www.rupeedesk.in

திடீர் வேலை இழப்பு... சமாளிக்க 10 வழிகள்

திடீர் வேலை இழப்பு... சமாளிக்க 10 வழிகள் !


பொருளாதாரம் ஒருபக்கம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் இந்த வருடம் வேலைவாய்ப்பு பிரகாசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வெளிநாட்டு நிறுவனங்கள் சில தங்களின் தொழிற்சாலைகளை மூடி வருகின்றன. இதனால் பலர் வேலை இழந்து வருகின்றனர். ஐ.டி கம்பெனிகளிலும் ஆட்குறைப்பு அதிகமாகி வருகிறது.  வேலை இழப்பு ஏற்படும்போது அடுத்த வேலையைத் தேடிக்கொள்ள சில மாதங்களாவது ஆகும். அந்தச்சமயத்தில் பொருளாதார ரீதியாகப் பிரச்னை இல்லாமல் இருந்தாலே எளிதாகவும், நிம்மதியாகவும் வேலை தேட முடியும். மாத சம்பளம் தடைபடும்போது அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்வது அவசியம். இதுபோன்ற சூழ்நிலைகளில் பொருளாதார ரீதியாக சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துப் பார்ப்போம்.

1. வேலைக்குச் சேர்ந்தவுடனேயே சேமிப்பைத் தொடங்கிவிட வேண்டும். அப்போதுதான் நீண்ட காலத்தில் சேமிப்பு அதிகம் இருக்கும். பெரும்பாலும், 23-25 வயதுக்குள் வேலைக்குச் சேர்ந்துவிடுகிறார்கள் இன்றைய இளைஞர்கள். வேலைக்குச் சேர்ந்தது முதல் மாத சம்பளம் வாங்கியதும் குறைந்தபட்சம் மாதம் ரூ.2 ஆயிரமாவது சேமிப்பது நல்லது. ஆக, ஒரு வருடத்துக்கு ரூ.24 ஆயிரம் சேமிப்பாக இருக்கும். அப்போதுதான் இதுபோன்ற எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்படும்போது அதைச் சமாளிக்க எளிதாக இருக்கும்.



2.எப்போதுமே மாத சம்பளத்தைப் போல, 3-லிருந்து 6 மடங்கு தொகையைக் கையில் வைத்திருப்பது நல்லது. மாத சம்பளம் ரூ.20 ஆயிரம் எனில், ரூ.60 ஆயிரத்திலிருந்து ரூ.1.2 லட்சம் வரை வைத்திருப்பது முக்கியம். இந்த அளவு தொகையைச் சேமிப்பாக வைத்தபிறகே, பிற தேவைகளுக்காக பணத்தைச் சேமிப்பது புத்திசாலித்தனமாக இருக்கும். அவசரத் தேவைக்காக சேமித்து வைத்திருக்கும் இந்தப் பணத்தில் 50 சதவிகிதத்தை தனியாக ஒரு வங்கி சேமிப்புக் கணக்கிலும், 50 சதவிகித தொகையை லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் வைத்திருப்பது நல்லது.

3. கடன் வாங்கி எந்த முதலீட்டையும் மேற்கொள்ளக் கூடாது. அதாவது, சிலர் தங்களுடைய நண்பர்கள் வாங்குவதைப் பார்த்து, தனிநபர் கடனை வாங்கி, நிலம் வாங்குவார்கள். இது முற்றிலும் தவறு. காரணம்,  வாங்கிய கடனுக்கான வட்டியைவிட, முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. கையில் பணம் இருந்தால் மட்டும் முதலீடு செய்வது சிறப்பாக இருக்கும். மேலும், மாத சம்பளத்தில் 30-50 சதவிகிதத்துக்குமேல் கடன் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. முடிந்தவரை தனிநபர் கடனை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இதற்கு வட்டி விகிதம் அதிகம்.



4.வேலைக்குப் போகிறோம், அதன் மூலம் சம்பளம் கிடைக்கிறது என்றில்லாமல், சில முதலீடுகள் மூலமாக வருமானம் கிடைக்கக்கூடிய வழிகளை மேற்கொள்வது நல்லது. பெரும்பாலான வர்கள் தங்கத்தை சிறந்த முதலீடாக நினைப்பார்கள். தங்கத்தின் விலை முன்புபோல் அதிக லாபம் தருவதாக தற்போது இல்லை. தவிர,  தங்க நகையை விற்கும்போதும் சேதாரம் என்கிற வகையில் கணிசமான தொகையை இழக்க வேண்டியிருக்கும். இதனால் குறைவான லாபமே கிடைக்கும். எனவே, முதலீட்டின் மூலமாக அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதா என்பதைப் பார்த்து முதலீடு செய்வது நல்லது.

5. பள்ளி கல்விக் கட்டணம், இன்ஷூரன்ஸ் பிரீமியம் ஆகியவற்றை ஆண்டின் துவக்கத்தில் மொத்தமாகச் செலுத்திவிடுவது நல்லது. இப்படி செலுத்தும்போது தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்குத் தேவைப்படும் தொகைக்கு தனியாக வங்கியில் ஆர்டி கணக்கு ஆரம்பித்து, அதன்மூலம் சேமிக்கலாம். அப்போதுதான் வேலை இழப்பின்போதும் இதுபோன்ற முக்கியமான காரியங்கள் தடைபடாமல் இருக்கும்.

6. குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கவர் செய்யும் வகையில் ஹெல்த் இன்ஷூரஸ் பாலிசி எடுத்து வைக்க வேண்டும். அப்போதுதான் எதிர்பாராதவிதமாக ஏற்படும் மருத்துவச் செலவுகளிலிருந்து தப்பிக்க முடியும். ஏனெனில், மருத்துவச் செலவு என்பது எப்போது வேண்டுமானாலும் ஏற்படும். அது வேலை இல்லாத நேரத்தில் நிகழும்போது கூடுதல் மன அழுத்தத்தை உருவாக்கும். மேலும், சிலர் நிறுவனத்தில் வழங்கும் குரூப் இன்ஷூரன்ஸை மட்டும் நம்பியிருப்பார்கள். இது முற்றிலும் தவறு. வேலையில் இல்லாத நேரத்தில் இது கைகொடுக்காது.

7.சம்பளத் தொகை முழுவதுக்கும் செலவுகளைத் திட்டமிடாமல், 70 சதவிகிதக்குள் செலவுகளை வைத்துக்கொள்வது நல்லது. மீதமுள்ள 30 சதவிகித தொகையை முதலீடு செய்வது நல்லது. மாத சம்பளம் ரூ.20 ஆயிரம் எனில், அதில் ரூ.14 ஆயிரத்துக்குள் செலவுகளைத் திட்டமிட வேண்டும். தேவையில்லாத ஆடம்பரச் செலவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. மீதமுள்ள தொகையை நல்ல முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது.

8. கடன் வாங்காமல் வாழ்க்கை நடத்துவது நல்லது. வீட்டுக் கடன் போன்ற சொத்து சேர்க்கும் கடன்களை வாங்குவதில் தவறில்லை. காரணம், இதற்கு வட்டி குறைவு. அதுவே தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டு உபயோக பொருட்களுக்கான கடன் ஆகியவற்றை முடிந்தவரை தவிர்ப்பதே நல்லது. சில நிறுவனங் கள் ஜீரோ சதவிகிதத்தில் கடன் கொடுக்கிறோம் என்று சொன்னால், உடனே கடன் வாங்க கையை நீட்டிவிடக்கூடாது. இது சாத்தியமா என்பதை நன்கு ஆராய்ந்தபின்பே வாங்க வேண்டும். முன்பின் யோசிக்காமல் கடனை வாங்கிவிட்டால், பிற்பாடு வேலை இழந்து நிற்கும்போது அசலையும் வட்டியையும் தவறாமல் கட்டுவது கூடுதல் சுமையாக இருக்கும்.



9.பார்க்கும் பொருளை எல்லாம் வாங்க  வேண்டும் என நினைக்கக் கூடாது. அந்தப் பொருள் கட்டாயம் தேவையா, அதனால் என்ன பயன் என்பதையெல்லாம் யோசித்த பின்பே முடிவு எடுப்பது புத்திசாலித்தனம். வீட்டுக்கு ஏசி தேவை எனில், அதன் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து பார்த்துவிட்டு, தேவை என்கிற பட்சத்தில் மட்டுமே வாங்க வேண்டும்.

10.வேலை இழப்பு ஏற்பட்டதற்கான காரணத்தை ஆராய்ந்து, அதே தவற்றைத் திரும்பவும் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதோடு நின்றுவிடாமல் இடைப்பட்ட காலத்தில் வேலை சார்ந்த திறமைகள் மற்றும் தகுதியை வளர்த்துக்கொள்வது இக்கட்டான சூழலில் கைகொடுக்கும்.

வாழ்வை வளமாக்கும் 10 ஃபைனான்ஷியல் ஹேபிட்ஸ்!

வாழ்வை வளமாக்கும் 10 ஃபைனான்ஷியல் ஹேபிட்ஸ்!



வளம்பெறும் குடும்பங்கள்!


நிதித் திட்டமிடல் என்கிற இரண்டு வார்த்தைக்குள் பத்து விஷயங்கள் ஒளிந்து கிடக்கின்றன. ஒரு குடும்பம் பொருளாதார ரீதியாக தனது வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள, இந்தப் பத்து விஷயங்களை ஒவ்வொருவரும் தங்களது முதலீட்டு எண்ணங்களாக உருவாக்கிக் கொள்வது முக்கியம். அந்த எண்ணங்களே நமது வாழ்க்கையின் எதிர்கால குறிக்கோள்களை அடைய உதவி செய்யும். முக்கியமான இந்தப் பத்து விஷயங்களை பத்து  நிதி ஆலோசகர்களிடம் கேட்டோம். இந்த விஷயங்களைத் தெளிவாக எடுத்துச் சொன்னதுடன், அவற்றைக் கடைப்பிடித்துக் கொண்டு வாழ்க்கையில் தங்களது நிதித் திட்டமிடலை வெற்றிகரமாகக் கையாளும் பத்து குடும்பங்களையும் கண்டுபிடிக்க நமக்கு உதவினார்கள். உங்கள் வாழ்க்கையை வளமாக்கும் அந்தப் பத்து விஷயங்கள் இதோ...


1திட்டமிட்டால்தான் தித்திக்கும் வாழ்க்கை!

முதலில், திட்டமிட்டு வாழ்வதன் அவசியம் குறித்து விளக்கினார் நிதி ஆலோசகர் யு.என்.சுபாஷ். “தேவை வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலை மாறி, எதிர்காலத் தேவைகளை வகைப்படுத்தி அதற்காக திட்டமிட்டு முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் இன்றைய மனிதர்களின் மனதில் பெருகி வருகிறது. என் வாடிக்கையாளர்களில் ஒருவரான ராக்கி, தனது 30-வது வயதில் நிதி ஆலோசனைக் கேட்டு வந்தார். எதிர்காலக் குறிக்கோள்களில் அவருக்கு இருந்த தெளிவு என்னைச் சற்று வியக்கவே செய்தது. அவருக்காக நான் செய்துதந்த நிதித் திட்டமிடலை முழுமையாகப் புரிந்துகொண்டு, குழந்தைகளின் கல்விக்கு, திருமணத்துக்கு, ஓய்வுக்காலத்துக்கு என தனது சம்பாத்தியத்திலிருந்து ஒரு பகுதியை முதலீடாகச் செய்து வருகிறார்.
இவரின் குழந்தை, கல்லூரிப் படிப்பை மேற்கொள்ளும்போது முதலீடுகள் பெருகி இருக்கும் என்பதால், இவர் கல்விக் கடன் வாங்க வேண்டிய தேவை இருக்காது. அதேபோல, குழந்தைகளின் திருமணத்துக் காகவும், தனது ஓய்வுக்காலத்திலும் யார் கையையும் எதிர்பார்க்கும் நிலையை இவர் மேற்கொண்டிருக்கும் முதலீடுகள் ஏற்படுத்தாது. ஆகையால், எல்லோரும் அவரவர்களின் குடும்பங்களுக்கான குறிக்கோள்களைக் குறித்துக்கொண்டு, அதற்கான முதலீட்டுத் திட்டங்களைத் திட்டமிடுங்கள். அப்போதுதான் வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பு இருக்கும், வாழ்க்கையும் வளமடையும்” என்றார்.



‘‘திட்டமிடலின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன்!’’

திட்டமிடல் நடைமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல், தொழிலே கதி என்று இருந்து, திட்டமிடலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட சேலம் கிருஷ்ணனிடம் பேசினோம். “சுயமாகத் தொழில் செய்துவரும் எனக்கு, ஆரம்பத்தில் எதிர்காலத் தேவை குறித்த எண்ணமும், அதற்கான திட்டங்களும் இல்லாமல் இருந்தது. லாபமாகக் கிடைக்கும் பணத்தைத் திரும்பவும் தொழிலுக்குப் பயன்படுத்தி வருமானத்தைப் பெருக்க மட்டும் செய்தேனே தவிர, குடும்பத்தின் எதிர்காலத் தேவைகள் என்ன, அதற்காக எப்படி முதலீடு செய்வது என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டவில்லை. நண்பர் ஒருவரின் வழிகாட்டுதலால் நிதி ஆலோசகரைச் சந்தித்துப் பேசியபோதே திட்டமிடல் குறித்த முக்கியத்துவம் புரிந்தது எனக்கு. முதலில் கல்வித் தேவைக்காக முதலீட்டை ஆரம்பித்தேன். அதன்பிறகு என்னைப் போன்றவர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பிஎஃப், பணிக்கொடை போன்றவைக் கிடைக்காது என்பதை உணர்ந்துகொண்டு, அதற்காக ஒரு தொகையை முதலீடு செய்ய ஆரம்பித்தேன். இன்றைய நிலையில் தொழிலும் சிறந்து விளங்கு வதால் சொல்லிக்கொள்ளும்படியாக வருமானமும் கிடைக்கிறது. முதலீட்டை செய்து வருவதால், எதிர்காலத் தேவைகள் குறித்து கவலையும் இல்லை” என்றார் சந்தோஷமாக.

2அவசரத்தில் கைகொடுக்கும் அவசரகால நிதி!

பொருளாதார ரீதியாக ஒரு குடும்பத்துக்கு எது முக்கியமோ இல்லையோ, அவசரகால நிதியானது அவசியம் தேவை. அதுகுறித்து விளக்கமாக எடுத்துச் சொன்னார் நிதி ஆலோசகர் எஸ்.பாரதிதாசன். “ஒருவரின் சம்பாத்தியத்தை வைத்து ஒரு குடும்பமே இயங்கும்  சூழ்நிலையில், ஏதோவொரு காரணத்துக்காக திடீரென்று அவரின் வேலை பறிபோனாலோ அல்லது அவராகவே விரும்பி வேலையை விட்டாலோ, அடுத்த வேலை கிடைக்கும் வரை மொத்தக் குடும்பமும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படும். அந்த நபர் அவசரகால நிதிச் சேமிப்பை வங்கி சேமிப்புக் கணக்கில் வைத்திருந்தால், அதுபோன்ற சமயத்தில் அந்தத் தொகை ஆபத்பாந்தவனாக விளங்கும்.
பொதுவாக, ஒரு குடும்பத்தின் 3 - 6 மாதத்துக்குத் தேவையான செலவுத் தொகையை அவசரகால நிதியாகச் சேமித்து வைத்திருப்பதே நியதியாகும். இந்தத் தொகையை ரொக்கமாக கையில் வைக்காமல் லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்து வைக்கும்போது ஏறக்குறைய 8% தினசரி கூட்டு வட்டி விகிதத்தில் வளர்ந்துகொண்டு இருக்கும். அதனால், இந்த அவசரகால நிதிக்கு அனைத்துக் குடும்பங்களும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்றார்.



‘‘எப்போதும் இருக்கும் அவசரகால நிதி!’’

தொழிலில் ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காகவும், குடும்பத்தின் அவசரகாலத் தேவைக்காகவும் பயன்படுத்திக் கொள்ள எனது வங்கி சேமிப்புக் கணக்கில் போதுமான அளவு பணத்தை அவசரகால நிதியாகச் சேமித்து வைத்திருக்கிறேன் என்கிறார் செய்யாறைச் சேர்ந்த மணி.

“நான் சொந்தமாகத் தொழில் செய்து வருகிறேன். நான் செய்துவரும் தொழில் மூலமாகப் போட்ட முதலீட்டை எடுக்க முடியுமே தவிர, எப்போதும் லாபம் இருந்துகொண்டிருக்கும் என்று சொல்ல முடியாது. அதிக லாபம் கிடைக்கும்போது, அதிலிருந்து ஒரு பகுதியை எடுத்து அவசரகால நிதியாகச் சேமித்து வந்தேன். தற்போது பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்கும் அளவுக்கு அதில் பணம் சேர்ந்திருக் கிறது. அதனால் தொழிலின் எதிர்காலம் குறித்த கவலை இல்லாமலும், பயமில்லாமலும் வாழ்கிறேன்” என்றார், நம்பிக்கையாக.

3.சரியான கடனே சங்கடங்களைத் தவிர்க்கும்!

கடன் நல்லதுதான், ஆனால் எல்லாக் கடன் களையும் நல்லது என்று சொல்ல முடியாது. ஆனால், இன்றைய நவீன உலகில் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ள, அனைத்துக் கடன் வசதி களும் உள்ளன. இது இன்றைய மனிதர்களை கடன் வாங்க பெரிதும் தூண்டுகின்றன. எந்தக் கடன் வாங்கலாம் என்பது குறித்து சொல்கிறார் நிதி ஆலோசகர் ராஜசேகரன்.



“ஆசையைக் கட்டுப்படுத்தாமல் கடன்களை அதிகரிக்கும்போது கடன் வழங்கியவர்கள் லாபமடைவதுடன், நமது முன்னேற்றம் தடைபடும். பொதுவாக, நமது முன்னோர்கள் சம்பளத்தைச் சேமிப்பாகத்தான் பார்த்தனர். ஆனால், இன்றைய மனிதர்கள் கடனுக்கான இஎம்ஐ கட்டுவதற்காகவே சம்பாதிக்கிறார்கள். தேவையறிந்து கடன் பெறும்போது கடன் நல்லதுதான். ஆனால், அதிலும் கிரெடிட் கார்டு கடன், தனிநபர் கடன், கந்துவட்டி கடன் என்கிற மாதிரியான கெட்ட கடன்களைத் தவிர்த்துவிடுவதே நலம். இது ஆபத்துக்கே வழிவகுக்கும். கல்விக் கடன், வீட்டுக் கடன் என்கிற கடன்கள் அந்தந்த தேவைக்காக வாங்கிப் பயன்படும்போது வீண் சங்கடங்களைத் தவிர்க்கலாம்” என்றார்.

‘‘ஆதாயமிருந்தால் கடன் பெறுவேன்!’’

புதுச்சேரியைச் சேர்ந்த மதிவாணன், கடன் பெறுவதில் சரியான முறையைக் கையாண்டு வருகிறார், அவரிடம் பேசினோம். “பொதுவாக எல்லோரும் ஏதாவதொரு சமயத்தில் கடனை வாங்கித்தான் ஆகவேண்டும். அப்படியிருக்க, நான் ஒரு வியாபாரி, எனக்கும் கடனுக்கும் மிகுந்த தொடர்பிருக்கிறது. அநாவசிய செலவுகளுக்காக நான் ஒருபோதும் கடன் வாங்கியதில்லை. மாறாக, தொழில் வளர்ச்சிக்காக வங்கியில் தொழில் கடனை வாங்கியிருக்கிறேன்.

என் நண்பர்களில்  சிலர், அவர்களின் நண்பர்களிடமெல்லாம் கைநீட்டி கடனை வாங்கிக் கஷ்டப்படுகிறார்கள். ஆனால், எனக்கு அந்தப் பழக்கமும் கிடையாது. நாம் வாங்கும் கடன் நமக்கு ஆதாயத்தைத் தரவேண்டுமே தவிர, முன்னேற்றத்தைத் தடுப்பதாக இருக்கக்கூடாது. நான் கிரெடிட் கார்டு வைத்திருந்தேன். அந்தச் சமயங்களில் வகைதொகை இல்லாமல் செலவு செய்ததால், என் மனைவி சுதாரித்துக்கொண்டு அந்தக் கார்டை உடைத்து கிரெடிட் கார்டு கொடுத்த வங்கியிடம் ஒப்படைத்துவிட்டார்” என்றார் மிகச் சரியான உதாரணத்துடன்.

4.சேமிக்க மட்டுமில்லை, செலவுகளுக்கும் திட்டமிடுங்கள்!

‘‘வருமானம் பெருக வேண்டுமெனில் செலவு களும் அதிகரிக்க வேண்டும். ஆனால் அந்தச் செலவானது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது அவசியம்” என்கிறார், நிதி ஆலோசகர் இஜாஸ் ஹுசைன். இவரிடம் திட்டமிட்டுச் செலவு செய்வதிலுள்ள சாதகமான விஷயங்களைப் பற்றிப் பேசினோம். “செலவுகள் அவசியமானது தான். ஆனால், அந்தச் செலவுகள் அவசியம்தானா அல்லது அநாவசியமா என்பதை ஆராய வேண்டும். அதனால் சேமிப்பதற்காகத் திட்டமிடுவதுபோல, செலவுகளுக்காகவும் திட்டமிட வேண்டியது அவசியமாகிறது. சம்பள நாளன்று ஒவ்வொருவரும் மனநிலையை இப்படி மாற்றிக் கொள்ளுங்கள். ‘இன்று என் 100 சதவிகித வருமானத்தில், 20 சதவிகிதம் என் செலவுக்குச் சொந்தமானது கிடையாது. அது சேமிப்புக்குச் சொந்தமானது. மீதி இருக்கும் 80 சதவிகிதத் தொகையை வைத்துதான் வரும் மாதத்துக்கான செலவுகளை மேற்கொள்ள வேண்டும்.' இந்த மனநிலையானது ஒவ்வொரு மாதத்தின் சம்பள நாளன்றும் ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் செலவுக்கான திட்டமிடலுடன், சேமிப்புக்கான தொகையும் ஒதுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், இன்றைய நிலையில் ஒரு பொருளை வாங்க ஆகும் செலவு, இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து அதே பொருளை வாங்கும்போது அதிகமான தொகை கொடுத்து வாங்க வேண்டியதாயிருக்கும். அதனால் அப்போது செய்யும் செலவுக்காக இப்போதிருந்தே திட்டமிட்டு சேமிக்க வேண்டியது அவசியம்” என்றார்.



‘‘முதல் செலவு சேமிப்புதான்!’’

செலவுக்காகத் திட்டமிடுவது குறித்து பெரம்பூரில் வசிக்கும் சுப்ரமணியனிடம் பேசினோம். ‘‘என் முதல் செலவே சேமிப்புதான். தற்போது எனக்கு வயது 60 ஆகிறது. என் இளம் வயது முதல் இன்று வரை வரவுக்கு ஏற்றபடியே செலவுகளைச் செய்துவருகிறேன். செலவு செய்வதற்குமுன் அந்தச் செலவு அவசியமானதா, அநாவசியமானதா என்று ஆராய்வதால், பணம் மிச்சமாகிறது. அதேபோல, ஆசையினால் தூண்டப்பட்டுக் கடன் வாங்கிச் செலவு செய்யும் பழக்கமும் எனக்குக் கிடையாது” என்றார் தெளிவாக.

5.இன்றியமையாதது இன்ஷூரன்ஸ்!

இன்றைய நிலையில் இன்ஷூரன்ஸின் முக்கியத்துவத்தை சரியாகப் புரிந்துகொண்டு, பெரும்பாலானவர்கள் பாலிசி எடுத்து வருகிறார்கள். நிதித் திட்டமிடலில் இன்ஷூரன்ஸின் முக்கியத்துவம் குறித்து நிதி ஆலோசகர் அபுபக்கரிடம் பேசினோம். “பைக் ஓட்டும்போது ஹெல்மெட் ஒருவருக்குப் பாதுகாப்பாக இருப்பது போல, வாழ்க்கை என்னும் பயணத்தில் பயணிக்கும் அனைவருக்கும் இன்ன்ஷூரன்ஸ் பாதுகாப்பாக இருக்கும். அதனால் அனைவருக்கும் இன்ஷூரன்ஸ் இன்றியமையாததாகிறது. உதாரணத்துக்கு, என் வாடிக்கையாளர் முருகன், தனது வருமானத்தின் அடிப்படையில் 15 மடங்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்து வைத்திருந்தார். திரென்று அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட, டேர்ம் இன்ஷூரன்ஸ் மூலம் கிடைத்த தொகை அவரின் குடும்பத்தாருக்கு பயன் தருவதாய் அமைந்தது. அதேபோல, இன்னொரு வாடிக்கையாளர் ரகு, தனது குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்கும் சேர்த்து ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுத்துவைக்க, அவரின் மனைவிக்கு ஏற்பட்ட திடீர் மருத்துவச் செலவை சமாளிக்க முடிந்தது. ஆக, யாருக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்திருப்பது இன்றிய மையாதது” என்றார்.



‘‘எனக்குப் பிறகு என் இன்ஷூரன்ஸ்!’’

“இன்ஷூரன்ஸ் என்பதை என் நண்பர்களில் பெரும்பாலானவர்களும் முதலீடாகவே நினைத்து வந்தார்கள். அவர்களிடம் இன்ஷூரன்ஸ் முதலீடு கிடையாது, பாதுகாப்புக்குத்தான் என்பதை எடுத்துச் சொல்லி புரியவைத்திருக்கிறேன். ஆனால், நான் இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்திருப்பதற்கு மிக முக்கியக் காரணமே, எனக்குப் பிறகு நான் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் மூலம் கிடைக்கும் தொகை என் குடும்பத்துக்குப்  பயன்படும் என்பதுதான். இன்றைய நிலையில் எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் (மருத்துவக் காப்பீடு) போதுமான அளவுக்கு இன்ஷூரன்ஸ் இருப்பதால், எதிர்காலம் குறித்த பயம் இல்லாமல் இருக்கிறேன்” என்றார், மதுரையைச் சேர்ந்த கே.ஏ.ஆனந்த்.

6.வருமானம் பெருக பிரித்து முதலீடு செய்யுங்கள்!

ஒருவருடைய முதலீடா னது ஒரே திட்டத்தில் இருந்தால் ரிஸ்க் அதிகம் என்பதோடு மட்டுமல்லாமல், வளர்ச்சியும் பெரிய அளவில் இருக்காது. அதனால்தான் நாம் செய்யும் முதலீட்டைப் பிரித்து மேற்கொள்ளும்படி பரிந்துரைப்பார்கள். இதுபற்றி நிதி ஆலோசகர் பத்மநாபன், “பொதுவாக அசெட் அலோகேஷனுக்காக மூன்று வகையான திட்டங்களை எடுத்துக்கொள்வார்கள். ஈக்விட்டி, கடன் சார்ந்த திட்டம் மற்றும் தங்கம். இதற்கு மிக முக்கியக் காரணம், இந்த மூன்றிலும் சிறிது சிறிதாகச் சேமிக்கலாம், தேவையானபோது உடனடியாகப் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். இது எவ்வளவு சதவிகிதம் என்பது ஒருவருடைய முதலீட்டு இலக்கு, ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் எவ்வளவு காலம் என்பதைப் பொறுத்தது. ஒரு முதலீட்டை ஆரம்பிக்கும்போது கடந்த காலத்தில் எவ்வாறு செயல்பட்டுள்ளது என்று பார்ப்பதோடு, அதுவரும் காலங்களில் எவ்வாறு செயல்படும் என்பதைப் பார்ப்பது மிகவும் அவசியமானது. அசெட் அலோகேஷன் என்பது திருமணத்துக்கு ஜாதகம் பார்ப்பது போல. திருமணத்தின்போது இருவருடைய ஜாதகமும் சமன் செய்யப்படும். அதாவது, ஒருவருக்குக் கஷ்டம் வரும்போது, அடுத்தவருக்குச் சுகம் இருக்கும். இல்லாவிட்டால் இரண்டும் ஒன்றாக வந்தால் சமாளிப்பது கடினம். பிரித்து முதலீடு செய்திருந்தால், ஒன்றில் சரிவு ஏற்பட்டா லும், மற்றொன்றில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு சமன் செய்துகொள்ள முடியும்” என்றார்.



‘‘என் முதலீடு அனைத்திலும் இருக்கும்!’’

பிரித்து முதலீடு செய்வது குறித்து தற்போது மஸ்கட்டில் வசித்துவரும் சின்னகிருஷ்ணனிடம் பேசினோம், “நான் அதிகமாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்திருந்தாலும், தங்கம், பங்குச் சந்தை போன்ற முதலீடுகளையும் மேற்கொண்டிருக்கிறேன். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில்கூட ஈக்விட்டி, டெப்ட், பேலன்ஸ்டு என பல வகைகள் இருப்பதால் நிதி ஆலோசகரின் ஆலோசனையின்படி தேவைக்குத் தக்கபடி பல்வேறு வகைகளில் பிரித்து முதலீடு செய்திருக் கிறேன். இதனால் பெருமளவு நஷ்டம் தவிர்க்கப் படுகிறது” என்றார்.

7.முதலீட்டுக்குமுன் உணர்ச்சிவசப்பட வேண்டாம்!

பங்குச் சந்தை முதலீடாகட்டும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடாகட்டும் உணர்ச்சிவசப்பட்டால் உண்டாகும் விளைவு பற்றி நிதி ஆலோசகர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “பொதுவாக நாம் உணர்ச்சிவசப்பட்டு இருக்கும்போது முக்கியமான முடிவுகள் எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும். உணர்ச்சிவசப்படும் நிலையில் (Emotional State) நமது மனது, சிந்தனை, செயல்கள் பேலன்ஸ்டாக இருப்பதில்லை. அதனால் இத்தகைய சூழலில் எடுக்கப்படும் முடிவுகள், முழுமையாகச் சாதக, பாதங்களை ஆராயாமல், அவசரகதியால் எடுக்கப்படலாம்.

முதலீடுகளிலும், நாம் பல நேரங்களில் முடிவுகளை உணர்ச்சிவசப்பட்டு எடுக்கிறோம். அத்தகைய முதலீடுகள் பெரும்பாலும் நமக்கு ஏற்றவைகளாக நம்முடைய எதிர்காலத் தேவைகளுக்குப் பொருத்தமானதாக இருப்ப தில்லை. நம்மை அதிகமாக உணர்ச்சிவசப்பட வைத்து, முடியாது என்று சொல்ல இயலாத நிலைக்குக் கொண்டு செல்பவை நம் சுற்றமும், உறவும் நம்மிடம் அளிக்கும் முதலீட்டு வாய்ப்புகள் தான். நம்முடைய பெரும்பாலான முதலீட்டுத் தவறுகள், இங்குதான் நிகழ்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் நாம் உடனடியாக, ஆன் தி ஸ்பாட் முடிவுகளை எடுக்காமல், சிறிது அவகாசம் எடுத்துக்கொள்வோமேயானால் நம்மால் பல கோணங்களில் யோசித்து ஒரு சரியான முடிவை எடுக்க முடியும். மேலும், சரியான உரிமம் வழங்கப்படாத உள்ளூர் நிதித் திட்டங்கள், உள்ளூர் நபர்களின் முதலீட்டு வாய்ப்புகள் நம் உணர்ச்சியைத் தூண்டும். இத்தகைய முதலீடு களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டாம்’’ என்றார்.



உணர்சிவசப்பட்டால் நஷ்டமே!

“உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முதலீட்டு முடிவுகளால் பெரும்பாலும் நஷ்டமே வந்து சேரும். அதனால் நான் முதலீட்டு முடிவுகளை மேற்கொள்ளும்போது, உணர்ச்சிவயப்பட்டு முதலீடுகளைத் தேர்வுசெய்ய மாட்டேன். நண்பர்கள், உறவினர்கள் முன்வைக்கும் முதலீட்டு திட்டங்களும், கவர்ச்சிகரமான விளம்பரங்களுமே நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கும். அதனால் முதலில் தவிர்ப்பது நண்பர்கள், உறவினர்கள் சொல்லும் முதலீடுகளைத்தான்” என்றார் வடபழனியைச் சேர்ந்த சுரேஷ்.

8.முதலீட்டுக்குமுன் ஆராய்தல் அவசியம்!

எந்தவொரு நெறிமுறைப் படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டமும், தவறானதல்ல. ஆனால், அந்தத் திட்டம் நம்முடைய ரிஸ்க் மற்றும் தேவைக்கு ஏற்றதா என்பதை ஆராய்வது அவசியம். முதலீட்டுக்குமுன் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்கிற விஷயம் குறித்து நிதி ஆலோசகர் சேஷய்யாவிடம் பேசினோம்.

“ஒவ்வொரு முறையும் முதலீடு செய்யும்போது சிறிது அவகாசம் எடுத்து சாதக, பாதகங்களை ஆராய்ந்து முதலீடு செய்தல் வேண்டும். அப்படிச் செய்யும்போது அந்த முதலீட்டுத் திட்டத்துக்கான அறிவு முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், அந்த முதலீட்டுத் திட்டத்தின் மீதான ரிஸ்க் எவ்வளவு என்பதையும் உணர்ந்துகொள்ள முடியும்.

ஆனால், வெறுமனே மற்றவர்கள் சொல்லக் கேட்டு செய்யும்போது, முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டால் ஏமாற்றி விட்டார்களோ என்கிற எண்ணம் உருவாகி சங்கடத்தை உண்டாக்கும்.

இன்றைய நிலையைப் பொறுத்தவரை, சந்தோஷம் தரும் விஷயம் என்னவெனில், பெரும்பாலான மக்கள் அவர்களாகவே முன்வந்து முதலீட்டு விஷயங்களை ஆராய்ந்து அதன் பின்னரே முதலீட்டை மேற்கொள்கிறார்கள்” என்றார்.



‘‘என் முதலீட்டின் மீது அக்கறை உண்டு!’’

‘‘என் பணத்தின் மீதும், நான் செய்யும் முதலீட்டின் மீதும் எனக்கு இல்லாத அக்கறை வேறு யாருக்கு இருந்துவிட முடியும் என்பதே என் எண்ணம்.

அதனால் நிதி ஆலோசகர்கள் முதலீட்டுத் திட்டங்களைப் பரிந்துரை செய்தாலும் அதுகுறித்த தகவல்களை, அந்தத் திட்டத்தின் கடந்தகால வளர்ச்சியை இணையதளம் வாயிலாகத் தெரிந்துகொண்டு, ஒருமுறைக்கு இருமுறை ஆராய்ந்த பின்னரே முதலீட்டை ஆரம்பிப்பேன். அதேசமயம், முதலீட்டுத் திட்டங்கள் குறித்த டெக்னிக்கல் விஷயங்களை நிதி ஆலோசகர்களிடம் கேட்டு தெரிந்துகொள்வதிலும் கவனமாக இருப்பேன்.

இப்படி ஆராய்ந்து முதலீட்டை மேற்கொள்ளும் போது நஷ்டம் வந்தாலும் அதை இலகுவாக எடுத்துக்கொண்டு, முதலீட்டை பெருக்க என்ன செய்ய வேண்டும் என்கிற அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்குவேன்’’ என்றார் தன்னம்பிக்கையுடன் சென்னையைச் சேர்ந்த சாரதாமணி டெ.

9.முதலீட்டு முடிவுகளைத் தள்ளிப்போடாதீர்கள்!

ஆரம்பத்திலேயே முதலீட்டை ஆரம்பிக்கும் போது, தேவைக்கான இலக்கை எளிமையாக அடைந்துவிடலாம் என்பதை எடுத்துச் சொன்னார் நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் வி.நாயக்.

“பொதுவாகவே ஒரு செயலில் காலத்தைக் கடத்தாமல், சரியான நேரத்தில் தொடங்கும்போது விரைவாகச் செயல்படாவிட்டாலும், அந்தச் செயலானது எளிமையாக முடிந்துவிடும். ஆனால், காலம் கடந்து ஆரம்பிக்கும்போது விரைந்து செயல்படவேண்டியிருந்தும், அந்தச் செயலுக்கான திருப்திக்கு உத்தரவாதம் கிடையாது.

உதாரணமாக,  ஒருவர் தனது 25-வது வயதில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு எஸ்ஐபி முறையில் மாதம் ரூ.3,000 முதலீடு செய்வதாகக் கொள்வோம். 12% எதிர்பார்க்கக்கூடிய வருமானம் கிடைத்தால், 30 ஆண்டுகள் கழித்து ரூ.1.04 கோடி  அவருக்குக் கிடைக்கும். ஆனால், இன்னொரு நபர் பத்து ஆண்டுகள் கழித்து தனது 35-வது வயதில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.4,500 முதலீடு செய்வதாகக் கொண்டால், அதே எதிர்பார்க்கும் வருமானத்தில் முதலீடு முதிர்வின்போது கிடைக்கும் தொகை ரூ.44.51 லட்சமாகவே இருக்கும். ஆக, காலம் தாழ்த்தி முதலீட்டை மேற்கொண்டு, அதிகமான பணத்தை முதலீடு செய்தாலும், இலக்கின்போது கிடைக்கும் வருமானம் குறைவு. அதனால் முதலீட்டு முடிவை உடனே ஆரம்பிப்பது நல்லது’’ என்றார்.



‘‘முதல் சம்பளத்திலிருந்து முதலீடு செய்கிறேன்!’’

இளம் வயதிலிருந்து முதலீட்டை மேற்கொண்டு வரும் வி.பாலாஜியிடம் பேசினோம். “முதல் சம்பளம் வாங்கியதும் சேமிக்க வேண்டும் என நினைத்து, 17 ஆண்டுகளுக்குமுன் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை ஆரம்பித்தேன். அப்போது எனக்கு வயது 25. மாதம் ரூ.2,000-த்தை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்து வந்தேன். வருமானம் உயர உயர என் முதலீட்டையும் அதிகரித்து வந்தேன். தற்போது அந்த முதலீடானது 20% வருமானத்தை வழங்கி வருகிறது. இடையிடையே தேவைக் காரணமாக அந்த முதலீட்டில் இருந்து பணத்தை எடுத்தாலும், முதலீட்டை மட்டும் நிறுத்தவே இல்லை. தற்போது அந்த முதலீட்டில் மாதம் ரூ.5,000 வரை முதலீடு செய்துவருகிறேன். எனக்கு ஆறு வயதில் குழந்தை இருக்கிறாள். அவளின் எதிர்காலத் தேவைகளுக்காக மாதம் ரூ.2,000-த்தை தனியாக முதலீடு செய்து வருகிறேன். இப்போது முதலீடு செய்வதே என் ஹேபிட்டாக மாறி விட்டது” என்றார் தீர்க்கமாக.

10. போர்ட்ஃபோலியோ ரிவியூ அவசியம்!

மேலே சொன்ன எல்லா விஷயங்களையும் செய்தால் மட்டும் போதுமா எனில்,  அதற்கான பதில் இல்லை என்பதே. காரணம், அவை வளமான வாழ்க்கைக்கு அடிப்படை எனில், போர்ட்ஃபோலியோ ரிவியூ என்பது அந்த அடிப்படைக்கு ஆதாரமாக இருப்பது. போர்ட்ஃபோலியோ ரிவியூ பற்றி நிதி ஆலோசகரான ரமேஷ்பட்டிடம் கேட்டோம்.

“ஒருவர் செய்த முதலீட்டை 3 - 6 மாதம் அல்லது வருடத்துக்கு ஒருமுறையாவது போர்ட்ஃபோலியோ ரிவியூ செய்யவில்லை எனில், அந்த முதலீட்டைச் செய்ததற்கான  பலனை பெறமுடியாமல் போய்விடும். செய்திருக்கும் நிதித் திட்டத்தின்படி, சரியாகப் பயணப்படுகிறோமா என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். அப்போதுதான் நாம் செய்திருக்கும் முதலீடுகள் நமக்குத் தொடர்ச்சி யாக வருமானம் தருகிறதா என்பது தெரியும். ஒருவரின் முதலீட்டுக் காலம் ஐந்தாண்டுகளுக்குக் குறைவாக இருந்தால், 3-6 மாதங்களுக்கு ஒருமுறை போர்ட்ஃபோலியோ ரிவியூ செய்து கொள்வது அவசியம். நீண்டகாலம் எனில்,  ஆண்டுக்கு ஒருமுறை செய்யலாம்” என்றார்.

‘‘ரிவியூ செய்ததால்தான் வருமானம் உயர்ந்திருக்கிறது!’’

“நான் செய்திருக்கும் முதலீடு அதிகம். தவிர, எனக்கிருக்கும் குறுகியகாலத் தேவைகள் அதிகம். எனவே, நான் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை போர்ட்ஃபோலியோ ரிவியூ மேற்கொள்வேன். அப்போதுதான் என் முதலீடு சீராகச் செயல்படுகிறதா என்பது தெரியும். மேலும், எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் தேவையான இன்ஷூரன்ஸ் இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொண்டு, எடுக்க முடிகிறது. நான் மேற்கொள்ளும் போர்ட் ஃபோலியோ ரிவியூவுக்கு சிறு பணம்  செலவானாலும், முதலீட்டின் மீதான வருமானம் உயர்ந்திருக்கிறது” என்றார், திருவண்ணாமலையைச் சேர்ந்த சிதம்பரம்.

நிதித் திட்டமிடலில் அடிப்படையாக இருக்கும் பத்து முக்கிய அம்சங்கள் பற்றி சொல்லிவிட்டோம். இந்த அடிப்படை அம்சங்களை இனி நீங்களும் பின்பற்றினால், உங்கள் வாழ்க்கையும் நிச்சயம் வளமாகும்.

ஜிஎஸ்டி வரி: - மக்களுக்கு என்ன பயன்?

ஜிஎஸ்டி வரி: - மக்களுக்கு என்ன பயன்?


ஜிஎஸ்டி என்றால்..?



நம் நாட்டில் ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்பனைக்குக் கொண்டுவர பல்வேறு வரிகளை மத்திய, மாநில அரசுகளுக்குச் செலுத்த வேண்டியுள்ளது. அதாவது விற்பனை வரி, சேவை வரி, உற்பத்தி வரி, நுழைவு வரி, கலால் வரி போன்ற பல்வேறு வரிகள் உள்ளன. இதைத் தவிர்த்து, கல்வித் தீர்வை (Cess), சர்சார்ஜ் என்பது இருக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாதிரியான வரி விதிப்பு இருக்கும். இதையெல்லாம் தவிர்த்து அனைத்துக்கும் சேர்த்து ஒரு வரி என்பதுதான் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி (Goods and Services Tax). இந்த வரி விதிப்பு முறையை நடைமுறைக்குக் கொண்டுவருவதால், பல்வேறு நன்மைகள் ஏற்படும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.


ஜிஎஸ்டி அமலுக்கு வரும்போது எந்த வகையில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பது குறித்து வரி ஆலோசகரான வைத்தீஸ்வரனிடம் கேட்டோம். விரிவாக எடுத்துச் சொன்னார் அவர்.

ஜிஎஸ்டி ஏன் தேவை?

‘‘மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பல்வேறு வரிகளைச் செலுத்தும் தொகையின் அளவானது உற்பத்தி செலவைவிட அதிகமாக உள்ளது. இப்படி அதிகமாகச் செலுத்தும் வரித் தொகை உற்பத்தி பொருளின் விலையில் சேர்க்கப்படுகிறது. இதனால் அதிகமாகப் பாதிக்கப்படுவது நுகர்வோர்தான். இதுமட்டும் இல்லாமல் வரிக்கு வரி செலுத்த வேண்டிய சூழ்நிலையும் உருவாகிறது.




உதாரணமாக, காரின் உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு முக்கிய மூலப்பொருள் இரும்பு ஆகும். இதை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து வாங்கும்போது சிஎஸ்டி (Central Sales Tax) வரி செலுத்த வேண்டும். உற்பத்தி செய்த பொருளை மீண்டும் வேறு மாநிலத்துக்கு அனுப்பும் போதும் சிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருக்கும். அந்த உதிரிப் பாகங்களை பயன்படுத்தி, கார் தயாரித்து அதை மீண்டும் தமிழகத்துக்கே அனுப்பும்போது மீண்டும் சிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். இந்த சிஎஸ்டி வரிக்கு கிரெடிட் பெற முடியாது. எனவே, இந்த வரித் தொகை முழுவதும் உற்பத்திப் பொருளின் விலையில் சேர்க்கப்படும். இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு ஜிஎஸ்டிதான். அனைவருக்கும் ஒரேவிதமான வரி விகிதம்தான் இருக்கும். ஜிஎஸ்டியில் 17 - 18% வரை வரி விதிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ச்சி எந்த வகையில் உதவும்?

தற்போது பலவிதமான வரிகள் இருப்பதால், ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக அரசு துறைகள் செயல்பட வேண்டி உள்ளது. இந்த துறைகளுக்கிடையே தகவல்கள் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் நிறுவனங் களும் பல்வேறு வரி விதிப்பு இருப்பதால், பல சிக்கல்களைச் சந்திக்கிறது.

ஜிஎஸ்டி அமல் படுத்தும்போது கறுப்புப் பணம் குறையும். முறையான வரி செலுத் தாமல் சிறிய, நடுத்தர அளவில் தொழில் செய் பவர்கள் முறையாக வரி செலுத்தி தொழில் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாட்டின் வருமானம் அதிகரிக்கும். அதுவும் தவிர, முறையாக வரி செலுத்தி தொழில் செய்யும்போது அவர்களின் வருமானம் எவ்வளவு என்பது தெரிந்துவிடும். இதனால் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். வரித் தொகை அதிகரிக்கும்போது நாட்டின் வளர்ச்சிப் பணிகளை வேகமாக செய்ய முடியும். மதிப்பு கூட்டு வரி  (VAT) வந்த பிறகு நிறைய  நிறுவனங்கள் பல மாநிலங்களில் கிடங்குகளை திறக்கும் சூழ்நிலை உருவானது. ஜிஎஸ்டி வரும்போது இந்தக் கிடங்குகளின் தேவை இருக்காது. தொழிலுக்குத் தேவையான கிடங்குகள் மட்டுமே இருக்கும்.  இதனாலும் நிறுவனங்களின் செலவு வெகுவாகக் குறையும்.

யாருக்குப் பயன்?

ஒற்றை வரி விதிப்பு முறையின் காரணமாக உற்பத்தி செய்யும் பொருளின் விலைகள் வெகுவாகக் குறையும். ஆனால், அதே நேரத்தில் சேவைகளாக பெறும் வசதிகளுக்கான செலவு அதிகரிக்கும். அதாவது, செல்போன், பொழுதுபோக்கு, இன்டர்நெட், இன்ஷூரன்ஸ் பிரீமியம், ஹோட்டல், ஆலோசனை, போக்குவரத்து, ஏஎம்சி, கட்டுமானம், அழகு நிலையம், தீம் பார்க், கல்விக் கட்டணம் போன்ற சேவைகளுக்கான வரி விதிப்பு அதிகரிக்கும். தற்போது இதற்கு 14.5% செலுத்துகிறோம். ஜிஎஸ்டியில் 17 - 18% வரி இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதனால் தனிநபரின் செலவு அதிகரிக்கும்.

பென்ஷன் வாங்குபவர்கள், ஓய்வு பெற்றவர்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் அதிகம் பாதிக்கப் படுவார்கள். ஏனெனில் இவர்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்பில்லை. இவர்களின் தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கு அதிகமான சேவைகள் தேவைப்படும். அதாவது, ஹோட்டல் சாப்பாடு, இன்ஷூரன்ஸ் பிரீமியம், செல்போன் பில், போக்குவரத்துக்கு வாடகை கார்களை பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கும். இது அனைத்துமே விலை உயர வாய்ப்புள்ளது. இதனால் வருமானம் ஈட்ட முடியாத நிலையில் இருக்கும் முதியோர்களின் செலவும் அதிகரிக்கும்.

உடனடியாக விலை குறையாது!

சிஜிஎஸ்டி (Central GST), எஸ்ஜிஎஸ்டி (State GST), ஐஜிஎஸ்டி (Integrated GST) என மூன்று வகைகளில் ஜிஎஸ்டி வரி விதிப்பு பிரிக்கப்படும். இந்த வரி விதிப்பு முறையினால் உடனடியாக பொருள்களின் விலை குறைவதற்கான வாய்ப்பு குறைவு. ஜிஎஸ்டி அமல்படுத்தியபிறகு ஒரு வருடத்துக்குப் பணவீக்க விகிதம் அதிகரிக்கவே செய்யும். அதன்பிறகு கொஞ்சமாகப் பொருட்களின் விலை குறைந்து, பணவீக்க விகிதமும் குறைந்துவிடும்.



மாநில அரசுகளின் வருமானம்?

அரசின் முக்கிய வருமானம் வரி விதிப்பின் மூலமாகத்தான் கிடைக்கிறது. மாநில அரசு வரியை நம்பிதான் இருக்கிறது. தற்போது சேவை வரி 15%, விற்பனை வரி, வாட் வரியின் மூலமாக மாநில அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. ஜிஎஸ்டி அமல்படுத்தும்போது இந்த வரி வருமானம் குறைய வாய்ப்புள்ளது. அதாவது, ஜிஎஸ்டியில் 18% என வரி விதிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அதில் மத்திய அரசு 10%, மாநில அரசு 8% என வருமானத்தை பிரித்துக் கொள்கிறது என்று வைத்துக் கொள்வோம். தற்போது மாநில அரசுக்கு 14.5% - 15% வரை வருமானம் கிடைக்கிறது. இந்த வருமான இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வருமான இழப்பை சரிக்கட்டும் வகையில் குறிப்பிட்ட அளவு தொகையை வழங்கும். அதே சமயத்தில், முதன் முதலாக மாநிலங்களும் சேவைக்கான ஜிஎஸ்டி மூலமாக அதிக வருமானத்தை ஈட்ட வாய்ப்புள்ளது. ஜிஎஸ்டியின் பாதிப்பு அல்லது பயன் மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசப்படும். பொதுவாக, உற்பத்தி அதிகம் இருக்கும் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வருவாய் குறைவாக இருக்கும். அதிக நுகர்வு இருக்கும் மாநிலங்களில் ஜிஎஸ்டி மூலமாக அதிக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த ஜிஎஸ்டியில் மதுபானங்கள், புகையிலை ஆகிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி இருக்காது. ஆனால், இந்தப் பொருட்களுக்கு வேறு  வரி விதிப்பு அதிகமாக இருக்கும்.  பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக் குள் இல்லை. இவற்றுக்கும் வேறு வகையான வரி விதிப்பு இருக்கும். தற்போதைய நிலையில் எந்தப் பொருட்களுக்கு எல்லாம் வரி இல்லையோ, அவற்றில் சிலவற்றுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.   காய்கறிகள், பால், தயிர், பழங்கள் போன்றவற்றுக்கும் இந்த வரி விதிப்பும் இருக்காது. பெட்ரோல், டீசலுக்கான வரி விதிப்பு மாநில அரசுகளிடம்தான் இருக்கும்.’’ என்றார்.



ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தபிறகு பொருட்களின் உற்பத்தி செலவு குறையும். இதனால் நம்மால் பலவிதமான பொருட்களை வாங்கும் நிலை உருவாகும். நிறுவனங்களின் லாபம் கூடினால் அது முதலீடாக மாறும். இதனால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படக் கூடிய நிலை உருவாகும்.

பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்!

பணவீக்கம் உண்டாக்கும் 10 பாதிப்புகள்!


நீங்கள் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போது நாளைக்கு வண்டிக்கு பெட்ரோல் போட்டுக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தால், நள்ளிரவு முதல் விலையேற்றம் அமல்படுத்தப்படுகிறது என்ற அறிவிப்பு உங்களைச் சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்தும். இதற்குக் காரணம், பணவீக்கம்தான். சாதாரணமாகச் சொல்வது என்றால் விலைவாசி உயர்வு. இது தனிநபர், குடும்பம், வர்த்தகம் மற்றும் நாடு என்று ஒவ்வொரு நிலையிலும் வேகமாக அதிகரித்து வருகிறது. ராக்கெட் வேகத்தில் உயரும் பணவீக்கம் நம் அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பனிடம் நாம் கேட்க, 10 பாதிப்புகளை எடுத்துச் சொன்னார்.

1.உண்மையான வருவாய் விகிதம்!

பணவீக்கமும், வட்டி விகிதமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. பணவீக்கம் அதிகமாகவும், நாம் சேமிக்கும் பணத்தின் மீதான வட்டி விகிதம் குறைவாகவும் இருக்கும்போது அது நிச்சயம் நம் அன்றாட வாழ்வை பாதிக்கும்.

உதாரணமாக, நாம் 100 ரூபாய் சேமிக்கிறோம் எனில், தற்போதைய சூழலில் சராசரியாக 9% வட்டி கிடைக்கிறது. ஆண்டுக் கடைசியில் ரூ.109 உங்கள் கையில் இருக்கும் வட்டியும் முதலும் சேர்த்து; ஆனால், பணவீக்கம் சுமார் 10% என்ற அளவில் உள்ளதால் சேமிப்பின் மூலம் உங்களுக்குக் கிடைத்த ரூ.109-யைக்கொண்டு பணவீக்கத்தினால் 110 ரூபாய் விலையேறிய பொருளை வாங்க முடியாத சூழல் உருவாகும்.


அதற்காக அத்தியாவசியப் பொருட்களை வாங்காமல் இருக்க முடியுமா? அந்த ஒரு ரூபாய் பற்றாக்குறையை சமாளிக்க நாம் என்ன செய்வோம்? கையிருப்பில் இருந்து செலவு செய்வோம் அல்லவா? இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நம் சேமிப்பு கரைந்துவிடுவதால்தான் நடுத்தட்டு மக்கள் என்றுமே நடுத்தட்டு மக்களாகவே இருக்கின்றனர். எனவே, வட்டி விகிதம் 9 - 12% என்பதைவிட, பணவீக்கத்தைவிட  உங்கள் சேமிப்புக்கான வருமானம் அதிகமா, குறைவா என்பதுதான் மிக முக்கியம். அதுதான் உண்மையான வருவாய்.

2.வாங்கும் திறன் குறையும்!

பணவீக்கம் அதிகரிப்பதால் அனைத்து தரப்பினரும் சந்திக்கும் முக்கியமான பாதிப்புகளில் ஒன்று, பொருள் வாங்கும் திறன் கணிசமான அளவில் குறைவதே. அவர்கள் வருவாயை வைத்து தற்போதைய விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாததையே இது காட்டுகிறது. இதற்கு சரியான எடுத்துக்காட்டு, முன்பெல்லாம் வாரம் ஒருமுறை பொருட்களை வாங்குபவர்கள், தற்போது மாதம் இருமுறை என்று மொத்தமாக வாங்கி வைத்துவிடுவதே. இது தனித்தனியாக வாங்கும் அளவைவிடக் குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

3. பொருட்களின் பதுக்கல் அதிகரிக்கும்!

பணவீக்கம் அதிகரிப்பதால் பொருட்களின் கையிருப்பை அதிகரித்துக்கொள்ளவே எல்லாரும் விரும்புவார்கள். ஒருவேளை, அதன் விலை கூடினால் பின்னர் அதிக விலைக்கு விற்றோ அல்லது நமது பயன்பாட்டை லாபகரமாக்கிக் கொள்ளவோ நினைப்பார்கள்.

ஆனால், குறுகிய காலப் பொருட்களான காய்கறிகள் போன்றவற்றைக் குறிப்பிட்ட காலத்துக்குமேல் வாங்கி வைத்துக்கொள்ள முடியாது. இரும்பு போன்ற கெட்டுப் போகாத பொருட்களை நீண்ட கால தேவைக்கு வாங்கமுடியும். உண்மையான தேவைக்கு அதிகமாக, இதுபோன்று தேக்கி / பதுக்கி வைப்பது பொருளின் தேவையை மேலும் அதிகரிக்க செய்து, அதன் விலையை அதிவேகமாக ஏற்றும்.

4.கடன் தவணை அதிகரிக்கும்!

வீட்டுக் கடன் அல்லது வாகனக் கடன் போன்ற ஏதேனும் ஒரு கடன் வாங்கி இருப்ப வராக இருந்தால், பணவீக்கத்தால் வட்டி விகிதம் உயரும். இதனால் தவணைக் காலமோ அல்லது மாதாந்திர தவணைக் கட்டணமோ அதிகரிக்கும்.

உதாரணத்துக்கு, நீங்கள் 15 வருடத் தவணையில் மாதம் ரூ.15,000  கட்டும்படி கடன் வாங்கி இருந்தால், அது உங்கள் தவணைத் தொகையைவிட அதிகமாகவோ, அல்லது  தவணைக் காலத்தைவிட  அதிகமாகவோ வாய்ப்புள்ளது.

5. தரம் குறையும்!

பொருட்களின் விலை உயரும் போது பயன்பாட்டாளர்கள் தங்கள் வருமானத்துக்கு எதிராக விலை உயர்வதால், முதல்தரத்தில் உள்ள பொருட்களைத் தவிர்த்து, இரண்டாம்தர பொருட்களை நோக்கி செல்ல வாய்ப்புள்ளது. பணவீக்கத்தைச் சமாளிக்க முடியாத நிறுவனங்களுமே உற்பத்தியில் தரத்தைக் குறைக்கவும்  வாய்ப்புள்ளது.

6. கம்பெனிகளின்   செலவு கூடும்!

பணவீக்கம் அதிகரிப்பு, நுகர்வோரைத் தாண்டி தொழில் செய்பவர்களையும் பாதிக்கும். ஏனெனில், அவர்கள் வாங்கும் மூலப்பொருட்களின் செலவு தொடங்கி பணியாளர்களுக்கு வழங்கும் சம்பளம் வரை அனைத்துக்குமே செலவு அதிகமாவதால் அவர்கள் உற்பத்தி செய்து விற்கும் பொருளுக்கும் விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்படும். நுகர்வோர் மற்றும் நிறுவனங்கள் ஆகிய இரண்டுமே இதனால் பாதிப்படையும். விலையேற்றத்துக்கு முன் மூலப்பொருட்களை வாங்கி வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு மட்டும் இது லாபகரமாக அமையலாம்.

7. தங்கம் விலை செயற்கையாக அதிகரிக்கும்!

பணவீக்கம் அதிகமாகும் போது விலையேறிவிடுமோ என்ற பயத்தில் மக்கள் தங்கத்தை வாங்கிக் குவிக்கத் தொடங்கிவிடுவார்கள். அப்போது தங்கம் தேவையைவிட அதிகமாக வாங்கப்படும். தங்கத்தின் விலை செயற்கையாக அதிகரிப்பதால், பலராலும் தங்கம் வாங்க முடியாத நிலை ஏற்படும்.

8. பொருட்களின் அளவு குறையும்!

நிறுவனங்கள் பணவீக்கத்தைச் சமாளிக்க எடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்று, அளவை குறைப்பது. அதாவது, 100 மில்லி உள்ள ஷாம்பு பாட்டிலை ஒரு நிறுவனம் 50 ரூபாய்க்கு விற்கிறது எனில், பணவீக்கத்தைச் சமாளிப்பதற்கு அந்தப் பொருளின் விலையை உயர்த்தாமல், அதே 50 ரூபாய்க்கு 80 மில்லி ஷாம்புவைத் தரும். நமக்கு ஒரே விலைதானே என்று தோன்றினாலும். மறைமுகமாக 100 மில்லியை நாம் 62.50 ரூபாய்க்கு வாங்குகிறோம்.

9. அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கப்படும்!

விலைவாசி உயர்வால் மாதம் 60 கிலோ அரிசி வாங்கியவர் 50 கிலோ வாங்கும் சூழல் உருவாகும். இதேபோல் பெட்ரோல், போன் போன்ற அத்தியாவசிய தேவையிலும் பாதிப்பு ஏற்படும்.

10. லைஃப்ஸ்டைல் பாதிப்படையும்!

பணவீக்கம் என்பது பொருட்களின் வாங்கும் திறனை மட்டும் பாதிக்கவில்லை. அது நம் வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கிறது. குறிப்பாக, பணவீக்க விகித அதிகரிப்பால் கல்வி மற்றும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்போது விலை குறைந்த பொருளை வாங்கும்  நிலைக்குத் தள்ளப்படுவோம். இதனால், நம் லைஃப்ஸ்டைல் பாதிப்படையும்.

உதாரணமாக, தனியார் பள்ளிக் கூடத்தில் பிள்ளையைப் படிக்க வைத்தவர்கள் இனி அரசு பள்ளிக் கூடத்தில் சேர்க்கும் சூழல் உருவாகும். பணவீக்கம் அதிகரிக்கும்போது இது மேலும் அதிகரித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஃபண்ட் முதலீடு: அதிக லாபம் பார்க்க வழி என்ன?

ஃபண்ட் முதலீடு: அதிக லாபம் பார்க்க வழி என்ன?


 வங்கி ஆர்.டி. போல தொடர்ந்து, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வருவது, எஸ்.ஐ.பி. அதாவது சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான். இது மூலமாக மாசம் குறைந்தபட்சம் நூறு ரூபாய் கூட முதலீடு செய்யலாம்.

தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் முதலீடு செய்றதால மார்க்கெட்டோட ஏற்ற, இறக்கத்தை சமன் செஞ்சு, சீரான லாபத்தை பெற முடியும். இதுதான் எஸ்.ஐ.பி-யோட ஸ்பெஷல்! மாதச் சம்பளக்காரங்களுக்கு ரொம்ப ஏற்ற முறை!

வரிச் சலுகைக்காகவே உள்ள இ.எல்.எஸ்.எஸ். திட்டத்துல எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செஞ்சா, அதுக்கு வருமான வரி பிரிவு 80- சி கீழ் ஒரு லட்ச ரூபாய் வரை வரிச் சலுகை உண்டு.

மார்க்கெட் சரிஞ்சிருக்கும்போது நல்ல ஃபண்டுகளின் என்.ஏ.வி. குறைவாக இருந்தால் வாங்கலாம். அதுமூலமா கூடுதல் யூனிட்டுகள் கிடைக்க வாய்ப்பிருக்கு. பிறகு சந்தை ஏறும் போது அதிக லாபம் கிடைக்கும்..

பணத்தை ஒரே ஃபண்டில் போட்டுக் குவிக்காமல் பலவிதமான ஃபண்டுகள்ல பிரிச்சு முதலீடு செய்யறதுதான் புத்திசாலித்தனம். காரணம் ரிஸ்க் குறையும்ங்கிறதுதான்.

ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது போட்ட பணம் என்னாச்சுனு எட்டிப் பார்த்துடறது உத்தமம். பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் போட்டிருந்தால், மார்க்கெட் ஏறும்போதும் இறங்கும்போதும் ஃபண்ட் மேல ஒரு கண் வச்சிருக்கணும். பணத்தைப் போட்டுட்டு ஒரு சில மாசங்களிலேயே திரும்ப எடுத்தா, வெளியேறும் கட்டணம் இருக்கும். அதனால ஒரு ஸ்கீம்ல இருந்து வெளியேறுகிறோம்னா அதுக்கு முன்னாடி இந்தக் கட்டணங்கள் எல்லாம் போக, லாபம் மிஞ்சுதானு பார்த்துட்டுதான் வெளியேறணும்.

மியூச்சுவல் முதலீட்டில் லாபத்தை டிவிடெண்டா பிரிச்சுக் கொடுப்பாங்க. இதுக்கு வரி கிடையாது. ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை ஒரு வருஷம் கழிச்சு எடுத்தால், அதுக்கும் வரி கிடையாது. ஆனால், அதுக்கு முன்னால் எடுத்தால் 15 சதவிகிதம் வரி உண்டு.

டைவர்ஸிஃபைடு மற்றும் பேலன்ஸ்க்கான வித்தியாசம்!

டைவர்ஸிஃபைடு ஃபண்டு மற்றும் பேலன்ஸ்டு ஃபண்டுகளுக்கான வித்தியாசங்கள் என்ன?


‘‘1. பேலன்ஸ்டு ஃபண்டுகளில் பங்கு மற்றும் கடன் ஆகிய இரண்டிலும் பிரித்து முதலீடு செய்யப்படும். டைவர்ஸிஃபைடு ஃபண்டுகளில் நிறுவனப் பங்குகளில் மட்டும்தான் முதலீடு செய்யப்படும்.

2. பேலன்ஸ்டு ஃபண்டுகளில் பங்குகள் சார்ந்த முதலீடு 65% - 90% வரை மாறுபடும். ஆனால், டைவர்ஸிஃபைடு ஃபண்டுகளில் பங்கு முதலீடு 95 சதவிகிதத்துக்கும் அதிகமாகத்தான் இருக்கும்.

3. பேலன்ஸ்டு ஃபண்டுகள் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்வதால், அதன் வருமானம் சற்று நிலையானதாக இருக்கும். ஆனால், டைவர்ஸிஃபைடு ஃபண்டுகளின் வருமானம் சந்தையின் ரிஸ்குக்கு உட்பட்டது. சந்தையின் வளர்ச்சிக்கு தகுந்தாற்போல வருமானம் அதிகரிக்கவும், குறையவும் வாய்ப்பிருக்கிறது.’’

மியூச்சுவல் ஃபண்ட் வகை : மிட் கேப் ஃபண்டுகள்:

மியூச்சுவல் ஃபண்ட் வகை : மிட் கேப் ஃபண்டுகள்:

ஒரு நிறுவனத்தோட மொத்தப் பங்குகளின் சந்தை மதிப்பு 1,500 கோடி முதல் 10,000 கோடி ரூபாய் வரை இருந்தால் அதுக்கு மிட் கேப் ஃபண்டுகள்னு பேர். பங்குச் சந்தையில ஏற்ற-இறக்கங்கள் அதிகமாக இருந்த காலத்தில் கூட, மிட் கேப் ஃபண்டுகள் நல்ல வருமானத்தைக் கொடுத்திருக்கு. அதனால இந்த ஃபண்டை நிறையப் பேர் விரும்புறாங்க.

இதுக்கு ரிஸ்க் குறைவா இருப்பதும் ஒரு காரணம். மிட் கேப் பட்டியல்ல இருக்கிற நிறுவனங்கள் எதிர்காலத்துல பெரிய நிறுவனங்-களா வளரக்கூடிய வாய்ப்பு இருக்-கிறதால, இந்த ஃபண்ட் மீதான வரு-மானமும் நீண்டகால அடிப்படையில அதிக-மாவே இருக்கும்.

யாருக்கு ஏற்றது?: ஓரளவுக்கு ரிஸ்க் எடுப்பவர்களுக்கு.

கணவன்- மனைவி ஜாயின்ட் இன்ஷூரன்ஸ்... என்ன லாபம்?

கணவன்- மனைவி ஜாயின்ட் இன்ஷூரன்ஸ்... என்ன லாபம்?

ஒவ்வொருவருடைய தேவைக்கு ஏற்றாற்போல  பலவகையான காப்பீட்டுத் திட்டங்கள் தற்போது சந்தையில் உள்ளன. அதில் ஒன்றுதான், கணவன் - மனைவிக்கான கூட்டுக் காப்பீட்டுத் திட்டம். அது என்ன கூட்டுக் காப்பீட்டுத் திட்டம்?

என்ன திட்டம்?

ஏற்கெனவே ஆயுள் காப்பீடு வைத்திருப்பவர் தனது பாலிசியில் இன்னொருவரைச் சேர்த்துக்கொள்வதுதான் கூட்டுக் காப்பீட்டுத் திட்டம். குறிப்பாக, பொருளாதார ரீதியாக பாலிசிதாரரை சார்ந்திருப்பவரை இந்த பாலிசியில் சேர்த்துக் கொள்ளலாம்.  திருமணத்துக்குப்  பிறகு மனைவியையோ அல்லது தொழில் கூட்டாளியையோகூட இந்த பாலிசியில் இணைத்துக் கொள்ள முடியும். தனிநபர் பாலிசியில் கிடைக்கும் அனைத்து பலன்களும் இந்த பாலிசியிலும் பெற முடியும்.

இந்த பாலிசியை ஒரே கவரேஜ்  அல்லது இரண்டு வெவ்வேறு கவரேஜ்  கொண்ட பாலிசியாகவோ எடுத்துக் கொள்ளலாம். ஒரே கவரேஜ் கொண்ட பாலிசியில் ஒருவர் இறக்க நேரிட்டாலே காப்பீட்டுத் தொகை கிடைத்துவிடும். இரண்டு கவரேஜ் கொண்ட பாலிசியில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவருக்கான தொகை வழங்கப்பட்டபின்பும், உயிருடன் இருப்பவரின் பாலிசி தொடரும்.

சிறப்பு அம்சங்கள்!

கூட்டு ஆயுள் காப்பீடு என்றாலும், இதிலுள்ள முக்கியமான வசதி சிங்கிள் பாலிசி போலவே நிர்வகிக்க முடியும். ஒரு நபருக்கு என்கிற போது சிங்கிள் பாலிசியாக வைத்துக்கொள்ளலாம். பாலிசியில் வேறொருவரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறபோது கூட்டு பாலிசியாக நிர்வகிக்க முடியும்.

மேலும், கணவன் - மனைவி இருவருமே சேர்ந்து சொத்துகள் வாங்குவது, அடமானம் வைப்பது போன்றவைகளைச் செய்வதால்,  காப்பீட்டுத் தேவைகளைத் திறம்பட நிர்வகிக்க கூட்டு பாலிசி திட்டம் வழி வகுக்கும்.

பணத்தை சரியாகப் பயன்படுத்துதல்!

இந்த பாலிசியில் கிடைக்கும் இன்னொரு முக்கியமான வசதி, காப்பீட்டுக்கான செலவு குறைவதாகும். இந்தவகை பாலிசியில், முதல் கவரேஜுக்கான தொகை வழங்கப்பட்டபின், தொடர்ந்து கட்டவேண்டிய ப்ரீமியம் குறைந்துவிடும். இரண்டு தனித்தனி பாலிசிக்கான செலவைவிட கூட்டு பாலிசியில் செலவு குறைவு.

எளிதில் மாற்றிக்கொள்ளும் தன்மை!

கூட்டுக் காப்பீட்டில் முக்கியமான அம்சம் இந்த பாலிசியை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும் என்பது. இந்தவகை பாலிசியில் ஒருவர் டேர்ம் ப்ளான் எடுத்துவிட்டு, பின்னர் அவருடைய மனைவி/கணவனைச் சேர்த்துக் கொண்டு கூட்டு பாலிசியாக மாற்றிக்கொள்ள முடியும். ஒருவேளை கூட்டுக் காப்பீட்டிலிருந்து விவாகரத்து போன்ற காரணங்களால் ஒருவரை விலக்க வேண்டியிருக்கிறது என்றால், அதற்கும் இந்தக் காப்பீடு வழி செய்கிறது.

பாதுகாப்பு!

இந்த இன்ஷூரன்ஸ் திட்டம் குடும்பத்துக்கு  அதிகமான பாதுகாப்பைத் தருகிறது. பாலிசிதாரர் இறந்தவுடன் குடும்பத்துக்கான உடனடி பணப்பலன்களை அளிக்கிறது. அதேசமயம், இரண்டு முதிர்வுகால பாலிசி என்கிறபோது குழந்தைகளின் எதிர்காலத் தேவைக்கு பயன்படுவ தாகவும் இருக்கும். பொருளாதார ரீதியாக குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளையும் இந்த பாலிசி கவனத்தில்கொள்கிறது.

கடன்களுக்கு ஈடாக...

கடன்களுக்கு ஈடாக இந்த பாலிசியைப் பயன்படுத்த முடியும் என்பதுவும், இந்த பாலிசி மூலம் கிடைக்கும் இன்னொரு முக்கியமான சாதகம்.  எதிர்பாராத இறப்பு காரணமாக குடும்பம் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் நேரத்தில், கிடைக்கும் காப்பீட்டுத் தொகை நிலுவையில் இருக்கும் கடனைத் தீர்ப்பதற்கு பயன்படும்.

தொழிலில் இருக்கும் கூட்டாளிகளுக்கும் இந்தவகை பாலிசி, தொழில் நஷ்டங்களைத் தவிர்ப்பதற்கு உதவியாக இருக்கும்.

காப்பீடு குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்து வரும் இந்தக் காலத்தில் தனிநபர் காப்பீடு எடுப்பதைவிட, இந்தக் கூட்டுக் காப்பீடு எடுப்பது இரட்டை பாதுகாப்பை வழங்குகிறது. ஒருவரே பாலிசியை நிர்வகிப்பதைவிட, இரண்டு நபர்கள் பாலிசியை நிர்வகிக்கும் வாய்ப்பும் இதில் உள்ளது. எதிர்பாராத அசம்பாவிதங்களிலிருந்து குடும்பப் பொருளாதாரம் மோசமான நிலைக்குச் செல்வதை இந்தவகை கூட்டு பாலிசிகள் தடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கிறதா...?

உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கிறதா...?

சம்பளம் மற்றும் வருமானத்தில் செலவுகளை சுருக்கி பலர் பணத்தை மிச்சப்படுத்திவிடுகிறார்கள். ஆனால், அதனை சரியாக முதலீடு செய்வதில்தான் இருக்கிறது, புத்திசாலிதனம்.

நீங்கள் உழைத்து சம்பாதித்தது மூலம் உருவான உங்கள் சேமிப்பு பணம், உங்களுக்காக உழைக்க வேண்டும். அதனை வங்கி சேமிப்பு கணக்கு அல்லது உண்டியலில் போட்டு வைத்தால் அது பெருகாது. உங்கள் பணத்தை முதலீடு செய்யாமல் வைத்திருந்தால் அது, அதன் மதிப்பை இழந்துவிடும்.

உதாரணத்திற்கு, உங்களிடம் ரூ.1,000 இருக்கிறது. அதனை 10% வட்டியில் முதலீடு செய்தால் அடுத்த ஆண்டில் அது ரூ.1,100 ஆக பெருகி இருக்கும். அதனை முதலீடு செய்யவில்லை என்றால் ரூ.1,000 ஆகவே இருக்கும்.

ஆனால், அடுத்த ஆண்டில் பணவீக்க விகிதம் 7% அதிகரித்திருப்பதாக வைத்துக் கொண்டால், உங்களின் பணம் அதன் மதிப்பில் 7% குறைந்திருக்கும். இதுவே முதலீடு செய்திருந்தால், பணவீக்க விகிதத்தை சரிகட்டியிருந்தாலும் உங்களின் பணம் 3% மதிப்பு அதிகரித்திருக்கும்.

நம் பணம் நமக்காக உழைக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நிதி ஆலோசகர் சா.ராஜசேகரன் விளக்கும்போது, ''உங்களின் உழைப்புக்கு சம்பளம், ஊக்கத் தொகை (போனஸ்) கிடைக்கும். உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கும்போது, அதாவது பணத்தை சரியாக முதலீடு செய்திருக்கும்போது வட்டி, வருமானம், டிவிடெண்ட் போன்றவை கிடைக்கும்.

நம்முடைய பணம் நமக்காக உழைக்க வேண்டும். நம் முதலீடு உழைப்பதன் மூலமான பணத்தைக் கொண்டு, செலவுகளை பார்த்துக்கொள்ளும் போதுதான், நம்மால் நாம் ஆசைப்பட்ட வாழ்வை, கனவை, நனவாக்கிக்கொள்ள முடியும்.

உதாரணத்திற்கு, ஒருவர் கடந்த 15 ஆண்டுகளில் செய்த முதலீட்டில் கிடைத்த சொத்து, அடுத்த 5 ஆண்டில் அவர் உருவாக்கப் போகும் சொத்துக்கு சமம். உடனே 15 ஆண்டு உருவாகும் சொத்து, வெறும் 5 ஆண்டுகளில் கிடைக்கிறது என்று நினைக்கக்கூடாது. உண்மை என்ன என்றால் 15 ஆண்டுகளுக்கான பணத்திற்காக நீங்கள் வேலை செய்கிறீர்கள். அதற்கு பிறகு அந்தப் பணம் உங்களுக்காக வேலை செய்யும்" என்றார்.

மேலும், இதனை இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்வதென்றால், ''மாதத்துக்கு 16,320  வீதம் 15 வருடம் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், ஆண்டுக்கு சராசரியாக 14% வருமானம் கிடைத்தால் அந்த முதலீடு ரூ.1 கோடியாக அதிகரித்திருக்கும்.

இந்த 1 கோடி ரூபாயை எடுக்காமல் வைத்திருந்தால், ஆண்டுக்கு சராசரியாக 14% வருமானம் கொடுப்பதாக கணக்கிட்டால், அடுத்த ஐந்து வருடத்தில், இந்த சொத்தின் மதிப்பு மேலும் ரூ.1 கோடி அதிகரித்து, ரூ.2 கோடியாக உயர்ந்திருக்கும். கிட்டதட்ட ஆண்டுக்கு ரூ.20 லட்சம் அதிகரித்து இருக்கும்" என்றார்.

ஐந்து விஷயங்களைக் கடைப்பிடித்தால்... ஐம்பதில் ஓய்வுபெறலாம்!

ஐந்து விஷயங்களைக் கடைப்பிடித்தால்... ஐம்பதில் ஓய்வுபெறலாம்!



இன்றைய நிலையில் பெரும்பாலான வர்கள் 58 வயது வரை வேலை பார்க்க விரும்புவதில்லை. அதற்கு முன்பே பணியிலிருந்து ஓய்வுபெற்று, மீதமுள்ள காலத்தில் தங்களுக்குப் பிடித்தமாதிரி சேவை செய்ய அல்லது  நிம்மதியாக கழிக்க விரும்புகிறார்கள். இப்படி விரும்புகிறவர்களில் சிலர் மட்டுமே அதற்கான திட்டமிடலை செய்து தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். பலர் சரியான திட்டமிடல் இல்லாமல் ஆசைப் படுவதோடு நின்றுவிடுகிறார்கள். ஐம்பது வயதில் ஓய்வுபெற என்ன செய்ய வேண்டும், எந்தமாதிரியான திட்டமிடல் வேண்டும் என நிதி ஆலோசகர் யு.என்.சுபாஷிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

இளமையிலேயே திட்ட மிடுங்கள்!

''கல்வி பயில   வாழ்நாளின் பெரும் பகுதியை செலவு செய்யும் நாம், அடுத்ததாக வேலைக்குச் சென்று அல்லது தொழில் செய்து சம்பாதிப்பதிலேயே அதிக காலத்தைக் கழித்துவிடுகிறோம். இதற்கிடையில் கிடைக்கும் நேரத்தில் ஓய்வு, குடும்பத்தாருடன் கொண்டாட்டம், குதூகலம். ஆனால், நம் ஓய்வுக்காலத்துக்கு எந்த நிதியும் சேர்த்துவைக்காமல், பிற்பாடு கஷ்டப்படுகிறோம். பணி ஓய்வுக்கு முன்பாகவே ஓய்வுபெற விரும்புபவர்கள் செய்யவேண்டிய முதல் விஷயம்,  சம்பாதிக்க ஆரம்பிக்கும்போதே, அதாவது, இளம் வயதிலேயே ஓய்வுக் காலத்துக்கான சேமிப்பைத் தொடங்க வேண்டும். ஏனெனில் ஓய்வுக்காலம் என்பது நீண்டகாலம் என்பதால், அதற்கு தேவையான  முதலீட்டுக்கும் கால அவகாசம் கிடைக்கும். சிறு துளி பெருவெள்ளம் என்பதுபோல, சிறுக சிறுக சேமிக்கவும் ஏதுவாக இருக்கும்.



உதாரணத்துக்கு, 25 வயதுள்ள ஒருவர் 40,000 ரூபாய் சம்பாதிப்பதாகக் கொள்வோம். 20,000 ரூபாயை குடும்பச் செலவுக்காக எடுத்துக்கொண்டால், மீதி அவரிடம் சேமிப்புக்காக 20,000 ரூபாய் இருக்கும். இந்த 20,000 ரூபாயில் 43% தொகையை, அதாவது 8,500 ரூபாயைத் தனது 50வது வயதுவரை தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டை சம்பளம் உயரும்போது வருடா வருடம் 10% அதிகரித்து வர வேண்டும் என்பதும் கட்டாயம்.

ஏறக்குறைய 14% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி ஃபண்டு களில் 8,500 ரூபாயை இப்படி முதலீடு செய்தால், முதலீட்டு முதிர்வின்போது 4.31 கோடி ரூபாய் கிடைக்கும். இந்தத் தொகை மூலம் அன்றைக்குத் தேவைப்படும் மாதாந்திர செலவு 1.37 லட்சம் ரூபாயை எளிதாக ஈட்ட முடியும்.

அதே 3040 வயது வரை உள்ள ஒருவர் அன்று வரை ஓய்வுக்காலத்துக்கு முதலீடு எதுவும் இல்லாதபட்சத்தில் தனது சம்பாத்தியம் அதிகமாக இருந்தால் மட்டுமே முன்னதாகவே ஓய்வு பெறுவது குறித்து யோசிக்க வேண்டும். ஏனெனில், அன்றைய நிலையில் அவர் குடும்பச் செலவு போக மீதமிருக்கும் தொகையில் பெரும் பகுதியை ஓய்வுக்காலத்துக்காக முதலீடு செய்தாக வேண்டும்.

தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்!

கல் பலமானதா அல்லது தண்ணீர் பலமானதா என்று கேட்டால், எல்லோரின் பதிலும் கல் என்பதாகவே இருக்கும். ஆனால், அந்தப் பலம்வாய்ந்த கல்லின் மீதும் நீரானது விழுந்து கொண்டே இருந்தால், அந்தக் கல்லும் உடைந்துவிடும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதுபோலத்தான்

50 வயதில் ஓய்வுபெற நினைப்பவர்களும் ஆரம்பித்த முதலீட்டை தொடர்ந்து செய்துகொண்டே வரவேண்டும். இடையில் வரும் நிதி குறிக்கிட்டால் ஓய்வுக்கால முதலீட்டை நிறுத்துவது கூடாது.

சம்பாதிப்பவர்களுக்கு வருடத்துக்கு ஒருமுறை சம்பள உயர்வு என்பது கட்டாயம் இருக்கும். நம்மில் பலர்  ஒவ்வொரு வருடமும் சம்பளம் உயரும் போது செலவை அதிகப்படுத்துகிறோமே தவிர, சேமிப்பை அதிகரிப்பதில் கோட்டை விட்டுவிடுகிறோம்.  ஓய்வுக்கால சேமிப்பைப் பொறுத்தவரை, முதலீட்டில் ஒழுக்கமாக இருந்தே ஆக வேண்டும்.

சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்!

50 வயதில் ஓய்வை இலக்காகக் கொண்டவர்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம். சுற்றத்தாரைப் பார்த்து பந்தாவுக்காக வாழ்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. சிக்கனத்தைக் குழந்தைகளின் திருமணம் மற்றும் அவர்களின் கல்வியி லும்கூடக் காட்டுவது அவசியமே. ஏனெனில், குழந்தைகளின் கல்விக்கும், திருமணத்துக்கும் பிளான் பி என்கிற ஆப்ஷன் இருக்கிறது. அதாவது, கல்விக் கடன் மற்றும் சிக்கனமான திருமணம் போன்ற திட்டங்கள்.

ஆனால், ஒருவரின் ஓய்வுக்கால தேவைக்கு மாற்றாக வேறெந்த திட்டத்தையும் நம்மால் தீட்டிவிட முடியாது. ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்துக்காக அதிகமாகச் செலவு செய்துவிட்டு, ஓய்வுக்காலத்தில் அவர்களை நம்பி வாழ்க்கையை நடத்திக்கொள்ளலாம் என்று நினைப்பதே. இந்த இடத்தில், 'பெற்றுப் போட்ட பிரம்மாக்களே ஒன்று முதல் பத்து வயது வரை குழந்தைகளுக்கு நீங்கள் வேலைக்காரர்கள், பதினைந்து வயது வரை குழந்தைகள் உங்களுக்கு வேலைக்காரர்கள். பதினாறு முதல் பாகம் பிரிக்கும் வரை தோழர்கள். பிறகு தூரத்து உறவினர்கள்’ என்கிற வைரமுத்துவின் கவிதை வரிகளை ஞாபகப்படுத்துகிறேன்.



சரியான முதலீட்டுத் திட்டம்!

ஓய்வுக்காலத்துக்காக ஆர்.டி போட்டி ருக்கேன். எஃப்டில் பணம் சேர்க்கிறேன் என்பதெல்லாம் வேலைக்கு ஆகாது. இளம்வயதிலேயே ஓய்வுக்கால முதலீட்டை ஆரம்பித்துவிடுவதால், தாராளமாக  ரிஸ்க் எடுக்கலாம். அதனால் ஈக்விட்டி திட்டங்களைத் தேர்வு செய்வது உத்தமம். நாம் தேர்வு செய்யும் முதலீட்டுத் திட்டங்கள் சிறப்பாக அமைந்துவிட்டால், இலக்கை அடைவதும் எளிதாகிவிடும்.

கடன் இல்லாமல் பார்த்துக்கொள்க!

50 வயதில் ஓய்வுபெற நினைப்பதால், பெரும்பாலும் கடன் இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம். ஏனெனில் ஓய்வுக்குப்பிறகும் கடன் இருக்கும்படியானால் நிம்மதியான ஓய்வுக்காலத்தை இழந்து தவிக்கும் நிலையே உருவாகும். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் அவசரத் தேவை களுக்காகக் கடன் வாங்கிவிட்டேன் என்று சொல்வார்கள். அவசரத் தேவைக்கான நிதி ஒதுக்குதல் என்கிற திட்டமே இதுமாதிரியான இக்கட்டான சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்காகத்தான் என்பதை மறக்க வேண்டாம்' என்று முடித்தார் யு.என்.சுபாஷ்.

ஆக, மேலே சொன்ன ஐந்து விஷயங்களைக் கடைப்பிடிப்பவர்கள் நிச்சயமாக தங்களுடைய 50 வயதில் ஓய்வுக்காலத்தை நிச்சயமாக்கிக் கொள்ளலாம்.

புகைபிடித்தால் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கிடைக்குமா?

புகைபிடித்தால் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கிடைக்குமா?



புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி கிடைக்காது என நினைத்து பாலிசி எடுக்காமல் விட்டுவிடுகிறார்கள். இதனால் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது கஷ்டப்பட்டுச் சேமித்த பணத்தை  செலவு செய்யவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகிறார்கள்.

ஆனால், புகைபிடிப்பவர்களுக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தருகின்றன இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள். புகைபிடிப்பவர் களுக்கான ஹெல்த் இன்ஷூரன்ஸ் குறித்து விளக்கமாக எடுத்து சொன்னார் ஃபர்ஸ்ட் இன்ஷூரன்ஸ் வேர்ல்டு புரோக்கிங் நிறுவனத்தின் இயக்குநர் மேத்யூஸ் பிரபாகரன்.
''புகைபிடிப்பவரின் வயது, ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிக்கிறார், எவ்வளவு ஆண்டுகளாக இந்தப் பழக்கம் உள்ளது என்பதைப் பொறுத்துதான் பாலிசி எடுப்பவரின் ரிஸ்க் அளவிடப்படுகிறது. இதன் அடிப்படையில் கூடுதல் பிரீமியம் வசூலிக்கப்படும். ஆனால், ஒரு நாளைக்கு 40 சிகரெட்டுக்குமேல் பிடிப்பவர்களுக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசி தர மறுப்பதற்கான வாய்ப்புள்ளது.

புகைபிடிப்பவர்களுக்கான பிரீமியம் என்பது ஒவ்வொரு தனிநபருக்கும் வித்தியாசப்படும். ஏனெனில், தனிநபர் களின் மருத்துவ பரிசோதனை அறிக்கை யின் அடிப்படையில் பிரீமிய தொகை இருக்கும். அதாவது, புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கூடுதல் பிரீமியத்துடன்  இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசி தரும்.

புகைபிடிப்பவர்கள் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும்போது, அதில் உண்மையான தகவல்களைக் குறிப்பிடுவது அவசியம். குறிப்பாக, ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீர்கள், எவ்வளவு நேர இடைவெளியில் பிடிப்பீர்கள், எத்தனை ஆண்டுகளாக இந்தப் பழக்கம்இருக்கிறது என்பது போன்ற கேள்விகளுக்கு சரியான பதில் தருவது அவசியம்.
இதில் தவறான விவரங்களைத் தந்தால், க்ளைம் பெறும்போது சிக்கல் வர வாய்ப்புள்ளது.

உதாரணமாக, ஒருவர் பாலிசி எடுக்கும்போது 4 வருடங்களாகத்தான் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருப்பதாகக் குறிப்பிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், உண்மை யில் அவருக்கு அந்தப் பழக்கம் 10 ஆண்டுகளுக்கும் மேல் இருந்து, இந்த விவரம் சிகிச்சைக்குச் சேரும்போது, மருத்துவ அறிக்கையில் தெரியவந்தால் க்ளைம் கிடைக்காது.

இந்த நிலையில் இன்ஷூரன்ஸ் எடுத்தும் பயன் எதுவும் இல்லாமல் போய்விடும்'' என்றார்.
ஒருவர் புகைபிடிப்பது என்பது அவரது தனிப்பட்ட பழக்கம் சார்ந்த விஷயம்தான். இதை மறைக்காமல் உள்ளபடி எடுத்துச் சொல்லி, இன்ஷூரன்ஸ் பாலிசியைப் பெறுவதே புத்திசாலித்தனம்!
க்ளைம் தருவதில் நிறுவனங்களிடையே வேறுபாடு!

பொதுத்துறை ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை பொறுத்தவரையில், புகைபிடிப்பவர்களுக்கு என தனியாக கூடுதல் பிரீமியம் எதுவும் வசூலிப்பதில்லை. ஒருவருக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருக்கிறதா என்கிற தகவலை மட்டுமே கேட்டுக்கொள்கின்றன. ஆனால், தனியார் நிறுவனங்கள் புகைபிடிப்பவர்களுக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி வழங்கும்போது கூடுதல் பிரீமியம் வசூலிக்கின்றன. மேலும், புகைபிடிப்பதனால் சில வியாதிகள் வந்தாலும் அந்த வியாதிகளுக்கு பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் க்ளைம் தருகிறது. புகைபிடிப்பவர்களின் விஷயத்தில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இடையே ஏன் இந்த வேறுபாடு?

பாலிசி சரண்டர்! ஏன் எதற்கு?

பாலிசி சரண்டர்! ஏன் எதற்கு?




'வச்சு அழுவதைவிட வித்து எழுது’ என்பது வியாபார குடும்பங்களில் காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும் பழமொழி. இதற்கு என்ன அர்த்தம்?

தெரியாத்தனமாக, போனியாகாதச் சரக்கை வாங்கிவிட்டோம். அதை லாபத்திற்கு விற்க முடியவில்லை. என்றாவது ஒருநாள் அந்த சரக்கு நல்ல விலைக்குப் போகும் என்று கண்மூடித்தனமாக வைத்திருப்பதைவிட, அதை நஷ்டத்திற்கு விற்றுவிட்டு, அடுத்த வேலையைப் பார்ப்பதே புத்திசாலித்தனம்.

இந்த அணுகுமுறை நீங்கள் வாங்கிய நிலத்திற்கும், காருக்கும் மட்டுமல்ல, இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கும் பொருந்தும். நீங்கள் எடுத்திருக்கும் எல்லா இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் எடுத்துப் பாருங்கள்.

உங்களிடமுள்ள பாலிசிகள், உங்களுடைய எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இன்றைய நிலையில் உகந்ததாக இருக்கிறதா? அந்த பாலிசியில் முதலீடும் சேர்ந்திருந்தால், அந்த முதலீடு நல்ல வருமானத்தைத் தந்து கொண்டிருக்கிறதா? இந்த முதலீட்டிலிருந்து மியூச்சுவல் ஃபண்ட், பி.பி.எஃப். போன்ற மற்ற திட்டங்களுக்கு மாறினால், அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதா?

இந்த மூன்று கேள்விகளுக் கான பதிலை அடிப்படையாக வைத்தே நீங்கள் எடுத்திருக்கும் பாலிசிகளை தொடர்ந்து வைத்திருக்கலாமா? அல்லது சரண்டர் செய்யலாமா என முடிவு செய்யலாம்.

ஏன் சரண்டர் செய்ய வேண்டும்?



நாம் எடுத்த ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியை ஏன் சரண்டர் செய்கிறோம்? நம் தேவைக்கு ஏற்றமாதிரி அந்த பாலிசி இல்லாமல் இருப்பது, அதிகப்படியான பாலிசி கட்டணத்தால் நஷ்டம் ஏற்படுவது, குறைந்தளவு வருமானத்தை ஈட்டுவது போன்ற காரணங்களால்தான் பாலிசிகளை சரண்டர் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.
தெரிந்தோ, தெரியாமலோ நாம் எடுத்துவிட்ட இந்த பாலிசிகளை சரண்டர் செய்யும் முன்பு, ஐந்து முக்கியமான கேள்விகளை அவசியம் எழுப்பி, அதற்கான பதிலை கண்டாக வேண்டும். அந்த கேள்விகள் இதோ:

1. பாலிசியை இப்போது சரண்டர் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்?

2. சரண்டர் சார்ஜ் எவ்வளவு?

3. சில மாதங்கள் காத்திருந்தால் சரண்டர் சார்ஜ் குறை வதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

4. பாலிசியை சரண்டர் செய்யாமல் 'பெய்ட் அப் பாலிசி’யாக மாற்றினால் முதிர்வடையும் போது எவ்வளவு தொகை கிடைக்கும்?

5. இந்த பாலிசியை சரண்டர் செய்வதால், நமக்கு எந்த அளவு ஆயுள் காப்பீடு கவரேஜ் குறையும்? அதை சரிக்கட்ட தேவையான அளவு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கிறோமா?



இந்த கேள்விகளுக்கான பதிலை கண்டுபிடித்து, பாலிசியை சரண்டர் செய்வதே சரி என்று நீங்கள் முடிவு செய்தால், இதன் மூலம் கிடைக்கும் பணத்தை எதில் முதலீடு செய்யலாம்?

1. நீங்கள் சரண்டர் செய்த பாலிசி, யூலிப் திட்டமாக இருக்கும் பட்சத்தில் சரண்டர் தொகையை நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். அப்போதுதான் பங்குச் சந்தை சரிவால் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து (பங்குச் சந்தை ஏற்றமடையும் போது) மீள முடியும்.

2. பாரம்பரிய பாலிசியை (ஜிக்ஷீணீபீவீtவீஷீஸீணீறீ றிஷீறீவீநீஹ்) சரண்டர் செய்திருந்தால், அதை பி.பி.எஃப். போன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

3. வருமான வரிச் சேமிப்புக்காக எடுத்த பாலிசியை சரண்டர் செய்யும்போது, அந்த பாலிசிக்கு மாற்றாக உங்களுடைய வரிச் சேமிப்பு முதலீட்டை பி.பி.எஃப். அல்லது வரிச் சலுகை அளிக்கும் பங்குச் சந்தை சார்ந்த சேமிப்பு திட்டமான இ.எல்.எஸ்.எஸ். திட்டங்களில் முதலீட்டைத் தொடரலாம்.

சரண்டர் செய்ய வேண்டிய வேறு சில தருணங்கள்!

1. பணி ஓய்வுபெற்ற பிறகு உங்களுடைய டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை சரண்டர் செய்ய வேண்டும். ரிட்டையர்மென்ட்டுக்குப் பிறகு லைஃப் கவர் தேவையில்லை.



2. ஏற்கெனவே ஏஜென்ட் மூலமாக எடுத்த டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை, ஆன்லைன் டேர்ம் இன்ஷூரன்ஸில் வேறொரு பாலிசி எடுத்தபிறகு, தொகை எதுவும் கிடைக்காது என்றாலும் சரண்டர் செய்யலாம். காரணம், ஆன்லைன் டேர்ம் பாலிசிகள் ஏஜென்ட் மூலம் எடுக்கும் டேர்ம் பாலிசிகளின் பிரீமியத்தைவிட சுமார் 50% குறைவாக இருக்கும்.

3. நீங்கள் வாங்கி இருக்கும் கடனுக்கு இணையாக கவர் செய்ய டேர்ம் பாலிசி எடுத்திருந்தால், கடனை முன்கூட்டியே முடிக்கும்போது, அந்த டேர்ம் பாலிசியை சரண்டர் செய்யலாம்.

சரண்டர் செய்யும்போது நஷ்டம் ஏற்பட்டால் என்ன செய்வது என்று கேட்கிறீர்களா? இந்த கட்டுரையின் முதல் வரியை மீண்டும் படியுங்கள்.

காலாவதியான பாலிசி... எப்படி புதுப்பிக்கலாம்..?

காலாவதியான பாலிசி... எப்படி புதுப்பிக்கலாம்..?




தெரிந்தோ, தெரியாமலோ ஒரு சில மாதம் பிரீமியத்தைக் கட்டாமல் விட்டால்கூட இன்ஷூரன்ஸ் பாலிசி 'லேப்ஸ்’ ஆகிவிடுகிறது. இதுமாதிரி 'லேப்ஸ்’ ஆன பாலிசியை எப்படி புதுப்பித்துக்கொள்வது, அதில் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன

''பல சமயங்களில் பிரீமியம் கட்டும் கால அளவைத் தேர்வு செய்வது, பாலிசி 'லேப்ஸ்’ ஆவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது. அதாவது, நீங்கள் மாதா மாதம் பிரீமியம் கட்டும் முறையைத் தேர்ந்தெடுத்தால், திடீரென ஒரு மாதம் பிரீமியத்தைக் கட்டாவிட்டாலும் உங்கள் பாலிசி 'லேப்ஸ்’ ஆகிவிடும். காரணம், மாதா மாதம் பிரீமியம் கட்டும்போது நமக்குக் கிடைக்கும் கருணைக் காலம் வெறும் 15 நாட்கள் மட்டுமே. ஆனால், காலாண்டு, அரையாண்டு, ஓராண்டு காலத்தைத் தேர்வு செய்தால், இந்தச் சிக்கலில் இருந்து எளிதில் தம்பிக்கலாம். இதற்கான கருணைக் காலம் அதிகம் - பாலிசியை எப்படி புதுப்பிப்பது

''பாலிசிக்கான பணத்தை ஒன்றிரண்டு மாதம் கட்டவில்லை எனில், அபராதத்துடன் அந்த பிரீமியத்தைக் கட்டி பாலிசியைப் புதுப்பித்துக்கொள்ளலாம். ஆனால், ஆறு மாதத்திற்கு மேல் பிரீமியம் கட்டாமல் விட்டால், அந்த பாலிசி 'லேப்ஸ்’ ஆகிவிடும். இந்த பாலிசியைப் புதுப்பிக்கும்போது, நீங்கள்  நிறைய சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அதாவது, உடல்நலச் சான்று, உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் ஒரு சாட்சி கையெழுத்து வாங்கி தருவது போன்ற வற்றை செய்யவேண்டும். இதில் மருத்துவச் சான்று என்பது ஒரு விண்ணப்பமாக இருக்கும். இதை பாலிசிதாரர் பூர்த்தி செய்து, உரிய கிளையில் ஒப்படைக்கவேண்டும்'' என்றவர், பாலிசியைப் புதுப்பிக்கும்போது என்னென்ன சிக்கல் வரும், அதை எப்படி சமாளிப்பது


''பாலிசி எடுத்தபோது தந்த மருத்துவச் சான்றிதழுக்கும், பாலிசியைப் புதுப்பிக்கும்போது தரும் மருத்துவச் சான்றிதழுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், பாலிசிதாரரை நேரில் அழைத்து, பல கேள்விகளைக் கேட்கவும், மீண்டும் பரிசோதனை செய்து வரும்படி சொல்லவும் வாய்ப்பிருக்கிறது. சில சமயங்களில் பாலிசியையே ரத்து செய்யவும் வாய்ப்பிருக்கிறது.

உதாரணமாக, பாலிசி எடுக்கும் போது நீங்கள் தந்த மருத்துவச் சான்றிதழில் உங்களது உயரம் 160 செ.மீ என்று தந்துவிட்டு, பாலிசியைப் புதுப்பிக்கும்போது 165 செ.மீ. என்று தந்தால், இன்ஷூரன்ஸ் நிறுவனம் உங்களை நேரில் அழைத்து, மீண்டும் ஒரு மருத்துவப் பரிசோதனை செய்துவரச் சொல்லும்.

ஒரு பாலிசியை எடுத்து ஐந்து வருடம் தொடர்ந்து பிரீமியம் கட்டியபிறகு தவிர்க்க முடியாதச் சூழ்நிலையில் அந்த பாலிசி 'லேப்ஸ்’ ஆனால் பெரிய அளவில் பிரச்னை இருக்காது. ஏனெனில், அந்தச் சமயத்தில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மருத்துவச் சான்றிதழில் அதிக கட்டுப்பாடுகளையும் விதிக்காது. ஆனால், அதிக வயது, பாலிசியின் கவரேஜ் தொகை அடிப்படையில்தான் இந்தக் கட்டுப்பாடுகள் இருக்கும் என்பதை மறக்காதீர்கள்.

எந்த ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியையும் முடிந்தவரை 'லேப்ஸ்’ ஆகாமல் பார்த்துக்கொள்வது நல்லது. ஏனெனில், 'லேப்ஸ்’ ஆன பாலிசியைப் புதுப்பிக்கும்போது இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அபராதம் விதிக்கவும் செய்யும்.  எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த வருடத்திற்கான போனஸ் தொகையும் கிடைக்காது''பாலிசி 'லேப்ஸ்’ ஆகாமல் தடுக்க

* வருடத்தின் ஆரம்பத்திலேயே இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டும் தேதியை காலண்டரில் குறித்து வைக்கலாம்.

* பிரீமியம் கட்டும் தேதியை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி வைக்கலாம். அல்லது வங்கி மூலம் இ.சி.எஸ். கொடுக்கலாம்.

* முகவரியில் மாற்றம் இருந்தால் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரிவிப்பது நல்லது. அப்போதுதான் இன்ஷூரன்ஸ் நிறுவனம் அனுப்பும் கடிதங்கள் நமக்குக் கிடைக்கும்.

* வேலையின் காரணமாக வெளியூருக்கு மாற்றல் ஆகிச் செல்கிறவர்கள், முன்கூட்டியே பாலிசியை அந்த ஊரில் உள்ள கிளைக்கு மாற்றம் செய்துகொள்ளலாம்.''

இன்ஷூரன்ஸ் எடுப்பதே அசம்பாவிதம் நடக்கும்பட்சத்தில் குடும்பத்திற்கு நிதி ஆதாரம் ஏற்படுத்துவதற்குதான் என்பதால், பாலிசியை 'லேப்ஸ்’ ஆக விடாமல் தொடர்ந்து பிரீமியம் கட்டுங்கள்!

அவசியம் எடுக்க வேண்டிய ஐந்து பாலிசிகள் !

அவசியம் எடுக்க வேண்டிய ஐந்து பாலிசிகள் !

பரபரப்பாக இயங்கும் உலகமிது. இதில் யாருக்கு எப்போது எப்படி பிரச்னை வரும் என்று சொல்ல முடியாது. குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர்கள் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி மரணமடைந்தால் அந்தக் குடும்பத்தின் நிலை தலைகீழாக மாறிவிடும். அதாவது, உயிரிழப்பு அல்லது உடல்பாதிப்பினால் குடும்பத் தலைவர் மூலம் குடும்பத்திற்கு கிடைக்கும் வருமானம் தடைபடும். குடும்பத் தலைவர் ஏற்கெனவே கடன் வாங்கியிருந்தால் அதைத் திரும்பக் கட்டவேண்டிய கட்டாயம் அந்தக் குடும்பத்தினரின் மேல் விழுந்து, மேலும் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.
இப்படி ஒரே சமயத்தில் பணநெருக்கடியும், மனநெருக்கடியும் ஏற்பட்டு அந்தக் குடும்பத்தினரின் வாழ்க்கையே நரகமாக மாறிவிடும். எனவே, இதுபோன்ற சூழ்நிலையில் பிரச்னைகளுக்கு தீர்வாக அமைவது இன்ஷூரன்ஸ் ஒன்றாக மட்டுமே இருக்கும் என்பது அனைவராலும் மறுக்க முடியாத உண்மை.

எனவே, ஒவ்வொரு தனி மனிதனும் கட்டாயம் வைத்திருக்கவேண்டிய இன்ஷூரன்ஸ் பாலிசிகள் என்னென்ன? இவை எந்த வகையில் வாழ்க்கைக்கு உதவும்

லைஃப் இன்ஷூரன்ஸ்!

திருமணமானவர்கள் அவசியம் எடுக்கவேண்டிய பாலிசி இது. இதற்காக திருமணமாகாதவர்களுக்கு இந்த பாலிசி தேவையில்லை என்பதல்ல அர்த்தம். தனிநபரைச் சார்ந்து பெற்றோர் மற்றும் சகோதர, சகோதரிகள் இருந்தால் கட்டாயம் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வது அவசியம்.

லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியில் டேர்ம் பாலிசி, முழு ஆயுள் பாலிசி, எண்டோவ்மென்ட் பாலிசி, யூலிப் பாலிசி, சைல்டு ப்ளான் பாலிசி என பலவகைகள் உள்ளன. இதில் டேர்ம் இன்ஷூரன்ஸ்தான், குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் தரும் பாலிசியாக இருக்கும். இந்த டேர்ம் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, அசம்பாவிதம் ஏற்பட்டால் மட்டும்தான் இழப்பீடு கிடைக்கும். பாலிசி முடிவில் எந்த முதிர்வுத் தொகையும் பாலிசிதாரருக்குக் கிடைக்காது.

பிசினஸ் தந்திரங்கள் !

பிசினஸ் தந்திரங்கள் !


பேராசிரியர் ஸ்ரீராம், மகாபலிபுரத்துக்கு அருகில் இருக்கும் கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் செயல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். விழுப்புரத்தில் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு வரை படித்தார். அதன்பிறகு சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பொருளாதாரமும், பாம்பே பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ.யும். படித்தார். 83-89ம் ஆண்டு வரை ஒரு கன்சல்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அதன்பிறகு 2004-ம் ஆண்டு வரை எஸ்.பி.ஜெயின் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். 2004-ம் ஆண்டு முதல் கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரிகிறார். கடந்த இருபது வருடங்களாக ஸ்ட்ராடஜி துறை பேராசிரியராக இருக்கிறார். மாரிகோ, சன்பார்மா, அலெம்பிக், ஐ.டி.பி.ஐ. ஜோதி ஸ்ட்ரக்சர்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களுக்குத் திட்டங்களை வகுத்துத் தந்திருக்கிறார்.

 கம்பெனிகள் ஜெயித்த கதை!

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்கிறீர்கள். பஸ்ஸில் செல்வதா இல்லை டாக்சியில் செல்வதா என்பதை முடிவு செய்யவேண்டும். எத்தனை மணிக்கு செல்லவேண்டும் என்பதை முடிவு செய்யவேண்டும்.

மதியம் சாப்பிட்டுவிட்டு செல்லும்பட்சத்தில் சாப்பாட்டுக்கு பிரச்னை இல்லை, ஒருவேளை காலை 11 மணிக்கு செல்கிறீர்கள் என்றால் சாப்பாட்டுக்குத் தயார் செய்யவேண்டும்.

எதில் சென்றாலும் முதலில் துணிமணிகள் எடுத்து வைக்க வேண்டும்; குடும்பத்தோடு செல்லும்பட்சத்தில் பணம், குழந்தைகளுக்குத் தேவை யானவை என பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.



அதாவது, சென்னையில் இருந்து புதுச்சேரி என்கிற இடத்திற்கு செல்வதற்கே இத்தனை விஷயங்களை செய்யவேண்டி இருக்கிறது. வெற்றி என்கிற இலக்கை அடைய ஒரு நிறுவனம் எத்தனை விஷயங்களை செய்யவேண்டியிருக்கும். வெற்றி இலக்கை அடைவதற்கான விஷயங்களை முன்கூட்டியே திட்டமிடுவதுதான் ஸ்ட்ராடஜி.

‘stratos’ என்றால் கிரேக்க மொழியில் ராணுவம் என்று அர்த்தம். இந்த வார்த்தையில் இருந்துதான் 'ஸ்ட்ராடஜி’ என்ற வார்த்தை உருவானது. ஒரு போர் நடக்கிறது எனில், களத்துக்கு வீரர்களை அனுப்பவேண்டும். அவர்களுக்கு சாப்பாடு, மருந்துப் பொருட்களை அனுப்பவேண்டும். ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குச் செல்ல தற்காலிகப் பாலங்களை அமைக்க பொறியாளர்கள் வேண்டும்.  இப்படி பல வகையில் முன்தயாரிப்புகள் இருந்தால் மட்டுமே போரில் ஜெயிக்க முடியும். இந்த ஸ்ட்ராடஜியை போரில் மட்டுமல்ல, பிசினஸிலும் எப்படி பயன் படுத்தலாம் என்று யோசித்ததன் விளைவுதான், பிசினஸ் ஸ்ட்ராடஜி என்கிற துறையே பிறந்தது.

சரி, விஷயத்துக்கு வருவோம். சென்னையில் இருந்து நீங்கள் புதுச்சேரி போகிறீர்கள். நீங்கள் மட்டுமா போகிறீர்கள்? உங்களைப்போல இன்னும் பல ஆயிரம்பேர் போகிறார்கள். அவர்கள் உங்களுடைய போட்டியாளர்கள். உங்கள் இலக்குதான் உங்கள் போட்டியாளர்களுக்கும். அப்படியானால் அவர்கள் எப்படி யோசிப்பார்கள் என்பதையும் நீங்கள் கணிக்கவேண்டுமில்லையா? உங்கள் போட்டியாளர்களைவிட நீங்கள் புத்திசாலித்தனமாக திட்டங்களைத் தீட்டினால்தானே அவர்களைவிட முன்னதாக நீங்கள் உங்கள்  இலக்கை அடைய முடியும்?

கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் பஸ்ஸில் ஓர் இடமே இருக்கிறது. இந்த இடத்தை திருவான்மியூரில் பிடிக்கவேண்டும் என்றால், நீங்கள் முன்கூட்டி செல்வது முக்கியமல்ல, உங்கள் போட்டியாளர்களைவிடவும் முன்கூட்டியே செல்லவேண்டும்.

சரி, ஒரு வழியாக கஷ்டப்பட்டு சீட்டைப் பிடித்துவிட்டீர்கள். இனி அப்பாடா என்று உட்கார்ந்துவிட முடியுமா?

பஸ் திடீரென விபத்துக்குள்ளாகலாம்; சுனாமி வந்து, இ.சி.ஆர். முழுக்க வெள்ளத்தில் மிதக்கலாம். இப்படி என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அப்போது என்ன செய்வீர்கள்?

அதிலிருந்து தப்பிக்க ஏதாவது மரத்தில் ஏறி, இல்லை பாதுகாப்பான இடத்துக்கு செல்கிறீர்கள். இதன்மூலம் வழியில் வந்த ஒரு பிரச்னையை நீங்கள் சமாளிக்கிறீர்கள், அவ்வளவுதான். இலக்கை இன்னும் அடையவில்லை. இது ஒரு டாக்டீஸ் (tactics) தானே தவிர, ஸ்ட்ராடஜி (strategy) கிடையாது. ஒரு சிறிய 'மூவ்’ மூலமாக உங்களது ராஜாவைக் காப்பாற்றி இருக்கிறீர்கள், இன்னும் நீங்கள் checkmate நோக்கிச் செல்லவில்லை.

ஓர் இலக்கை அடைய பெரிய திட்டத்தையோ, கேம்பிளானையோ வைத்திருந்தால் மட்டும் வெற்றியை அடைந்துவிட முடியாது. அவ்வப்போது வரும் இடையூறுகளை சுக்குநூறாக்குவதற்கும் சாமர்த்தியம் வேண்டும். இல்லை எனில், ஒரு சிறிய பிரச்னைகூட உங்களது மொத்தத் திட்டத்தையும் தகர்த்துவிடும்.

எவ்வளவுதான் திட்டமிட்டாலும், இடையிடையே பிரச்னை வந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் நினைப்பது நினைத்த மாதிரியே எப்போதும் நடப்பதில்லை. இதற்கு போய் ஏன் திட்டமிட வேண்டும். வாழ்க்கையை, பிரச்னையை, பிசினஸை அதன் போக்கில், நடப்பது நடக்கட்டும் என்று எதிர்கொள்ளலாமே என்று நீங்கள் கேட்கலாம்.

இந்தக் கேள்விக்கான பதிலை அடுத்த வாரம் சொல்கிறேன்.

(வியூகம் அமைப்போம்)