்தபின் திருமணம் என்று உறுதி எடுத்துக்கொண்டார். கடைசியில் அந்தத் தொகையையும் சேர்க்க முடியாத நிலையில் 35 வயதுக்குபின் திருமணம் செய்துகொண்டார். நான்கு ஆண்டுகள் கழித்து குழந்தை பிறக்க அவரின் தேவைக்காகவும், குழந்தையின் எதிர்காலத்துக்காகவும் தொடர்ந்து உழைக்க வேண்டியதாகிவிட்டது. பள்ளிக்குச் செல்லும் மகன், அவனின் மேல்படிப்பு, திருமணம் என்ற வகையில் செலவுகளும் ஓய்வுபெறும் வரையில் நீளும் என்கிற நிலை. தாத்தாவாக இருக்கவேண்டிய நிலையில், தந்தையாக இருப்பது தர்மசங்கடத்தை தந்துகொண்டிருக்கிறது அவருக்கு. ஆனால் 25-30 வயதுக்குள் திருமணம் செய்திருந்தால், உடல் மற்றும் மனது ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சிக்கல் எதுவும் இல்லாமல் வாழ்க்கையைக் கடந்திருக்கலாம்.

காலம் தாழ்த்தி திருமணம் செய்துகொள்ளும்போது ஏற்படும் பெரிய சிக்கல் என்னவென்றால், நமது எதிர்காலத்துக்கான ஒருங்கிணைந்த நிதித் திட்டமிடலை சரியாகச் செய்ய முடியாது. திருமணத்துக்குப்பின் துணைவி வேலைக்குச் செல்பவராக இருந்தால், அவரது சம்பாத்தியத்தையும் சேர்த்து நிதித் திட்டமிடல் செய்யலாம். ஒரு குடும்பத்திலிருந்து ஓரிரு வருமானம்  வரும்போது அதைக்கொண்டு எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.

வசிக்க ஒரு வீடு!

25 - 30 வயதுக்குள் திருமணம் என்பது எவ்வளவு கட்டாயமோ, அந்த அளவுக்கு கட்டாயம் சொந்தமாக ஒரு வீடு அல்லது ஃப்ளாட்டை வாங்குவது. ஒரு சிலருக்கு ஏற்கெனவே சொந்தமாக வீடு இருந்தால் நல்லதுதான். என்றாலும் கூட்டுக் குடும்பமாக இருப்பவர்கள் தங்களின் எதிர்காலத்துக்கென தனியாக ஒரு வீட்டை அல்லது ஃப்ளாட்டை வாங்குவதில் எந்தத் தவறும் இல்லை. இந்த வீட்டை வாங்க தந்தை வழியிலோ அல்லது வேறு வழியிலோ பணம் கிடைக்கும் எனில் அதை வைத்து சொந்தமாக வீட்டை வாங்கிவிடலாம். ஆனால், இன்றைய சூழ்நிலையில் முழுப் பணத்தைச் செலுத்தி சொந்தமாக வீடு வாங்க முடியாது என்பவர்களே அதிகம். அப்படிப்பட்டவர்கள் வீட்டுக் கடன் வாங்கியாவது 30 வயதுக்குள் வீட்டை வாங்கிவிடுவது நல்லது.



காரணம், 30 வயதுக்குள் வீட்டுக் கடனை வாங்கும்போது, அதை திருப்பிச் செலுத்துவதற்காக காலஅவகாசம் அதிகம் இருக்கும். 30 வயதை கடந்து 40 வயதில் வீட்டுக் கடன் வாங்கினால், அன்றைய நிலையில் வீட்டின் மதிப்பும் அதிகமாக இருக்கும். திருப்பிச் செலுத்தும் காலம் குறைவு என்பதால், ஒவ்வொரு மாதமும் வங்கிக்கு கொடுக்கும் இஎம்ஐ தொகையும் அதிகமாக இருக்கும். இதனால் குடும்ப பட்ஜெட் பெரிதாக பாதிப்படைந்து, குடும்ப உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சி இல்லாத நிலை ஏற்படும். வீடு அல்லது ஃப்ளாட் வாங்கும் விஷயத்தில், விரலுக்கு ஏற்ற வீக்கமாக நம் பட்ஜெட்டுக்கு தகுந்தபடி வீடு வாங்க வேண்டும். பெரிய வீட்டை அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டு மாதாமாதம் இஎம்ஐ கட்டும்போது  கஷ்டப்படக் கூடாது. தவிர, வீட்டுக் கடனுக்காக கட்டும் இஎம்ஐ-க்கு வரிச் சலுகை உண்டு என்பதால், வீட்டுக் கடன் முடிகிற வரை வரிப் பணமும் மிச்சமாகும்!

பாதுகாப்புக்கு முக்கியத்துவம்!

சம்பாதிக்கும் ஒருவருக்கு எது இருக்கிறதோ இல்லையோ, நிச்சயமாக டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்கிற இரண்டும் இருந்தேயாக வேண்டும். 30 வயதை எட்டியவர்கள் இதில் சமரசம் செய்துகொள்ளவே கூடாது. இளம் வயதில் இந்த இரண்டு இன்ஷூரன்ஸையும் எடுத்துக் கொள்ளும்போது பிரீமியம் மிக மிக குறைவாக இருக்கும். உதாரணத்துக்கு, 25 வயதில் (குடி மற்றும் புகைபழக்கம் இல்லாதவர்கள்) ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளும்போது ஆண்டுக்கு சுமார் 10,000 ரூபாய் பிரீமியம் என அடுத்த 40 ஆண்டுகளுக்கு கட்டினால் போதும்.

அதேபோல, தனிநபர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியிலும் குறைந்த வயதில் எடுத்துக்கொள்ளும்போது குறைந்த அளவிலேயே பிரீமியம் வசூலிக்கப்படுகிறது. தவிர, காத்திருப்புக் காலம் என்கிற பிரச்னையும் எதிர்காலத்தில் இல்லாமல் இருக்கும். அதனால் 30 வயதுக்குள் டேர்ம் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்வது அவசியமாகும். திருமணமானவுடன் மனைவியின் பெயரையும், குழந்தை பிறந்தவுடன் அதன் பெயரையும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் சேர்த்துவிடுவது அவசியம்.

தேவையில்லாத கடன் வேண்டாமே!

நம்மில் பலர் வேலைக்குச் சேர்ந்தவுடன் கார் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்காக கார் லோன் வாங்கி, முன்தொகைக்காக தனிநபர் கடன் எடுத்து ஒவ்வொரு மாதமும் அதிக இஎம்ஐ கட்டுகிறார்கள். இந்த விஷயத்தில் நமது தேவை என்ன, நமது பட்ஜெட் என்ன என்பதை அறிந்து முடிவெடுப்பது அவசியம். கார் கடனோ, தனிநபர் கடனோ கூப்பிட்டுக் கொடுக்கிறார்கள் என்பதற்காக அதை வாங்கி, நம் தலையிலே நாமே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளக் கூடாது. எனவே, ஏற்கெனவே கல்விக் கடன், கிரெடிட் கார்டு கடன், தனிநபர் கடன் வாங்கியிருந்தால், அவற்றை 30 வயதுக்குள் திரும்பச் செலுத்திவிடுவதுடன், 30 வயதுக்கு மேல் இதுமாதிரியான கடன்களில் சிக்காமல் இருப்பது அவசியம்.

முதலீட்டுக்கு அடித்தளமிடுங்கள்!



அடிப்படையான இந்த விஷயங்களை செய்து முடித்தபின், குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணத்துக்கான செலவு மற்றும் ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டையும் தொடங்குவது அவசியம். குழந்தைகளின் படிப்புக்கு 18 ஆண்டுகளும், திருமணத்துக்கு 24 ஆண்டுகளும், ஓய்வு காலத்துக்கு 30 ஆண்டுகளும் இருக்கும் என்பதால் குறைந்த தொகையை முதலீடு செய்து அதிக வருமானத்தை திரும்பப் பெற முடியும்.

உதாரணமாக, 25 வயதுள்ள ஒருவர் ஓய்வுக்காலத்துக்காக மாதம் 2,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்டில் தொடர்ந்து முதலீடு செய்வதாகக் கொண்டால், அவரது ஓய்வுக்காலத்தில் அதாவது அவரின் 60-வது வயதில் 2.93 கோடி ரூபாய் கிடைக்கும். இவ்வளவு பெரிய தொகை கிடைப்பதற்கு காரணம், முதலீட்டுக்கான காலம் அதிகமாக இருப்பதுதான். அவரே ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டை 10 ஆண்டுகள் கழித்து, அதாவது தன்னுடைய 35-வது வயதில் மாதம் 5,000 ரூபாயாக அதிகரித்து முதலீடு செய்தாலும் ஓய்வின்போது கிடைக்கும் தொகை வெறும் 1.62 கோடி ரூபாயாகத்தான் இருக்கும்.

மேலே சொன்ன நிதித் திட்டங்கள் அனைத்தையும் 30 வயதுக்குள் ஒருவர் ஆரம்பித்திருந்தால்தான் 50 வயதுக்குப் பிறகு எப்படிப்பட்ட சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் தைரியத்துடன் இருக்கலாம். உங்களில் 30 வயது நிரம்பியவர்களில் எத்தனை பேர் இந்த முதலீடுகளை செய்து முடித்திருக்கிறீர்கள்?

சிக்கலில் இருந்து விடுபட - " சிக்ஸ் சிம்பிள் ரூல் "

சிக்கலில் இருந்து விடுபட எளிமையான 6 வழிகள்!

சிக்கலில் இருந்து விடுபட - " சிக்ஸ் சிம்பிள் ரூல் "

நிர்வாகிகளுக்கு தனி அதிகாரத்தை பெறும் சூழலையும், அவர்களுடன் பணிபுரிபவர்கள் அனைவரின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கான சூழ்நிலையையும் உருவாக்கினாலே பாதி சிக்கல்கள் வரவே வராது.

புத்தகத்தின் பெயர்: சிக்ஸ் சிம்பிள் ரூல் (Six Simple Rule)

ஆசிரியர்கள்: பீட்டர் டோல்மென் மற்றும் வெஸ் மொரியெக்ஸ் (Peter Tollman and Yves Morieux)

பதிப்பாளர்: ஹார்வேர்ட் பிசினஸ் பப்ளிஷிங்

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் வெஸ் மொரியெக்ஸ் மற்றும் பீட்டர் டோல்மென் இணைந்து எழுதிய ‘சிக்ஸ் சிம்பிள் ரூல்ஸ்’ எனும் தொழில்ரீதியாக எதிர்கொள்ளும் சிக்கலான விஷயங்களை எப்படி சிரமமில்லாமல் நிர்வகிப்பது என்பதைச் சொல்லும் புத்தகத்தை.



இன்றைக்கு வெற்றிகரமாக ஒரு பிசினஸை நடத்துவது என்பது மிக மிக கடினமான மற்றும் சிக்கலான ஒன்றாக ஆகிவிட்டது. ஏனென்றால், தொழில்கள் எல்லாமே மிகவும் போட்டி மற்றும் பல்வேறு கடும் சிக்கல்களைக் கொண்டதாக மாறிவிட்டது.

நிறுவனங்களின் சிஇஓ-வாக இருந்தாலும் சரி, ஆர் அண்ட் டி தலைவராக இருந்தாலும் சரி, விற்பனை இயக்குநராக இருந்தாலும் சரி, ஹோட்டலில் வரவேற்பாளராக இருந்தாலும் சரி, ஒரு ரயில் ஓட்டுநராக இருந்தாலும் சரி, அவரவர் செய்யும் தொழிலில் நடைமுறை சிக்கல்கள் அதிகமாகிக்கொண்டே வருகிறது.

இந்த சிக்கல்களுக்கு எது காரணம் என்று ஆராய்ந்தால், சிக்கல்கள் என்பவை ஒரு நோய்க்கான அடையாளமே தவிர, சிக்கலே ஒரு நோய் அல்ல என்பது புரியும். சிக்கல்களின்     அடிவேரைக் கண்டுபிடிக்க முயன்றால், நிர்வாகங்கள் சிக்கல்களை எதிர்கொள்வதில் இரண்டு வகையான முறைகளை கையாள்வது தெரியும். அதில் ஒன்று, கடினமான வகையில் சிக்கல்களை கையாள்வது. இரண்டாவது, மென்மையான வகையில் சிக்கல்களை கையாள்வது.

இதில் கடினமான வகை என்பது, தொழில் என்றால் சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். இதைச் சமாளிக்க சரியான சிஸ்டத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிர்வாக ரீதியில் பலவிதமான ஸ்ட்ரக்சர்கள், பிராசஸ்கள், சிஸ்டம்ஸ்களை எல்லாம் உருவாக்கி, நடைமுறைபடுத்துவது.

உதாரணத்துக்கு, கம்பெனியின் நிர்வாகத்துக்கு ஒவ்வொரு நாட்டிலும்/ஊரிலும் இருக்கும் வாடிக்கையாளர்களின் ரசனைக்கு தகுந்தாற்போல் தயாரிப்புகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.



 இதனால் லாபம் அதிகரிக்கும் என்ற எண்ணத்துடன் கம்பெனி செயல்பட்டால், இந்த வகை செயல்பாட்டை ஊக்குவிப்பதற்கு கம்பெனியின் நடப்பு முழுக்க முழுக்க டீ-சென்ட்ரலைஸ் செய்யப்பட்டிருக்கவேண்டும்.

மாறாக, உற்பத்தித்திறனை உயர்த்தி செலவினத்தைக் குறைத்தால் (எகனாமிஸ் ஆஃப் ஸ்கேல்) லாபம் பார்க்க முடியும் என்ற கொள்கையுடன் செயல்பட்டால், நிர்வாகம் சென்ட்ரலைஸ் செய்யப்பட்டிருக்கவேண்டும்.

ஒரே மாதிரியான தயாரிப்புகளை ஒரே இடத்தில் இருந்து செய்து உலகம் முழுவதும் விநியோகம் செய்யும்போது மூலப்பொருட்களில் ஆரம்பித்து, சம்பளம் வரையில் பெரிய அளவில் செலவினம் குறையும். இந்த வகை எண்ணத்தில் செயல்பட நினைக்கும் நிர்வாகம், சென்ட்ரலைஸ்டு ஆப்ரேஷன் என்ற நடைமுறையைக் கடைப்பிடிப்பது என்பது கடினமான வகையில் சிக்கல்களை கையாளும் முறையாகும்.

மென்மையான வகையில் சிக்கல்களை கையாளுவது என்பது பணியாளர்களை திறம்பட செயல்பட வைப்பதற்காக பல்வேறு வகை உற்சாகப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பது. உதாரணத்துக்கு, டீம் பில்டிங்குக்கு முக்கியத்துவம் கொடுப்பது, பணியாளர்களுடைய முயற்சியை ஊக்குவிக்கும் செயல்கள் பலவற்றை செய்வது, நல்லதொரு சுற்றுலா புரோகிராமை அமைத்துக் கொடுத்து அனைவரையும் ரிலாக்ஸ்டாக ஆக்கி, வேலைத்திறனை ஊக்குவிப்பது போன்றவற்றை கடைப்பிடிப்பதாகும்.

இந்த வகை கையாளுதல் என்பது, முழுமையாக உளவியல் ரீதியான கையாளுதல் வகையாகும். பிசினஸ் என்றால் சிக்கல் இருக்கும். சிக்கல்களை கையாளுதல்தான் அதில் ஈடுபட்டிருபவர்களின் வேலை, அவர்களை களைப்படையாமலும் புத்துணர்வுடனும் வைத்திருப்பதுதான் பிசினஸின் கடமை என்பது மென்மையான அணுகுமுறை.

இந்த அணுகுமுறையின் அடிப்படையே, மனிதர்களே சிக்கல்களை உருவாக்கி அவற்றை தீர்க்கவும் செய்வார்கள் என்பதுதான். சிக்கல்கள் தீராமல் தொடர்ந்தால், அது மனிதர்களாலேயேயன்றி வேறெதனாலும் இல்லை. மனிதர்களின் தவறான எண்ணத்தாலும் கண்ணோட்டத்தாலும் மட்டுமே இது நடக்கிறது என்ற காரணத்துடன் மேலும் மனிதர்களை முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரைக்கும் முறை இது.

இந்த இரண்டு முறையுமே சிக்கல்களுக்கான அடிப்படை என்று சொல்லும் ஆசிரியர்கள், சிக்கல்களை களைய அதை எதிர்கொள்ளும் நபர்கள் அந்த நிமிடத்தில் செய்யும் முடிவே (Judgement) அதிக அளவில் உதவும் என்கின்றனர்.

என்னதான் ஸ்ட்ரக்சர், பிளானிங், சட்டம் எல்லாம் இருந்தாலும் சிக்கல் என்று ஒன்று வந்தபின்பு சமாளிக்கவும், இனி வராமல் ஓரளவுக்கு குறைக்கவுமே இவை அதிக அளவில் உதவுகின்றன. சிக்கல் வரும் என்பதை எதிர்பார்த்தே இருக்கும் நிலைக்கு நிர்வாகிகளின் புத்திக்கூர்மையும்,  அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரமுமே உதவும்.

நிர்வாகிகளின் புத்திசாலித்தனத்தையும், கூர்மதியையும், விவேகத்தையும் அதிகரிக்கத் தகுந்தாற்போன்ற நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே சிக்கல்களை தவிர்க்கவும், சமாளிக்கவும் முடியும் என்கின்றனர் ஆசிரியர்கள். இதை விட்டுவிட்டு சிஸ்டம், சட்டம் என பலவற்றையும் அடுக்கி வைப்பதால் மேலும்மேலும் சிக்கல்கள் மட்டுமே அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றது என்றும் எச்சரிக்கிறார்கள்.

நிர்வாகிகளுக்குத் தேவையான தனி அதிகாரத்தை பெறும் சூழலையும், நிர்வாகிகள் அவர்களுடன் பணிபுரிபவர்கள் அனைவரின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கான சூழ்நிலையையும் உருவாக்கினாலே பாதி சிக்கல்கள் வரவே வராது என்கின்றனர் ஆசிரியர்கள். இந்த வகை நடவடிக்கையை எடுக்கத் தேவைப்படும் ஆறு சிம்பிளான ரூல்களையே இந்தப் புத்தகத்தில் கூறியுள்ளனர் ஆசிரியர்கள்.

முதலாவதாக, நிர்வாகங்கள் நிர்வாகிகளும் பணியாளர்களும் உண்மையில் என்ன செய்கின்றனர் என்றும் அதை எதற்காக அவர்கள் செய்கின்றனர் என்பதையும் தெளிவாகப் புரிய வைத்துவிட வேண்டும் என்கின்றனர். இதை முதலில் செய்துவிட்டால் மட்டுமே பின்னால் வரும் ரூல்களை நன்றாக அமுல்படுத்த முடியும் என்கின்றனர்.

இரண்டாவதாக, அனைவரையும் இணைக்கும் இணைப்புப் பாலம் போல் திகழும் இன்டெக்ரேட்டர்களை வலுப்பெறச் செய்தல் என்பதைச் சொல்லும் ஆசிரியர்கள், இந்த வகை இணைப்புப் பாலங்களை வலுவடையச் செய்வதால் அனைவருமே பலன் பெறுவார்கள் என்கின்றனர். அதிகாரமும், கூட்டணியும் இணைந்து இருந்தால், அதிக அளவில் செய்தி பரிமாற்றங்கள் நடைபெற்று சிக்கல்கள் வருமுன்னரே அவற்றை தவிர்ப்பதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டுவிடும் என்கின்றனர்.



மூன்றாவதாக, சிக்கலான இடங்களில் பணிபுரிவோருக்கு அதிக அளவிலான அதிகாரங்களை வழங்குதல் என்கின்றனர் ஆசிரியர்கள். நான்காவதாக, நிர்வாகிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பர உதவியை செய்ய போட்டி போடும் அளவுக்கான சூழலை வளர்த்தல் என்கின்றனர். இந்த வகை சூழலும் சிக்கல்கள் வருமுன்னரே அலர்ட்டாக இருக்க வழிவகை செய்யும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

ஐந்தாவதாக, இன்றைய வேலையை செய்யும்போதே நாளைக்கு வரப்போகும் மாறுதல்கள் எப்படி இன்று செய்யும் வேலையை மாற்றியமைக்கும் என்பதை உணரச் செய்யும் வகையில் செயல் திட்டங்களை அமைத்தல் என்கின்றனர் ஆசிரியர்கள்.

ஆறாவதாக, ஆசிரியர்கள் சொல்வது சிக்கல்களுக்கான பெரும் எதிரி அனைவரும் ஒன்றாய் இணைந்து செயல்படுவது என்பது கண்கூடாகத் தெரியும் ஒரு விஷயம். அதனால் இணைந்து செயல்பட உதவும் (கோ-ஆப்பரேட்) நபர்களை கண்டெடுத்து, அவர்களுக்கான சரியான அங்கீகாரங்களை செய்யுங்கள் என்பதைத்தான். ஏனென்றால் இணைந்து செயல்பட விரும்பும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பே சிக்கல்களை உருவாவதைத் தவிர்த்து, இருக்கும் சிக்கல்களை தீர்க்கவும் உதவி செய்யும் என்கின்றனர் ஆசிரியர்கள். இந்த ஆறு சிம்பிள் ரூல்களை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது பற்றியும் விளக்கமாகச் சொல்லியுள்ள ஆசிரியர்கள், நல்ல பல உதாரணங்களைக் கூறி புத்தகத்தை சிறப்படையச் செய்துள்ளனர்.

 சிக்கல் இல்லாத வேலை என்பதை எதிர்பார்க்காத நிர்வாகமும் இல்லை; நிர்வாகிகளும் இல்லை. கொஞ்சம் கடினநடையில் இருந்தாலுமே நிர்வாகிகளும், நிர்வகிக்கும் பதவிக்கு வர நினைப்பவர்களும் படிக்கவேண்டிய முக்கிய புத்தகம் இது எனலாம்.

புதிய முயற்சிகளும் நம்பிக்கையான உழைப்பும். - ஏ. நாகராஜ், அணில் சேமியா.

புதிய முயற்சிகளும் நம்பிக்கையான உழைப்பும். - ஏ. நாகராஜ், அணில் சேமியா.


''பலசரக்கு கடையில் 75 ரூபாய்க்கு வேலை பார்த்த நான் இன்று, வருடத்திற்கு 120 கோடி ரூபாய் டேர்னோவர் செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் எனது வளர்ச்சிக்காக மேற்கொண்ட எல்லா முயற்சிகளுமே திருப்புமுனைதான்.

எனக்கு எந்த படிப்பும் கிடையாது. குடும்ப நிலைமைக் காரணமாக சிறு வயதிலேயே பலசரக்கு கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். நான் வேலை பார்த்த கடையின் முதலாளி வேறு ஏதாவது தொழில் செய்யலாம் என நினைத்தார். சேமியா தயாரித்து விற்கலாம் என அவர் முடிவு செய்தபோது, அந்த வேலையைக் கற்றுக்கொள்ள நம்பிக்கையான ஆள் வேண்டும் என என்னை தேர்ந்தெடுத்தார்.

கோயம்புத்தூரிலிருந்து வேலையைக் கற்றுவந்த என்னை நம்பி, கடை முதலாளி 55 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் இந்த தொழிலைத் தொடங்கினார். உற்பத்தி செய்வதோடு, அதன் கணக்குவழக்குகளையும் நானே பார்த்தேன். இதனால் கொள்முதல் செய்வது, ஏஜென்டுகளை நியமிப்பது என எல்லா பொறுப்புகளையும் என்னிடம் ஒப்படைத்ததோடு,50 சதவிகித உரிமையையும் எனக்குத் தந்தார் என் முதலாளி.

அதுவரை ஜூபிடர் சேமியா என்கிற பெயரில் இருந்த பிராண்டை அணில் சேமியா என பெயர் மாற்றினோம். விற்பனையை அதிகரிக்க விளம்பரம் தேவை என்றறிந்து  ஒவ்வொரு ஊராகச் சென்று சுவரில் எழுதுவோம். சேமியாவை வீடுகளில் இனிப்பு, பதார்த்தம் செய்ய மட்டுமே பயன்படுத்துவார்கள். இதை மாற்றி டிபன் வகைகளும் செய்யத் தோதாக மெலிதான இழைகள் கொண்ட சேமியா வகைகளைச் செய்து மக்களிடம் கொண்டு சென்றோம். எனது நம்பிக்கையான உழைப்பிற்காக நிறுவனத்தின் மொத்த உரிமையையும் என்னிடமே கொடுத்தார் என் முதலாளி.

பத்து வருடத்துக்கு முன்பு வரைகூட சராசரி வளர்ச்சியே இருந்தது. மாறிவரும் நமது உணவுப் பழக்கவழக்கங்களில் உடனடி உணவுகள் இடம் பிடிக்கத் தொடங்கியதிலிருந்து எங்கள் வளர்ச்சியும் வேகமெடுத்தது. இதற்கேற்ப, ஐந்து நிமிடத்தில் டிபன் என்கிற ஐடியாவை விளம்பரப்படுத்தினோம். ராகி சேமியா என்கிற எங்களது அடுத்த முயற்சிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

நமது பாரம்பரிய உணவு வகைகளையும் நகர்ப்புற மக்களிடம் கொண்டு செல்லலாமே என்று நினைத்து,  புட்டுமாவு கொண்டு வந்தோம். சேமியா மட்டுமில்லாமல் இப்போது லெமன் சேமியா, புளியோதரை சேமியா என்று புதிய முயற்சிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

இன்று ஆயிரம் பேருக்கு மேல் பணியாற்றும் நிறுவனமாக வளர்ந்ததற்குப் பின்னால் என் புதிய முயற்சிகளும், நம்பிக்கையான உழைப்பும் நிறையவே இருக்கிறது.''